இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உபாகமம் - அதிகாரம் 20

யுத்தத்திற்கு ஜனங்கள் போகும்படி ஆசாரியர் சொல்ல வேண்டிய புத்தி-பட்டணங்களின் முற்றுகை தருணத்தில் அனுசரிக்க வேண்டிய பிரமாணம்-கானானியர்களைக் குறித்து மோயீசன் கொடுத்த கட்டளை.

1. உன் சத்துருக்களுக் கெதிராக நீ யுத்தத்திற்குப் போகும்போது அவர்களுடைய குதிரைகளையும், இரதங்களையும் உன்னிலும் பெரிய கூட்டமாகிய போர்வீரர்களைக் கண்டாலும் அவர்களுக்குப் பயப்படாதே. ஏனென்றால் உன்னைஎஜிப்த்து தேசத்தினின்று புறப்படப் பண்ணின உன் தேவனாகிய கர்த்தரே உன் பாரிசமாயிருக்கிறார்.

2. பின்னும் யுத்தம் ஆரம்பிக்கிறதற்கு முன் குருவானவர் படை முகத்தில் வந்து நின்று ஜனங்களைப் பார்த்து:

3. இஸ்றாயேலியரே கேளுங்கள்! இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தம் பண்ண இருக்கிறீர்களே. உங்கள் இருதயஞ் சோரவும் வேண்டாம். அவர்களைப் பார்த்து நீங்கள் பயப்படவும், முதுகு காட்டவும், மனங் கலங்கவும் வேண்டாம்.

4. ஏனெனில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் நடுவிலிருக்கிறார். அவரே உங்களை ஆபத்திலிருந்து இரட்சிக்கும்படி உங்களோடு உங்கள் பாரிசத்தில் போராடுவார் என்பான்.

5. அன்றியும் அதிபதிகள் தங்கள் தங்கள் படைமுகத்திலே நின்று உரத்த சப்தமாய்ப் பேசிப் போர் வீரர்களை நோக்கி: புது வீட்டைக் கட்டி அதைப் பிரதிஷ்டை பண்ணாதவன் எவனோ அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகக் கடவான். ஏனெனில் அவன் போர்க்களத்திலே விழுந்து செத்தால் வேறொருவன் அவன் வீட்டைப் பிரதிஷ்டை செய்ய வேண்டியதாகும்.

6. திராட்சத் தோட்டத்தை நாட்டி அதின் பழங்களை யாரும் புசிக்கத் தக்கதாகச் செய்ய வேண்டியதை இன்னும் செய்யாதவன் எவனோ, அவன் ஒருவேளை போர்க்களத்தில் செத்தால் வேறொருவன் அவனுக்குப் பதிலாக வேலை செய்ய வேண்டியதாகுமே. (அதினிமித்தம் மேற்சொல்லிய தோட்டத்திற்கு உரியவன்)தன் வீட்டிற்குத் திரும்பிப் போகக் கடவான்.

7. ஒரு பெண்ணுக்குப் பரியங் கொடுத்து அவளை விவாகம்பண்ணாதவன் எவனோஅவன் யுத்தத்தில் செத்தால் வேறொருவன் அவளை விவாகம் பண்ண வேண்டியதாகுமே, (அதினிமித்தம்) அவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகக் கடவான்.

8.  இவை முதலியன சொல்லிய பிற்பாடு சேனாதிபதிகள் மீண்டும் ஜனங்களை நோக்கி: எவன் பயங்காளியும் திடனற்றவனுமாயிருக்கிறானோ அவன் தன் சகோதரர்களுடைய மனவூக்கம் சோர்ந்து போவதற்கு ஒருவேளை காரணமாயிருக்கலாமே; (அதினிமித்தம்) அவனும் வீட்டிற்குத் திரும்பிப் போகக் கடவான் என்று சொல்லக் கடவார்கள்.

