சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 20

பிறரைக் கண்டித்துத் திருத்துவதால் உண்டாகும் நன்மைகள்.

1. கோபங் கொள்வதைவிடக் கண்டித்துப் புத்திமதி சொல்லுவதும், ஜெபத்தில் தன் பாவத்தை ஒப்புக் கொள்கிறவனைத் தடை செய்யாதிருப்பதும் எவ்வளவோ நல்ல காரியம்!

2. ஓர் அண்ணகனின் இச்சை இளங்கன்னிகையை விழுங்கி விடும். 

3. அதுபோலவே அநியாயத் தீர்ப்பை வன்முறையால் நிறைவேற்றுபவனும் இருக்கிறான்.

4. நீ கண்டிக்கப்படும்போது மனஸ்தாபங் காட்டுவது எவ்வளவோ நலமானது! ஏனெனில் அப்போது மனம் பொருந்திச் செய்யும் பாவத்திலிருந்து தப்பித்துக் கொள்வாய்.

5. ஞானியாகக் காணப்படுகிறவன் தன் மெளனத்தைக் காத்துக் கொள்கிறான்; பேச்சில் துணிச்சல் உள்ள மற்றொருவன் வெறுப்புக் குரியவன்.

6. என்ன சொல்வதென்று தெரியாததால் மவுனமாயிருப்பவன் உண்டு; தகுந்த காலம் அறிந்திருப்பதால் மவுனமாயிருக்கிறவனும் உண்டு.

7. ஞானமுள்ள மனிதன் வாய்ப்புக் கிடைக்கும் வரை மெளனமாயிருப்பான்; ஆனால் வாயாடியும் மூடனுமானவன் நேரத்தை மதிக்கவே மாட்டான்.

8. அனேக வார்த்தைகளைப் பயன் படுத்துகிறவன் தன் ஆத்துமத்தைக் காயப்படுத்துவான்; அநியாயமாய் அதிகாரத்தை அபகரித்துக் கொள் பவன் பகைக்கப்படுவான்.

9. ஒழுங்கற்ற மனிதன் தீமையான காரியங்களில் வெற்றி பெறுவான் ஆனால் அது தனக்கு நஷ்டமாக மாறுவதை அவன் காண்பான்.

10. பயனற்ற தானம் ஒன்றுண்டு, இரட்டை சம்பாவனையுள்ள தானமும் ஒன்றுண்டு.

11. மகிமையின் காரணமாகத் தாழ்த்தப்படுதல் ஒன்றுண்டு. தாழ்நிலையிலிருந்து தன் தலையை உயர்த்துகிறவனும் உண்டு. 

12. சிறிது விலை கொடுத்து அதிக மானவற்றை வாங்கி, அதை ஏழு மடங்காகத் திருப்பிச் செலுத்துபவன் உண்டு.

13. வார்த்தைகளில் ஞானமுள் ளவன் தன்னை நேசத்திற்குரியவன் ஆக்குவான்; ஆனால் மூடர்களின் வரப்பிரசாதங்கள் வெளியே ஊற்றப் பட்டு வீணாகும்.

14. புத்தியற்றவனுடைய தானம் உனக்கு நன்மை செய்யாது; ஏனெனில், அவனுடைய கண்கள் ஏழு மடங்கானவை.

15. கொஞ்சமாயக் கொடுப்பான், அதிகமாய்ச் சொல்லிக்காட்டுவான்; அவன் வாய்திறப்பதே நெருப்பு மூட்டுவதாகின்றது.

16. ஒருவன் இன்று கடன் கொடுத்துவிட்டு நாளை திருப்பிக் கேட்கிறான்: இத்தகைய மனிதன் வெறுப்புக்குரியவன்.

17. மூடன் ஒரு நண்பனையும் கொண்டிருக்க மாட்டான்; அவனுடைய நற்செயல்களுக்கு யாரும் நன்றி சொல்ல மாட்டார்கள்.

