இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உபாகமம் - அதிகாரம் 18

ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் தேவனே சுதந்தரமென்றும்---அவரவருக்கு வருமானமின்னதென்றும்-நிமித்தஞ் சகுனம் சொல்லுகிறவர்களிடத்தில் போக வேண்டாமென்றும்---சத்தியத் தீர்க்கதரிசிகளுக்கும் பொய்யான தீர்க்கதரிசிகளுக்கும் உள்ள வித்தியாசம் இன்னதென்றும் சொல்லப் படுகின்றது.

1. குருக்களுக்கும் லேவியர்களுக்கும் இவர்களுடைய கோத்திரத்தைச் சேர்ந் தவர்களுக்கும் இஸ்றாயேல் புத்திரருடன் பங்கும் சுதந்தரமுமில்லை. ஏனெனில் கர்த்தருக்கு இடப்படும் பலிகளையும் காணிக்கைகளையும் அவர்கள் புசிக்க வேண்டும்.

2. அவர்கள் தங்கள் சகோதரருடைய சுதந்தரங்களில் வேறு யாதொன்றையும் அடையார்கள். உள்ளபடி கர்த்தர் அவர்களுக்குச் சொல்லிய பிரகாரம் கர்த்தரே அவர்களுக்குச் சுதந்தரம்.

3. ஜனங்களும் பலியைச் செலுத்த வருபவர்களும் ஆசாரியருக்குக் கொடுக்க வேண்டி வீதமென்னவென்றால்: அவர்கள பலியிடும் ஆடுமாடுகளின் முன்னந்தொடையையும் இரைப்பையையும் குருவுக்குக் கொடுப்பார்கள்.

4. தானியத்திலும், திராட்ச இரசத்திலும், எண்ணெயிலும் முதற்பலன்களையும், கத்தரித்த ஆட்டு மயிர்களில் ஒரு பாகத்தையும் அவர்களுக்குச் (செலுத்துவார்கள்.)

5. ஏனென்றால், அவனும் அவன் குமாரர்களும் என்றும் கர்த்தருடைய நாமத்தினாலே அவருடைய சந்நிதியில் நின்று தேவ ஊழியஞ் செய்யும்படி அவர்கள் உன் தேவனாகிய கர்த்தரால் உன் சகல கோத்திரங்களுக்குள்ளே தெரிந்து கொள்ளப் பட்டார்கள்.

6. இஸ்றாயேலின் எவ்விடத்திலுள்ள உங்கள் நகரங்களில் யாதொன்றிலே வாசம் பண்ணின ஒரு லேவியன் அவ்வூரை விட்டுக் கர்த்தர் தெரிந்து கொண்டிருக்கும் ஸ்தானத்திற்கு மனப்பூர்வமாய் வருவானானால்,

7. அங்கே தற்காலம் கர்த்தருடைய சந்நிதியில் தேவ ஊழியம் பண்ணி நிற்கும் லேவியராகிய தன் எல்லாச் சகோதரரைப் போல அவனும் தேவனாகிய கர்த்தருடைய பெயராலே தேவ ஊழியஞ் செய்வான்.

8. அவனுக்குத் தன் ஊரிலே தகப்பனுடைய ஆஸ்தியில் வரவேண்டியதை அவன் அனுபவிக்கிறதுமன்றிச் சாப்பாட்டிற்காக மற்றுமுள்ளோரைப் போல் தன் பாகத்தைச் சரியாகப் பெற்றுக் கொள்ளுவான்.

9. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ பிரவேசமான பின்பு அந்தச் சனங்களுடைய அருவருப்பான முறைகளைப் பின்பற்றத் துணியாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

10. தன் குமாரனையாவது குமாரத்தியையாவது சுத்திகரிப்புக்கென்று தீயைக் கடக்கப் பண்ணுபவனும், குறி சொல்லுகிறவர்களை யோசனைகேட்பவனும், கனவுகளையும் சகுனங்களையும் பார்க்கிறவனும் சூனியக்காரனும் உங்களுக்குள்ளே இருக்கலாகாது.

11. மந்திரவாதியும், சன்னதக் காரனும், மாயவித்தைக் காரனும், மரித்தவர்களிடத்தில் குறி கேட்கிறவனும் (உங்களுக்குள்ளே) இருக்கலாகாது.

12. ஏனென்றால் கர்த்தர் அவைகளையயல்லாம் அருவருக்கிறார். அப்படிப்பட்ட பாதகங்களினிமித்தமே அவர் உன் முன்னிலையில் அவர்களைச் சங்கரித்துப் போடுவார்.

13. உன் தேவனாகிய கர்த்தருக்கு முன் நீ குற்றமில்லாத உத்தமனாயிருக்கக் கடவாய்.

14. நீ எவர்களுடைய தேசத்தைச் சுதந்தரிக்க இருக்கிறாயோ அவர்கள் சகுனம் பார்க்கிறவர்களையும் குறி சொல்லுகிறவர்களையும் நம்புகிறவர்கள். நீ உன் தேவனாகிய கர்த்தரால் வேறு விதமான கல்வி கற்றிருக்கிறாயன்றோ?

15. உன் தேவனாகிய கர்த்தர் உன் சனத்தினின்றும், உன் சகோதரர்களிடத்தினின்றும் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக ஏற்படுத்துவார். அவருக்குச் செவி கொடுப்பாயாக.

16. ஒரேபிலே சபைக் கூட்டம் கூடிய நாளில் நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணி: நான் சாகாதபடிக்கு என் தேவனாகிய கர்த்தருடைய குரல் சப்தத்தை இனி நான் கேளாமலும் இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று வேண்டிக் கொண்ட போது,

17.  கர்த்தர் என்னை நோக்கி: இவர்கள் சொன்னதெல்லாஞ் சரியே.

18. உன்னைப் போல் ஒரு தீர்க்கத்தரிசியை நாம் அவர்களுக்காக அவர்களுடைய சகோதரரின் நடுவினின்று எழும்பப் பண்ணி, நம் வார்த்தைகளை அவருடைய வாயில் வைத்தருளுவோம். நாம் அவருக்குக் கற்பிப்பதையயல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.

19. நமது பெயரால் அவர் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நாம் தண்டிப்போம்.

20. ஆனால் நாம் சொல்லும்படி கட்டளையிடாத வார்த்தைகளை நமது நாமத்தினாலே எந்தத் தீர்க்கதரிசி சாதிக்கத் துணிவானோ அல்லது வேறு தேவர்களின் நாமத்தினாலே பேசுவானோ அவன் சாகக் கடவான் என்று திருவுளம் பற்றினார்.

21. நீயோ: கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எதினால் அறிவேனென்று உன் மர்மத்திலே சொல்வாயாகில்,

22. இதோ நாம் ஒரு அடையாளம் சொல்லுகிறோம் கேள்: ஒரு தீர்க்கதரிசி கர்த்தருடைய நாமத்தினாலே என்று ஒரு காரியம் சொல்லுகிறான். அது நிறைவேறாமற் போனால் அதைக் கர்த்தர் சொல்லவில்லை. தீர்க்த்தரிசி தன் ஆங்காரத்தினாலே அதைத் தானே உண்டாக்கிச் சொன்னான். ஆதலால் அதை நீ (கவனிக்கவும் வேண்டாம்.) பயப்படவும் வேண்டாம்.