இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உபாகமம் - அதிகாரம் 13

விக்கிரக ஆராதனைக்கடுத்த பொய்யான தீர்க்கதரிசிகளைக் குறித்தும்--மோயீசன் புத்தி சொல்லுகிறதும்.

1. உங்களுக்குள்ளே தீர்க்கதரிசியாகிலும் தான் சொற்பனங் கண்டதாகச் சாதிக்கிறவனென்கிலும் எழும்பி உங்களுக்கு யாதோர் அடையாளத்தை அல்லது யாதொரு அற்புதமான சில சங்கதியை முன்னே அறிவிப்பானாக்கும்.

2. பிறகு அவன் சொல்லியபடி நடந்தேறி வந்தால், அவன்: வா! நீ அறியாத வேறு தேவர்களைப் பின்பற்றி அவர்களுக்குச் சேவிப்போம் என உனக்குச் சொல்வானாக்கும்.

3. நீ அப்படிப்பட்ட தீர்க்கதரிசியாகிலும், சொற்பனக் காரனென்கிலும் சொல்லுகிற பேச்சுக்களைக் கேளாதே. ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமத்தோடும் நேசித்திருக்கிறீர்களோ அல்லவோவென்று வெளியரங்கமாகும்படி அவர் உங்களைச் சோதிக்கிறார்.

4. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரானவரை மாத்திரம் பின்பற்றி அவருக்குப் பயந்தவர்களுமாய் அவருடைய கற்பனைகளை அநுசரிக்கிறவர்களுமாய் அவருடைய வாக்கியத்திற்குச் செவிகொடுக்கிறவர்களுமாய் அவருக்கு மாத்திரமே ஊழியஞ்செய்து அவரை அண்டிக் கொள்ளக் கடவீர்கள்.

5. அந்தத் தீர்க்கத்தரிசியோ அல்லது அந்தச் சொற்பனக்காரனோ கொலைசெய்யப் படக் கடவான். ஏனெனில் உங்களை எஜிப்த்து தேசத்திலிருந்து விடுதலை பண்ணினவரும், அடிமை வாசத்தினின்று உங்களை இரட்சித்தவருமாகிய உங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து உன்னை நீக்கவும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த மார்க்கத்தினின்று உன்னைச் சிதறச் செய்யவுங் கருதி அவன் பிதற்றினவனாகையால் நீங்கள் அப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்கக் கடவீர்களாக்.

6.  உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாவது, உன் குமாரன் உன் குமாரத்தியாவது, உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும், நீ உன் ஆத்துமாவைப் போல நேசிக்கிற உன் சிநேகிதனென்கிலும் இரகசியமாய் வந்து: நீ வா! நீயும் உன் பிதாக்களும் அறிந்திராத அந்நிய தேவர்களைச் சேவிக்கப் போவோம்.

7. அந்தத் தேவர்களே எங்கேதான் பார்த்தாலும், கிட்டத்திலும் துலைவிலும் தேசத்தின் ஒருமுனை துடங்கி மறுமுனை மட்டுமுள்ள எல்லாச் சனங்களுடைய தேவர்கள் என்றுசொல்லி (உன்னைக் கூப்பிட்டாலும்)

8. நீ அவனுக்கு இணங்காதே, அவன் பேச்சுக்குச் செவிகொடுக்காதே. அவனைக் கிருபைக் கண்ணாலே பார்த்து அவனைத் தப்புவிக்க வேணுமென்று அவன் மேல் இரக்கம் வைக்காதே.

9. பால்மாறாமல் அவனைக் கொன்றுபோடு. முதல் உன் கையும் பின்பு சகல சனங்களின் கையும் அவன் மேல் பட வேண்டும்.

10. கல்லாலெறியப் பட்டு அவன் சாகக் கடவான். ஏனெனில் அடிமை வாசமாகிய எஜிப்த்து தேசத்திலிருந்து உன்னை விடுதலை பண்ணின உன் தேவனாகிய கர்த்தரை நீ விட்டு விலகும்படி அவன் உன்னை ஏவப் பார்த்தான்.

11. அதனாலே இஸ்றாயேல் யாவரும் அதைக் கேள்வியுற்றுப் பயந்து இனிமேல் இப்படிப்பட்ட அக்கிரமம் செய்யாதிருப்பார்களாக்கும்.

12. உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு வாசம்பண்ணும்படி கொடுக்கப் போகிற நகரங்கள் யாதொன்றில்,

13. பேலியாலின் மக்கள் உன்னிடத்திலிருந்து புறப்பட்டுத் தங்கள் பட்டணத்தின் குடிகளை நோக்கி: நீங்கள் அறியாத தேவர்களைச் சேவிக்கப்போகிறோம், வாருங்கள் என்று மேற்படி பட்டணத்தாரை வஞ்சித்ததாக நீ கேள்விப்படுவாயாகில்,

14. நீ கவனத்தோடும் சுறுசுறுப்போடும் விசாரித்துக் கேட்டாராய்ந்த பிற்பாடு அந்தச் சமாச்சாரம் உண்மைதானென்றும், அருவருப்பான அந்தக் காரியம் உன் நடுவே நடந்தது வாஸ்தவமும் நிச்சயமுமானதென்றும் நீ காண்பாயாகில்,

15. அட்சணமே நீ அந்தப் பட்டணத்துக் குடிகளைப் பட்டயக் கருக்கினால் வெட்டி அப்பட்டணத்தையும் அழித்து அதிலுள்ள யாவற்றையும் அதிலிருக்கிற மிருக ஜீவன்களையும் சங்காரம் பண்ணி,

16. (அதில் கொள்ளையிடப்பட்ட) சாமான் தட்டுமுட்டு முதலியவைகளை நடுவீதியிலே கூட்டிக் குவித்து அவைகளையும் பட்டணத்தையும் கூடச் சுட்டெரித்து உன் தேவனாகிய கர்த்தருக்குத் தோத்திரமாக முழுவதும் நெருப்புக் கிரையாகும்படியாகவும், அது இனியயாருக்காலும் கட்டப்படாமல் நித்தியக் கல்மேடாயிருக்கும்படியாகவும் செய்யக் கடவாய்.

17. சபிக்கப் பட்ட பொருட்களில் யாதொன்றையும் நீ உன் கையிலெடுக்காதே. அப்போதுதானே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தை விட்டு உன்மேல் இரக்கம் புரிந்து உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியபடி உன்னை விருத்திக்கப் பண்ணு வார்.

18. (இந்த வார்த்தை நிறைவேறுவ தற்கு) நீ உன் தேவனாகிய கர்த்தருடைய குரல் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவருடைய கற்பனையயல்லாம் நீ கைக் கொண்டு அனுசரிக்க வேண்டும். உன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்கு இஷ்டமானதை நீ செய்யும்படியல்லவா நான் இன்று மேற்படி கற்பனைகளை உனக்கு விதித்திருக்கிறேன்.