18. ஏனெனில் அவன் அப்பத்தை உண்பவர்கள் பொய்யான நாவுள்ள வர்கள்; எவ்வளவு அடிக்கடி, எவ்வளவு அதிகமானவர்கள் அவனை நிந்தித்து நகைக்கிறார்கள்! 

19. ஏனெனில், தான் கொண்டிருக்க வேண்டியதைச் சரியான புத்தியோடு அவன் பகிர்ந்து கொடுப்பதில்லை; அதே விதமாக, தான் கொண்டிருக்கக் கூடாததையும் அவன் பகிர்ந்தளிப் பதில்லை.

20. அபத்த நாவினால் வாய்தவறிப் பேசுவது, மேடான தரையில் விழு வதைப் போன்றது, அப்படியே, தீயவனின் வீழ்ச்சியும் வேகமாக வரும்.

21. வரப்பிரசாதமில்லாத மனிதன் வீணா கட்டுக்கதையைப் போன் றவன்; அது ஞானமற்றவர்களின் வாயில் எப்போதும் இருக்கும்.

22. மூடனுடைய வாயிலிருந்து வரும் உவமை புறக்கணிக்கப்படும்; ஏனெனில், காலமறிந்து அவன் அதைச் சொல்வதில்லை.

23. வாய்ப்பில்லாததால் பாவம் செய்யாதபடி தடுக்கப்படுகிறவன் உண்டு. இளைப்பாறும்போது, அவன் மனவுறுத்தலுக்கு ஆளாவான்.

24. வெட்கத்தின் வழியாகத் தன் ஆத்துமத்தை இழக்கிறவன் உண்டு; ஞானமற்ற மனிதனின் ஆலோசனை யால் அவன் அதை அழிப்பான். அந்த மனிதன் மீதுள்ள மரியாதையால் அவன் தன்னைத்தானே அழித்துக் கொள்வான்.

25. மறுத்துச் சொல்ல வெட்கப் பட்டுத் தன் நண்பனுக்கு வாக்களிக் கிறவன் உண்டு. அதை நிறைவேற்ற முடியாததால், காரணமேயின்றி இவன் அவனைத் தன் எதிரியாக்கிக் கொள்கிறான்.

26. பொய் என்பது மனிதனிலுள்ள அசுத்தமான சதியாகும். என்றாலும் ஒழுங்கற்ற மனிதர்களின் வாயில் அது எப்போதும் இருக்கும்.

27. எப்போதும் பொய் சொல் பவனை விடத் திருடனே மேல், ஆனால் இருவரும் அழிவைச் சுதந் தரித்துக்கொள்வார்கள்.

28. பொய்யரின் நடத்தை மதிக்கப் படத் தகுதியற்றதாயிருக்கிறது; அவர்களுடைய வெட்கம் எப்போ தும்  அவர்களோடு இருக்கிறது.

29. ஞானமுள்ளவன் தன் வார்த்தை களால் முன்னேறுவான்; விவேக முள்ளவன் பெரியோருக்குப் பிரியப் படுவான்.

30. தன் நிலத்தை உழுகிறவன் தானியத்தை உயரமாய்க் குவித்து வைப்பான்; நீதியை நிறைவேற்று கிறவன் உயர்த்தப்படுவான்; பெரியோருக்குப் பிரியப்படுகிறவன் அக்கிரமத்திலிருந்து தப்புவான்.

31. இலஞ்சங்களும் பரிசுகளும் நீதிபதிகளின் கண்களைக் குருடாக்கு கின்றன; அவர்களால் திருத்த முடியாத படி, அது அவர்களை ஊமையாக்கி விடும்.

32. மறைக்கப்பட்ட ஞானம், காணப்படாத பொக்கிஷம்:: இவை இரண்டாலும் வரும் பயனென்ன?

33. தன் ஞானத்தை மறைக்கிற வனை விட தன் மூடத்தனத்தை மறைக்கிறவன் மேலானவன்.