ஓசே ஆகமம் - அதிகாரம் - 11

இஸ்றாயேலின் நன்றிகெட்டதனத்தைப் பற்றிக் கர்த்தர் அதனைக் கண்டிப்பார், - அப்பொழுது அது மனந்திரும்பும்.

1. இஸ்றாயேலின் அரசாங்கம் வைகறைப் பொழுது நீங்குவதுபோல் மறைந்து போம்; நாமோ இஸ்றாயேல் இளந்தையாய் இருக்கையிலேயே அதை சிநேகித்தோம்; நமது குழந்தையாகிய அதை எஜிப்த்து நின்று வருவித்தோம்.

* 1-ம் வசனம். அரசாங்கம் இஸ்றாயேல் அரசனாகிய ஓசேயின் இராச்சிய பாரங் காலைப் பொழுதுபோல் அதி சீக்கிரம் ஒழிந்துபோம்; நமது குழந்தை இஸ்றாயேல் ஆண்டவருக்கு ஜேஷ்ட புத்திரனாகச் (யாத்திராகமம், 4:22-ல்) சொல்லப்பட்டிருக்கின்றது.

2. தீர்க்கவசனர் அவர்களைத் திரும்ப அழைத்தனர்; ஆயினும் அவர்கள் செவிகொடாது எட்டே நின்று, பாஹால் தெய்வத்துக்குப் பலியிட்டு, விக்கிரகங்களுக்குப் பூஜா நமஸ்காரஞ் செய்தனர்கள்.

3. நாமோ எப்பிராயீமோருக்கு வளர்தாதையாய் நின்று அவர்கரளை நம் குடங்கையில் தூக்கிக் கொண்டிருந்தோம்; ஆயினும் நாம் அவர்களைப் பராமரித்து வந்ததை அவர்கள் அறியாமற் போனார்கள்.

4. மனிதரைப் பாசக் கயிறுகளால் கட்டுவதுபோல், நாம் அவர்களைப் பிற ஸ்நேக வடத்தால் இழுத்தோம்; நாம் அவர்கள் தலையை அழுத்தும் அவர்கள் நுகத்தை இறக்கி, இளைப்பாறச் செய்து, உண்ணத் தீனி அளித்தோம்.

4. ஆயினும் அவர்கள் திரும்பி வரச் சித்தம் வையாதிருத்தல்பற்றி, அவர்கள் எஜிப்த்து தேசந் திரும்பார்கள்; அசூரே அவர்களுக்கு வேந்தனாயிருப்பன்.

6. அதின் பட்டணங்களின் பெரிய தோர் கடும் யுத்தங் கிளம்பி, அதின் பலாஷ்டிகரை அழித்து, அதின் அதிபர் களை விழுங்கிவிடும்.

7. இத்துன்பத்து நடுவில் தனக்கு உதவி புரிதல் பொருட்டு நாம் திரும்ப வருவோமென நம் பிரசை காத்திருக்கும்; ஆனால் அவர்களுக்குப் பூட்டப்படும் நுகத்தைக் கழட்ட ஒருவனாலுமேலாது.

8. எப்பிராயீமே! உன்னை யாம் எங்ஙனம் நடத்துவோம்; ஓ, இஸ்றாயேலே! உன்னை எவ்வாறு காப்போம்; உன்னை ஆதமாவைப் போல் கைநெகிழ்வோமா? அல்லது செபோயீமைப்போல் நிர்மூலஞ் செய்வோமா? ஒன்றும் புலப்படாமல் நமது இருதய கமலம் நம்மில் கலவரமுற, நமது விசனமதை அலைக்கின்றது.

* 8-ம் வசனம். ஆண்டவர் நீதியுள்ளவராயிருத்தல்பற்றிப் பாபிஷ்டரைத் தண்டிக்க வேண்டியவராயிருக்கின்றனர்; சகல மானிடருக்கும் பிதாவாயிருத்தலால், தண்டிக்க மனங் கொள்ளாதிருக்கின்றனர்.

9. இல்லை இல்லை! நமது கோபத்து ஆக்கிரகச் சார்பாகச் செய்வோமில்லை; எப்பிராயீமை அழிக்க யாம் கிளம்பு வோமில்லை; நாம் கடவுளரேயன்றி மனிதனல்லோம்; நாம் உங்கள் நடுவில் (அருச்சனைப் பெற்ற) பரிசுத்தர் ஆதலின் உங்களையழிக்க யாம் பட்டணம் புகவறியோம்.

10. இஸ்றாயேலியர் மனங் குழைந்து, ஆண்டவர் பின் நடப்பர்; அவரே சிம்ம மெனக் கர்ச்சிப்பர்; ஆம் அவரே கர்ச்சனை செய்ய, சமுத்திரங் கக்கிய (சத்துரு படை யோர்) பயப்பிராந்தி கொள்வர்.

* 10-ம் வசனம். (ஆண்டவர் பின் நடப்பார் ஆண்டவருடைய வேத கட்டளைகளைச் சுமுத்திரையாய் அனுஷ்டிப்பர்; அவரே சிம்மம்போல் கர்ச்சிப்பர்; கிறீஸ்துவானவரும், அவருடைய சிஷியருஞ் சுவிசேஷம் போதிக்க எடுத்த குரல் தொனி எங்குங் கேட்குமாம்; பிற சாதி சனங்கள் அக்குரல் தொனிக்கு அஞ்சி வருவராம் என ஞானார்த்தங் கொள்ளும்.

11. அப்போது (இஸ்றாயேலியர்) எஜிப்த்தினின்று பறவை எனவும், அசீரியர் தேசத்தினின்று புறாவைப் போலவும் பறந்து வருவர்; நாம் அவர்கள் பதியில் ஒன்று சேர்ப்போம் என்கிறார் ஆண்டவர்.

12. எப்பிராயீம் அபத்த வார்த்தைப் பாடுகளாலும், இஸ்றாயேல் குடும்பந் தன் கள்ளத்தனத்தாலும் நம்மை ஏய்த் தது; யூதாவோ ஆண்டவருக்கு ஓர் சாட் சியம்போலும், தீர்க்கத்தரிசிகளுக்குப் பிரமாணிக்கமுள்ள அடியனாகவும் நடந்து கொண்டது.