இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உபாகமம் - அதிகாரம் 12

விக்கிரக ஆராதனையைக் கானான் தேசத்தில் அழிக்கவேண்டியதும்-இரத்தம் உண்ணப்படாதென்று விலக்கப் பட்டதும்--பரிசுத்த ஸ்தலங்களிலே பரிசுத்தமானவைகளைப் புசிக்க வேண்டியதும்--கானானியரைப் போல் விக்கிரக ஆராதனைக்குரிய சடங்குகளைக் கண்டு பாவிக்கக் கூடாதென்பதும்.

1. உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கப்போகிற தேசத்தில் நீ பூமியில் சஞ்சரிக்கும் நாளெல்லாம் அதைச் சுதந்தரித்துக்கொண்டிருக்கும் பொருட்டு, நீங்கள் அனுசரிக்க வேண்டிய கற்பனைகளும் நீதி முறைமைகளுமாவன:

2. நீங்கள் ஆதீனப்படுத்தப் போகிற சனங்கள் உயர்ந்த மலைகளின் மேலும் குன்றுகளின் மேலும் தழைத்திருக்கிற மரங்களின் கீழும் தேவர்களைத் தொழுது வந்த இடங்களையயல்லாம் நிர்மூலமாக்கி,

3. அவர்கள் பலிப்பீடங்களையும் இடித்து, அவர்கள் சுரூபங்களையும் தகர்த்து, சோலைகளையும் நெருப்பினாலே சுட்டெரித்து, அவர்களின் சிலைகளையும் நொறுக்கி, அவ்விடங்களின் பேர்முதலாய் இராமல் அவைகளை முற்றிலும் நாசம் பண்ணிப் போடுங்கள்.

4. உங்கள் தேவனாகிய கர்த்தரின் விஷயத்திலே (நீங்கள்) அவ்விதமாய்ச் செய்யாமல்,

5. உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கவும், தாம் வாசம் பண்ணவும் உங்கள் சகல கோத்திரங்களிலும் எந்த ஸ்தலத்தைத் தெரிந்து கொண்டிருப்பாரோ அந்த ஸ்தலத்தையே நீங்கள் நாடியடைந்து,

6. அந்த ஸ்தானத்திலேயே உங்கள் தகன முதலிய பலிகளையும், உங்கள் தசங்களையும், உங்கள் கைகளின் நவப்பலன்களையும், உங்கள் பொருத்தனைகளையும், காணிக்கைகளையும், உங்கள் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டு வந்து செலுத்தி,

7. உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில்தானே புசித்து நீங்களும் உங்கள் வீட்டாரும் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் அகமகிழ்ச்சி கொண்டாடுவீர்கள்.

8. இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்கு இஷ்டமானதையயல்லாஞ் செய்கிறது போல அங்கே நீங்கள் அவ்விதமாய்ச் செய்யலாகாது.

9. உள்ளபடி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கவிருக்கிற இளைப்பாறுதலிலுஞ் சுதந்தரத்திலும் நீங்கள் இன்னும் பிரவேசிக்கவில்லை.

10. ஆனால் நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தவர்களாய் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கவிருக்கிற தேசத் தில் நீங்கள் குடியேறின பின்பு சுற்றிலும் இருக்கிற உங்கள் சத்துருக்களின் உபத்திரவமற்று யாதொரு அச்சமுமின்றி அந்தத் தேசத்தில் வாசம் பண்ணுவீர்களே,

11. அப்பொழுது உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி எந்த ஸ்தலத்தைத் தெரிந்த கொண்டிருப்பாரோ, நீங்கள் அந்த ஸ்தலத்திற்குப் போய் நான் உங்களுக்குக் கற்பிக்கின்றபடி உங்கள் சர்வாங்கத்தகனங்களையும், உங்கள் பலிகளையும், தசமபாகங்களையும், உங்கள் கைகளின் நவப்பலன்களையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்து கொள்ளும் காணிக்கைகளில் உத்தமமான பாகத்தையுங் கொண்டு வந்து படைக்கக் கடவீர்கள்.

12. அங்கேதானே நீங்களும் உங்கள் குமாரர் குமாரத்திகளும், ஊழியர் ஊழியக்காரிகளும் உங்கள் நகரங்களில் வாசமாயிருக்கிறவர்களும் உங்களுக்குள் வேறு பங்கும் உரிமையும் கொண்டிராதவர்களுமாகிய லேவியர்களும், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் விருந்துண்டு களிப்பீர்கள்.

13. நீ கண்ட இடமெல்லாம் உன் சர்வாங்கத் தகனப் பலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

14. ஆனால் உன் கோத்திரங்களில் ஒன்றில் கர்த்தர் தெரிந்து பொண்டிருக்கும் இடத்தில் மாத்திரமே நீ உன் சர்வாங்கத் தகனப் பலிகளையிட்டு நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாய்.

15. விருந்தாடுவதற்கு மாம்சம் புசிக்க விரும்புவாயானால் தேவனாகிய உன் கர்த்தர் உன் நகரங்களில் உனக்கு அருளியிருக்கும் ஆசீர்வாதப் படி நீ அடித்துப் புசிக்கலாம். அந்த மிருகஜீவன் மாசுள்ளதா அல்லது ஊனமாயிருந்து தீட்டுப்பட்டதானாலும் சரி, பழுதற்ற சர்வாங்கத்தையுடைய தீட்டில்லா மிருகமானாலும் சரியே. காட்டாட்டையும் கலைமானையும் புசிக்கிறது போல அதைப் புசிக்கலாம்.