9. சேனாதிபதிகள் ஜனங்களோடு பேசி முடிந்த பிற்பாடு அவர்கள் தங்கள் தங்கள் சேனைவீரர்களை யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவார்கள்.

10. நீ ஒரு பட்டணத்தின் மேல் யுத்தம் பண்ண நெருங்குவாயாகில் முதல் முதல் அந்தப் பட்டணத்தாருக்கு (ஆளனுப்பி) சமாதானங் கூற வேண்டும்.

11. அவர்கள் உடன்பட்டுத் தங்கள் வாசலைத் திறந்தார்களானால், அதிலுள்ள ஜனங்களெல்லாம் அபயம் பெறுவார்கள். ஆனால் உனக்குப் பகுதி கட்டுகிறவர்களாகி உனக்கு ஊழியஞ் செய்யக் கடவார்கள்.

12. அவர்கள் உன்னோடு சமாதானம் பண்ணச் சம்மதியாமல் உன்னோடு யுத்தம் பண்ண ஆரம்பித்தால் நீ அந்தப் பட்டணத்தை முற்றுகை போட்டு,

13. உன் தேவனாகிய கர்த்தர் அதை உனக்குக் கைவசமாக்கிய பின்பு அதிலுள்ள புருஷரெல்லோரையும் பட்டயக் கருக்கினாலே வெட்டி,

14. ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடு வைத்துப் பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டுக் கொள்ளைப் பொருளை உன் போர் வீரருக்குள்ளே பங்கிட்டு உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த சத்துருக்களுடைய ஆஸ்திகளை அனுபவிப்பாய்.

15. நீ சுதந்தரிக்க வேண்டிய பட்டணங்களாயிராமல் உனக்கு வெகுதூரத்திலிருக்கிற எல்லாப் பட்டணங்களுக்கும் அவ்விதமே செய்வாய்.

16. உனக்குச் சுதந்தரமாய்க் கொடுக்கப் படும் பட்டணங்ளிலேயோவெனில் ஒருவரையும் உயிரோடிருக்கவொட்டாமல்,

17. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்தபடியே ஏத்தையர், அமோறையர், கானானயர், பெறேசையர், ஏவையர், ஜெபுசேயர் என்னப் பட்ட அவர்களை யடங்கலுமே பட்டயக் கருக்கினால் வெட்டக் கடவாய்.

18. (இப்படிச் செய்ய வேண்டியதற்கு முகாந்தரமேதெனில்) அவர்களை உயிரோடிருக்க விட்டால் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து வந்த நானாவித அருவருப்பானவைகளை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பார்களாக்கும். அதினாலே நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய் குற்றவாளியாவீர்களே.

19. நீ ஒரு பட்டணத்தை நெடுநாளாய் முற்றிக்கை போட்டு அதைப் பிடிக்கும் பொருட்டுச் சுற்றிலும் கொத்தளங்களைக் கட்டிவர வேண்டியதிருக்கையில் நீ கோடரியைஓங்கிப் பழந்தரும் மரங்களை வெட்ட வேண்டாம். சுற்றுப் புறத்திலுள்ள நானா தரு விருட்சங்களைச் சேதப்படுத்தவும் வேண்டாம். அது மரமேயயாழிய வேறல்ல, அது உன் சத்துருக்களோடு சேர்ந்து உன்மேல் யுத்தத்துக்கு வராதல்லோ?

20. ஆனால் புசிக்கத்தக்க கனிதராத காட்டு மரங்களோ, அவைகள் பற்பல விதமாய் பிரயோசனமாயிருக்கக் கூடுமென்று காண்பாயாகில், நீ அவைகளை வெட்டி யுத்தத்திற்குதவும் ஆயுத யந்திரங்களைப் பண்ணி உனக்கு அடங்காமல் எதிராக நிற்கும் அந்தப் பட்டணம் பிடிபடுமட்டும் மேற்படி ஆயுத யந்திரங்களை உபயோகித்துக் கொள்ளக் கடவாய்.