அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 20

ஆக்காபின் வெற்றிகள்.

1.  சீரியாவின் இராசாவாகிய பெனா தாத் தனது எல்லாச் சேனைகளையும், குதிரைகளையும், இரதங்களையும், முப்பத்திரண்டு இராசாக்களையுந் தன் னோடு கூட்டிக்கொண்டு யுத்தம் புரியச் சமாரியாவுக்குப் போய் அதை முற்றிக்கை போட்டான்.

2. அப்பொழுது அவன் நகரத்திற் குள்ளிருந்த இஸ்றாயேலின் இராசா வாகிய ஆக்காபிடத்தில் ஸ்தானாதிபதி களை அனுப்பி: 

3. உன்னுடைய வெள்ளியும், உன் னுடைய பொன்னும் என்னுடையது; உன்னுடைய ஸ்திரீகளும், உன்னுடைய குமாரரில் சமர்த்தராயிருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று பெனாதாத் சொல்லுகிறானென்று அவனுக்குச் சொல் லச் சொன்னான்.

4. இஸ்றாயேலின் இராசா அதற்குப் பிரத்தியுத்தாரமாக: இராசாவாகிய என் னாண்டவனே, உம்முடைய வார்த்தை யின்படியே நானும் எனக்குண்டான யாவும் உம்முடையவைகள் தான் என்று சொல்லியனுப்பினான்.

5. அந்த ஸ்தானாதிபதிகள் திரும்ப வும் வந்து: உம்மிடத்தில் எங்களை அனுப்பின பெனாதாத் சொல்லுகிறது என்னவென்றால்: உன் வெள்ளியையும் பொன்னையும் உன் ஸ்திரீகளையும், உன் குமாரர்களையும் நீ எனக்குக் கொடுக்க வேண்டும்.

6. ஆகையால் நாளை இநநேரத்தில் என் ஊழியரை உன்னிடம் அனுப்பு வேன்; அவர்கள் உன் வீட்டையும், உன் ஊழியரின் வீடுகளையுஞ் சோதித்து அவர்கள் தங்களுக்குப் பிரியமானவைகள் எல்லாவற்றையுங் கைப்பற்றிக்கொண்டு போவார்கள் என்றார் என்று சொன் னார்கள்.

7. அப்போது இஸ்றாயேலின் இராசா தேசத்தின் மூப்பரை எல்லாம் அழைப்பித்து: இவன் நமக்குச் சதிவினை தேடுகிற விதத்தைக் கவனித்துப் பாருங் கள்; அவன் என் ஸ்திரீகளையும், என் குமாரர்களையும், என் வெள்ளியையும், என் பொன்னையுங் கேட்டான்; அதற்கு நான் தடை ஒன்றுஞ் சொல்லவில்லையே என்றான்.

8. அப்பொழுது சகல மூப்பருஞ் சகல ஜனங்களும் அவனை நோக்கி: நீர் அவனுக்குச் செவிகொடுக்கவும் அவன் கேட்டவைகளுக்கு உத்தரவு தரவும் வேண்டாம் என்றார்கள்.

9. ஆனதுபற்றி ஆக்காப் பெனாதாத் தின் ஸ்தானாபதிகளை நோக்கி: நீஙக்ள் இராசாவாகிய என் ஆண்டவனுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீர் முதல் விசையில் உமதடியானாகிய எனக்குச் சொல்லி அனுப்பிக் கேட்ட யாவையும் நான் செய்வேன்; இந்த விசையிலே நீர் கேட்கிற காரியத்தையோ நான் செய்யக் கூடாதென்று சொல்லுங் கள் என்றான்.

10. ஸ்தானாபதிகள் திரும்பி வந்து இந்த மறுமொழியை பெனாதாத்துக்குச் சொல்லவே இவன் மறுபடியும் அவர் களை ஆக்காபிடத்திற்கனுப்பி: சமாரி யாவின் இடிசலானது என்னைப் பின்சென்று வருகிற எல்லா ஜனங்க ளுடைய உள்ளங்கையில் அடங்காமற் போகுமாகில் தேவர்கள் என்னை இப்படியும் அப்படியுங் கண்டிக்கக் கட வாராகவெனச் சொல்லச் சொன்னான்.

11. அதற்கு இஸ்றாயேலின் இராசா மறுமொழியாக: ஆயுதங்களைத் தரிக்கும் போது பெருமை பாராட்டுவது நன்றன்று; தரித்துக் கழற்றியானபோதே பெருமை பாராட்டுகிறது நன்றே என்று உங்கள் எஜமானுக்குச் சொல்லுங்களென் றான்.

