சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 18

கடவுளுடைய மேன்மையும், மனிதனுடைய தாழ்மையும்.

1. நித்தியமாய்ச் சீவிப்பவர் சகலத்தையும் ஒன்றாக உண்டாக்கினார்; கடவுள் ஒருவரே சர்வ நீதியுள்ளவர்; வெல்லப்படாத அரசராக அவரே நித்தியத்துக்கும் நிலைத்திருக்கிறவர்.

2. அவருடைய சிருஷ்டிப்புகளை அறிக்கையிட வல்லவன் யார்?

3. அவருடைய மகிமையுள்ள செயல்களைத் தேடிக் கண்டுபிடிப்பவன் யார்?

4. அவருடைய மகத்துவத்தின் வல்லமைமையைச் எடுத்துரைப்பவன் யார்? அல்லது அவருடைய இரக்கத்தை அறிக்கையிட வல்லவன் யார்?

5. எதையும் குறைக்கவோ, கூட்டவோ முடியாது; கடவுளின் மகிமையுள்ள செயல்களைக் கண்டு பிடிப்பதும் இயலாத காரியம்.

6. மனிதன் தான் சகலமும் செய்து விட்டதாக நினைக்கும்போதுதான் செய்யத் துவக்குவான்; அவன் புறப்படும்போது, அனைத்தையும் இழந்த நிலையில் இருப்பான்.

7. மனிதன் என்னவாயிருக்கிறான்? அவனுடைய வரப்பிரசாதமென்ன? அவனால் உண்டாகும் நன்மை என்ன, அல்லது தீமை என்ன?

8. மனிதருடைய வாழ்நாட்களின் கணக்கு, மிஞ்சினால் நூறு வருஷம் தான்; நித்தியத்துக்கு முன்பாக இந்த ஒரு சில வருடங்கள் சமுத்திர நீரின் சிறு துளிபோலவும், ஒரு மணல் துகள் போலவும் இருக்கின்றன.

9. ஆகவே கடவுள் அவர்களிடம் பொறுமையாயிருக்கிறார்; அவர்கள் மேல் தம் இரக்கத்தைப் பொழி கிறார்.

10. அவர் அவர்களுடைய தீய இருதயத்தின் தகாத்துணிவைக் கண்டிருக்கிறார், தீயதாகிய அவர் களுடைய முடிவையும் அவர் அறிந் திருக்கிறார்.

11. ஆகவே அவர் அவர்கள் சார் பாகத் தம் இரக்கத்தை நிரப்பினார். நீதியின் வழியை அவர்களுக்குக் காட்டியிருக்கிறார்.

12. மனிதன் தன் அயலானுக்குத் தயவிரக்கம் காண்பிக்கிறான்; கடவுளின் இரக்கமோ மாம்சம் அனைத்தின் மீதும் இருக்கிறது.

13. இடையன் தன் மந்தைக்குச் செய்வதுபோல அவர் இரக்கங் காட்டு கிறார், கற்பிக்கிறார், திருத்துகிறார்.

14. தமது இரக்கத்தின் ஒழுங்கை ஏற்று அனுசரிப்பவன் மேலும், தமது தீர்மானங்களுக்கு உட்படத் துரிதப் படுகிறவன்மேலும் அவர் இரங்கு கிறார்.

15. என் மகனே! உன் நற்செயல் களைச் செய்யும்போது முறையிடாதே; எதையாவது கொடுக்கும்போது, ஒரு தீய வார்த்தையால் வேதனை தராதே.

16. பனித்துளி உஷ்ணத்தைக் குளிர்ச்சியாக்குவதில்லையா? அது போலவே நல்ல வார்த்தையும் தர்மத்தை விட மேலானது.

17. இதோ, தர்மத்தைவிட நல்ல வார்த்தை நல்லதல்லவா? ஆனால் அவ்விரண்டும் நீதிமானாக்கப்பட்ட ஒரு மனிதனிடம் இருக்கின்றன.

