சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 15

தேவ பயத்தினால் உண்டாகும் நன்மைகள்.

1. கடவுளுக்குப் பயந்து நடக்கிறவன் நன்மை செய்வான்; நீதியைச் சொந்தமாகக் கொண்டிருப்பவன் அதைப் பற்றிக்கொள்வான்.

2. மகிமையுள்ள தாயைப்போல் அவனைச் சந்திக்கும்; ஒரு விரத்தனை மணம் செய்துகொண்ட மனைவியாக அவனை ஏற்றுக்கொள்ளும்.

3. சீவியத்தினுடையவும், புத்தியினுடையவும் அப்பத்தைக் கொண்டு அது அவனைப் போஷிக்கும். நலம் தரும் ஞானத்தின் தண்ணீரை அவனுக்குப் பருகத் தரும்; அது அவனில் பலமுள்ளதாக்கப்படும்; அதனால் அவன் அசைக்கப்படா திருப்பான்;

4. அது அவனைப் பற்றிக்கொள்ளும், அவன் வெட்கமடைய மாட்டான். அது அவனுடைய அயலார் நடுவே அவனை உயர்த்தும்.

5. சபை நடுவில் அது அவனுடைய வாயைத் திறக்கும்; ஞானத்தினுடையவும், புத்தியினுடையவும் உணர்வால் அது அவனை நிறைக்கும், மகிமையின் ஆடையால் அவனை உடுத்தும்.

6. மகிழ்ச்சி மற்றும் அக்களிப்பின் பொக்கிஷம் ஒன்றை அது அவன் மீது குவிக்கும்; ஒரு நித்தியப் பெயரை அவன் சுதந்தரித்துக்கொள்ளச் செய்யும். 

7. ஆனால் மூடத்தனமுள்ள மனிதர் அதைப் பெற்றுக்கொள்ள மாட் டார்கள்; ஞானமுள்ளவர்கள் அதைச் சந்திப்பார்கள்; மூடர்களோ அதைக் காண மாட்டார்கள்; ஏனெனில் அது ஆங்காரத்திடமிருந்தும், வஞ்சகத் திடமிருந்தும் தொலைவாக இருக் கிறது.

8. பொய்யரான மனிதர் அதை நினைக்கமாட்டார்கள்; உண்மை பேசுபவர்களோ, அதனோடு காணப் படுவார்கள், சர்வேசுரனுடைய திருமுன் வரும் வரை கூட அவர்கள் முன்னேறிச் செல்வார்கள்.

9. பாவியின் வாயில் தேவ துதி சுவையுள்ளதாயிராது.

10. ஏனெனில், கடவுளிடமிருந்து ஞானம் வந்தது; ஏனெனில் தேவ புகழ்ச்சி தேவ ஞானத்தோடு இருக் கிறது; பிரமாணிக்கமுள்ள வாயில் அது மிகுந்திருக்கும்; இராஜரீக ஆண்டவர் அதற்குப் புகழ்ச்சியைத் தருவார்.

11. ஞானம் என்னிடமில்லாததற் குக் கடவுள்தான் காரணம் என்று சொல்லாதே; ஏனெனில் அவர் வெறுக்கிற காரியங்களை நீ செய்யாதிரு.

12. அவரே நான் தவறு செய்வதற்குக் காரணம் என்று சொல்லாதே; ஏனெனில் அக்கிரமிகளான மனிதர் அவருக்குத் தேவையில்லை.

13. சகல பதித அருவருப்புகளையும் ஆண்டவர் வெறுக்கிறார்; அவருக் குப் பயப்படுகிறவர்கள் அதை நேசிக்க மாட்டார்கள்.

14. சர்வேசுரன் ஆதியில் மனிதனை உண்டாக்கி, அவன் தன் சொந்த விமரிசைப்படி நடக்க அனுமதித் தார்.

15. அவர் தமது கற்பனைகளையும் கட்டளைகளையுங் கொடுத்தார்.

16. கட்டளைகளை அனுசரிக்கவும், அவருக்கு உகந்தபடி என்றென்றும் பிரமாணிக்கத்தோடு நடக்கவும் உனக்கு மனதுண்டானால் அவை உன்னைக் காப்பாற்றும்.

17. நீரும் நெருப்பும் உன் முன்பாக வைத்திருக்கிறார்; உனக்குப் பிரிய மானதை நோக்கிக் கைநீட்டு.

18. மனிதனுக்கு முன்பாக சீவிய மும், மரணமும், நன்மையும், தின்மை யும் உண்டு; அவன் எதைத் தெரிந்து கொள்வானோ அது அவனுக்குத் தரப்படும்.

19. ஏனெனில், சர்வேசுரனுடைய ஞானம் மகத்தானது; அவர் தம் வல்லமையில் பலமுள்ளவராயிருக் கிறார், சகல மனிதரையும் இடை விடாமல் காண்கிறார்.

20. ஆண்டவரின் கண்கள் அவருக்குப் பயந்து நடப்பவர்களை நோக்கி யிருக்கின்றன. மனிதனுடைய சகல செய்கைகளையும் அவர் அறிகிறார்.

21. அக்கிரமமாய் நடக்க அவர் யாருக்கும் கட்டளையிட்டதில்லை; பாவஞ் செய்ய எந்த மனிதனுக்கும் அவர் அனுமதி கொடுத்ததில்லை.

22. ஏனெனில், பிரமாணிக்கமற்றவர்களும் பயனற்றவர்களுமான பிள்ளைகளின் கூட்டத்தை அவர் ஆசிப்பதில்லை.