12. இம்மறுமொழி வந்து சேர்ந்த நேரத்திலே பெனாதாத் மற்றுமுள்ள இராசாக்களோடு தன் கூடாரத்தில் குடித்துக் கொண்டிருந்தான்.  இந்த வார்த்தையைக் கேட்டு அவன் தன் ஊழியர்களை நோக்கி: பட்டணத்தைச் சூழ்ந்து நெருக்குங்கள் என, அவர்கள் அப்படியே செய்தார்கள்.

13. அப்பொழுது ஒரு தீர்க்கத்தரிசி இஸ்றாயேலின் இராசாவாகிய ஆக்கா பிடம் வந்து: கர்த்தர் சொல்லுகிறதாவது: அந்த ஏராளமான ஜனக்கூட்டத்தை யெல்லாங் கண்டாயன்றோ?  இதோ நாமே உன் கர்த்தரென்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன் கையில் ஒப் படைப்போம் என்பதாம் என்றான்.

14. ஆக்காப் அவனைப் பார்த்து: யாரைக் கொண்டு அது நடத்தப்படு மென்று கேட்டதற்கு அவன்: மாகாண அதிபதிகளின் சேவகரைக் கொண்டு என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றான்.  மறுபடியும் ஆக்காப்: யுத்தத்தை ஆர் துவக்கவேண்டுமென்று வினவ, அவன் நீதான் என்றான். 

15. ஆக்காப் மாகாண அதிபதிகளின் சேவகர்களை எண்ணிக்கைப்  பார்க்க,அவர்களில் இருநூற்று முப்பத்திரண்டு பேரென்றும், பின்பு இஸ்றாயேல் புத்திர ராகிய சகல ஜனங்களின் எண்ணிக்கைப் பார்த்தான்;  அவர்கள் ஏழாயிரம் பேரென்றுங் கண்டான்.

16. இவர்கள் மத்தியான வேளை யிலே வெளியே புறப்பட்டார்கள். பெனாதாத்தும் அவனுக்கு உதவியாக வந்த மற்ற முப்பத்திரண்டு இராசாக் களுங் கூடாரங்களிலே குடித்து வெறித் துக் கொண்டிருந்தார்கள்.

17. மாகாண அதிபதிகளின் சேவகர் முன் அணியாகப் புறப்பட்டார்கள்.  பெனாதாத் அவர்கள் ஆரென்று விசாரிக்க அனுப்பினான்.  அனுப்பப்பட்ட மனுஷர் வந்து: அவர்கள் சமாரியாவிலிருந்து புறப் பட்ட மனுஷர்களாமென்று அவனுக்கு அறிவித்தார்கள்.

18. அப்போது அவன்: அவர்கள் சமாதானத்தைக் கேட்க வந்திருந்தாலுஞ் சரி, அல்லது அவர்கள் யுத்தத்துக்காக வந்திருந்தாலுஞ் சரி, அவர்களை உயி ரோடு பிடியுங்கள் என்றான். 

19. மாகாண அதிபதிகளின் சேவகர் கள் முன் அணியாகவும், மற்றுமுள்ள இராணுவங்கள் பின் அணியாகவும் பட்டணத்திலிருந்து நடந்துவந்த மாத் திரத்தில்,

20. அவரவர் தங்களுக்கு எதிர்ப்பட் டவர்களை வெட்டினார்கள்; சீரியர் முறிந்தோட இஸ்றாயேலின் படை வீரர் கள் அவர்களைத் துடர்ந்தார்கள்; சீரியா வின் இராசாவாகிய பெனாதாத் குதிரை மீதேறி தன்னோடிருந்த குதிரை வீரரோடு தப்பி ஓடிப்போனான்.

21. அந்நேரத்தில் இஸ்றாயேலின் இராசா புறப்பட்டுக் குதிரைகளையும், இரதங்களையும் முறிய அடித்துச் சீரியர்களில் அநேகரைச் சங்காரஞ் செய்தான்.

22. (பின்பு தீர்க்கத்தரிசி இஸ்றாயேல் இராவாவிடம் வந்து அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக் கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்ன தென்று கவனித்துப் பாரும்; ஏனென் றால் மறு வருஷத்திலே சீரியாவின் இராசா மறுபடியும் உமக்கு விரோதமாய் யுத்தம்பண்ண வருவானென்றான்.)