16. இரத்தத்தை மாத்திரம் புசிக்க வேண்டாம். அதைத் தண்ணீரைப் போலத் தரையில் ஊற்றி விடக் கடவாய்.

17. உன் தானியத்திலும் உன் திராட்ச இரசத்திலும், உன் எண்ணெயிலும் கொடுக்க வேண்டிய தசம்பாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் நீ நேர்ந்து கொள்ளும் உன் சகல பொருத்தனைகளையும் உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கைகளின் நவப்பலன்களையும் நீ உன் நகரங்களில் புசிக்காமல்,

18. உன் தேவனாகிய கர்த்தர்தெரிந்து கொண்டிருக்கும் இடத்தில்தானே நீயும் உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரன், உன் வேலைக்காரியும், உன் பட்டணங்களிலிருக்கிற லேவியனும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அவற்றைப்புசித்து, நீ கையிட்டுச் செய்யும் எல்லாவற்றின் விஷயமாய் உன் தேவனாகிய கர்த்தருடைய பார்வையிலே சந்தோஷக் கொண்டாட்டம் பண்ணுவாய்.

19. நீ பூமியிற் சீவித்திருக்கும் நாளெல்லாம் லேவியனைக் கைவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

20. உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு வாக்களித்தபடி அவர் உன் எல்லைகளை விசாலமாக்கிய பின்னர், உன் மனதின் இஷ்டப்படி நீ இறைச்சியைப் புசிக்க விரும்பும் போது,

21. உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொண்ட ஸ்தானம் உனக்கு அதி தூரமானால், நான் உனக்குக் கற்பித்தவாறு உனக்கு உண்டாயிருக்கிற ஆடுமாடு முதலிவற்றில் நீ எதையாகிலும் அடித்து உன் நகரங்களில்தானே உன் இஷ்டப்படியே புசிக்கலாம்.

22. காட்டு வெள்ளாட்டையும் கலைமானையும் புசிக்கிறது போல அப்படியே நீ அவற்றைப் புசிக்கலாம். தீட்டுப் பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைக் கூடிக்கொண்டு புசிக்கலாம்.

23. இரத்தத்தை மாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு. ஏனென்றால் மிருக ஜீவனில் இரத்தம் உயிருக்குப் பதிலாக இருப்பதினால் மாம்சத்தோடு உயிரையும் புசிக்கலாகாது.

24. ஆதலால் நீ அதைத் தண்ணீரைப் போல் தரையில் ஊற்றிவிடக் கடவாய்.

25. நீ கர்த்தர் சமூகத்தில் செம்மையானதைச் செய்திருப்பதினால் உனக்கும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளுக்கும் நன்றாக விருக்கும்படி (அந்தக் கட்டளையை அனுசரிப்பாய்.)

26. நீ கர்த்தருக்கு வசீகரம் பண்ணின வஸ்துக்களையும், நேர்ந்து கொண்ட உன் பொருத்தனைகளையும் கர்த்தர் தெரிந்து கொண்ட ஸ்தானத்திற்கு நீ கொண்டு வந்து,

27. உன் காணிக்கைகளாகிய மாமிசத்தையும் இரத்தத்தையும், உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின் மீது ஒப்புக் கொடுத்துப் பலிப் பிராணிகளின் இரத்தத்தைப் பீடத்தின் மேல் ஊற்றிவிட்ட பின் நீ மாமிசத்தைப் புசிப்பாய்.

28. நீ உன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்கு நலமும் இஷ்டமுமானதை செய்திருப்பதினால் உனக்கும் உனக்குப் பின்வரும் உன் புத்திரருக்கும் எப்போதைக்கும் நன்றாகும் பொருட்டு இன்று நான் உனக்குக் கற்பிக்கின்ற எல்லாவற்றையும் கவனமாய் உற்றுக்கேட்டு அநுசரிக்கக் கடவாய்.

29. சுதந்தரித்துக் கொள்ளும்படி நீ பிரவேசிக்கப் போகிற தேசத்துச் சாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் உன் கண்களுக்கு முன் சங்கரித்த போதும், நீ அவர்களுடைய தேசத்தைப் பிடித்து அதிலே குடியேறின போதும்,

30. அந்தச் சாதிகள் உன் வருகையில் தானே அழிக்கப் பட்டதை யோசித்து நீ அவர்களைப் போல நடக்காதபடிக்கும், அவர்கள் தங்கள் தேவர்களைச் சேவித்த விதமாய் நானும் சேவிப்பேனென்று சொல்ல அவர்களுடைய வேத ஆசாரங்கள் எப்படிப்பட்டவையாயிருந்தனவோவென்று கேட்டு விசாரிக்காதபடிக்கும் எச்சரிக்கையாயிருக்கக் கடவாய்.

31. அப்படிப் பட்ட சடங்குகளைப் பண்ணி உன் தேவனாகிய கர்த்தருடைய ஆராதனையில் உபயோகித்துக் கொள்ளாதே. ஏனென்றால் கர்த்தர் வெறுக்கிற வெறுப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து தங்கள் குமாரர்களையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்குப் படைத்து அக்கினியிலே அவர்களைச் சுட்டெரித்தார்கள்.

32. நான் உனக்கு விதிக்கிற யாவையும் கர்த்தருக்காக நீ செய். அதில் கூட்ட வேண்டியதும் ஒன்றுமில்லை. குறைக்க வேண்டியதும் ஒன்றுமில்லை.