18. மூடன் கசப்பான விதத்தில் கடிந்து பேசுவான்: தீய விதமாகக் கற்பிக்கப்பட்டவனின் தர்மம் கண்களைச் சுட்டெரிக்கின்றது.

19. தீர்ப்பிடுமுன் நீதியை உனக்கு ஆயத்தம் செய்துகொள்; பேசுமுன் கற்றுக்கொள்.

20. வியாதிக்கு முன்பே மருந்தைப் பயன்படுத்து: தீர்ப்பிடுமுன் உன் னையே பரிசோதித்துப் பார்; அப்போது கடவுளின் கண்களில் இரக்கத்தைக் கண்டடைவாய்.

21. நீ வியாதியாயிருக்கத் தொடங்கு முன் உன்னைத் தாழ்த்து; வியாதியின் போது உன் உரையாடலைக் காண்பி.

22. எப்போதும் ஜெபிப்பதிலிருந்து எதுவும் உன்னைத் தடுக்காதிருக்கக் கடவது; மரணம்வரையிலும் நீதிமானாக்கப்படுவதில் அச்சமற்றவ னாக இரு; ஏனெனில் கடவுளின் சம்பாவனை என்றென்றைக்கும் தொடர்ந்திருக்கிறது.

23. ஜெபிக்குமுன் உன் ஆத்து மத்தை ஆயத்தப்படுத்து; கடவுளைச் சோதிக்கும் மனிதனாய் இராதே.

24. கடைசி நாளில் இருக்கப் போகிற கடுங்கோபத்தையும், அவர் தம் திருமுகத்தைத் திருப்பிக் கொள் ளப்போகிற பழிவாங்கும் காலத் தையும் நினைத்துக்கொள்.

25. அபரிமிதத்தின் காலத்தில் தரித்திரத்தையும், செல்வங்களின் நாளில் தரித்திரத்தின் தேவைகளையும் நினைத்துக்கொள்.

26. காலை முதல் மாலை வரையிலும் காலம் மாறிவரும்; இவையெல்லாம் தேவ சமுகத்தில் நடத்தப் படுகின்றன.

27. ஞானியான மனிதன் சகலத் திலும் பயந்து நடப்பான்; பாவ நாட் களில் சோம்பேறித்தனத்தைப் பற்றி எச்சரிக்கையாயிருப்பான்.

28. புத்தியுள்ள ஒவ்வொருவனும் ஞானத்தைக் கண்டுகொள்கிறான்; அதைக் கண்டுபிடிப்பவனை அவன் புகழ்கிறான்.

29. வார்த்தைகளில் நல்ல புத்தியுள்ளவர்களாக இருந்தவர்கள், தாங்களும் ஞானத்தோடு நடந்திருக் கிறார்கள்; அவர்கள் சத்தியத்தையும், நீதியையும் புரிந்துகொண்டு, நீதிமொழிகளையும், நியாயங்களையும் மழையாகப் பொழிந்திருக்கிறார்கள். 

30. உன் இச்சைகளைப் பின்செல்லாதே; மாறாக உன் சொந்த சித்தத்திலிருந்து திரும்பு.

31. உன் ஆத்துமத்தின் ஆசைகளை நீ அதற்குத் தருகிறாய் என்றால், அது உன்னை உன் எதிரிகளின் சந்தோஷ மாக ஆக்கும்.

32. கலகத் தன்மையுள்ள கூட்டங்களில் இன்பம் காணாதே; அவை எப்போதும் மிகச் சிறியவையாயிருக்கட்டும்; ஏனெனில் அவற்றின் சதித் திட்டங்கள் தொடர்ச்சியானவை.

33. உனக்கு உன் பையில் ஒன்று மில்லாதபோது விருந்துகளுக்குச் செலவழிப்பதற்காகக் கடன் வாங்குவதால் தரித்திரனாகாதே; ஏனெனில் அப்போது நீ உன் சொந்த உயிருக்கே விரோதியாயிருப்பாய்.