23. பின்னும் சீரியா இராசாவின் ஊழியக்காரர்கள் அவனைப் பார்த்து: அவர்களுடைய தேவர்கள் மலைத் தேவர்களானதினால் அவர்கள் நம்மை ஜெயித்தார்கள்; நாம் அவர்களோடு சம பூமியில் போர் புரிவது உத்தமம்; அப் போது நாம் அவர்களை ஜெயிப்போ மென்றார்கள்.

24. அதற்காக நீர் செய்யவேண்டியது என்னவென்றால்: இந்த இராசாக்கள் ஒவ்வொருவரையும் மாற்றி அவர்களுக் குப் பதிலாகச் சேனாதிபதிகளை ஏற் படுத்தி,

25. நாம் இழந்துபோனவர்களுக்குப் பதிலாய் அத்தனை வீரர்களையும், அத் தனைக் குதிரைகளையும், அத்தனை இரதங்களையுஞ் சேர்த்து இராணுவம் முன்போலப் பலமாயிருக்கச் செய்யும். அப்போது நாம் சம பூமியில் அவர்க ளோடு யுத்தஞ் செய்து நிச்சயமாய் அவர்களை ஜெயிப்போமென்றார்கள்;  அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தான்.

26. மறு வருஷத்திலே பெனாதாத் சீரியரை அணிவகுத்துப் பார்த்து, இஸ்றா யேலோடு யுத்தம் பண்ண ஆப்பேக்குக்கு வந்தான்.

27. இஸ்றாயேல் புத்திரருந் தங்கள் படைகளை அணிவகுத்துப் பார்த்து: போஜனத்துக்கு வேண்டியவைகளை எடுத்துக்கொண்டு சீரியருக்கு விரோத மாய்த் தாங்களும் புறப்பட்டு அவர் களுக்கு எதிரே பாளையம் இறங்கினார் கள்.  இவர்கள் இரண்டு சிறிய வெள் ளாட்டு மந்தை போல் காணப்படச் சீரியரோவென்றால் தேச முழுமையும் நிரம்பினவர்களாயிருந்தார்கள்.

28. (அப்போது தேவ மனுஷன் ஒருவன் வந்து இஸ்றாயேலின் இராசா வைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தை யைக் கேளும்; கர்த்தர் பள்ளத்தாக்கு களின் தேவனாயிராமல் மலைகளின் தேவனாயிருக்கிறாரென்று சீரியர் சொல் லியிருக்கிறபடியால் நாம் இந்த ஏராள மான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில் ஒப்படைப்போம்; அதினால் நாமே தெய்வமென்று நீங்கள் அறிவீர்கள் என்றாரென்றான்.)

29. ஏழுநாளளவும் இரு படைகளும் முகமுகமாக பாளையம் வகுத்து நின்றார் கள்.  ஏழாவது நாளில் யுத்தந் துவக்க இஸ்றாயேல் புத்திரர் இந்த ஒரே நாளிலே சீரியர் காலாட்படையில் இலட்சம் பேரைச் சங்கரித்தார்கள்.

30. மீதியானவர்கள் அபேக் பட்ட ணத்துக்குள் ஓடிப் போனார்கள்; அங்கே மீதியாயிருந்த இருபத்தேழாயிரம் பேரின் மேல் ஓர் அலங்கம் இடிந்து விழுந்தது; பெனாதாத்தும் ஓட்டம் பிடித்துப் பட்டணஞ் சென்று ஒரு அறையில் நுழைந்து ஒதுக்கிடத்தில் பதுங்கிக் கொண்டான்.

31. அப்போது அவன் ஊழியக்காரர்  வந்து அவனை நோக்கி: இஸ்றாயேல் வமிசத்து இராசாக்கள் தயவு தாட்சணி யம் உள்ளவர்களென்று கேள்விப்பட் டிருக்கிறோம்; நாம் கோணிகளை வஸ் திரமாகத் தொடுத்து கயறுகளைக் கழுத் திலே சுற்றிக் கொண்டு இஸ்றாயேலின் இராசாக்களிடத்தில் போவோம்; ஒரு வேளை நம்மை உயிர் பிழைக்க வைப் பார் என்று சொல்லி,

32. அவ்விதமே கோணிகளைத் தங் கள் அரைகளில் தொடுத்துக் கழுத்தில் கயிறுகளைச் சுற்றிக் கொண்டு இஸ்றா யேல் இராசாவினிடம் வந்து: உமது அடியானாகிய பெனாதாத் உம்மை தன்னை உயிரோடிருக்கத் தயவுபண்ணு மென்கிறார் என்றார்கள்.  அதற்கவன்: இன்னும் அவன் உயிரோடிருக்கிற தானால் அவன் எனக்குச் சகோதரனென் றான்.

33. சீரிர் இதுவே சமயோச்சிதமென்ற எண்ணி அவன் வாக்கை அனுசரித்து, (இஸ்றாயேலின் அரசனே) உமது சகோ தரனாகிய பெனாதாத் உயிரோடிருக் கிறாரென்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய் அவரை அழைத்துக் கொண்டு வாருங்கள் என்றான்.  பெனா தாத் ஆக்காபைக் காணப் புறப்பட்டு வரவே ஆக்காப் அவனைத் தன் இரதத் தில் ஏற்றுவித்தான்.

34. அப்போது பெனாதாத் அவனைப் பார்த்து; என் தகப்பன் உமது தகப்ப னிடமிருந்து பிடித்த பட்டணங்களை நான் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; என் தகப்பன் சமாரியாவிலே செய்தது போல் நீரும் தாமாஸ்குவிலே விசாலமான பொதுவிடத்தை ஏற்படுத்திக் கொள் ளும்; நீரும் நானும் உடன்படிக்கை பண்ணின பின்பு நான் விடைபெற்றுப் போவேன் என்றான்.  அப்படியே ஆக்காப் அவனோடு உடன்படிக்கை செய்து கொண்டு அவனை அனுப்பி விட்டான்.

35. அப்பொழுது தீர்க்கத்தரிசிகளின் புத்திரரில் ஒருவன் கர்த்தருடைய நாமத் தினாலே தன்னொரு தோழனை நோக்கி: நீ என்னை அடியென்றான்.  அதற்கவன்: அடிக்கமாட்டேனென்றான்.

36. அப்போது அவன் இவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமற் போனபடியால், நீ என்னைவிட்டுப் புறப்பட்டுப் போன வுடனே ஒரு சிங்கம் உன்னைக் கொல் லும் என்றான்.  அப்படியே இவன் அவனை விட்டுக் கொஞ்சம் விலகிப் போனவுடனே ஒரு சிங்கம் அவனைக் கண்டு கொன்றுபோட்டது.

37. அதின்பிறகு அவன் வேறொரு வனைக் கண்டு: நீ என்னை அடியென் றான்; அந்த மனுஷன் அவ்விதமே அவனைக் காயம்பட அடித்தான்.

38. அப்பொழுது அந்தத் தீர்க்கத் தரிசி அப்புறம் போய் (வேறொருவ னாய்த் தோன்றும்படி) தன் தலையிலும் முகத்திலுந் தானே சாம்பலை வாரிப் போட்டுக் கொண்டு வேஷமாறினவ னாய் வழியிலே இராசாவுக்காகக் காத் திருந்தான்.

39. இராசா அவ்வழியாய் வந்து அப்பால் போனபோது இவன் இராசா வைப் பார்த்துக் கூப்பிட்டு: உமதடியான் சத்துராதிகளோடு யுத்தம் பண்ண நெருங் கினபோது அவர்களில் ஒருவன் விலகி யோட வேறொருவன் அவனைப் பிடித்து என்னிடங் கொண்டுவந்து: இந்த மனுஷ னைப் பத்திரம்பண்ணு.  இவன் தப்பிப் போனால் இவன் பிராணனுக்கு உன் பிராணன் ஈடாகும்; அல்லது ஒரு தலேந்து வெள்ளி நீ கொடுக்கவேண்டும் என்றான்.

40. ஆனாலும் உமதடியான் திகில் கொண்டு இங்குமங்குந் திரும்பிப் பார்த் துக்கொண்டிருக்கும்போது திடீனெ அம் மனுஷன் மறைந்து போனான் என்றான்.

41. உடனே அவன் தன் முகத்தி லிருந்த சாம்பலைத் துடைக்கவே இஸ்றாயேலின் இராசா அவனைத் தீர்க்கத்தரிசிகளில் ஒருவனென்று அறிந்து கொண்டான்.

42. அப்போது தீர்க்கத்தரிசி இரா சாவை நோக்கி: சாவுக்குப் பாத்திரமா யிருந்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியால் உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத் துக்கு ஈடாகவும் இருக்குமெனக் கர்த்தர் திருவுளம்பற்றினாரென்றான்.

43. இஸ்றாயேலின் இராசா இதை ஒரு பொருளாயெண்ணாமல் தன் வீட்டுக்குப் போகப் புறப்பட்டுக் கோபாவேசங் கொண்டவனாய்ச் சமாரி யாவில் வந்துசேர்ந்தான்.