அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 11

தாவீது பாவத்தில் விழுதல்.

1.  மறுவருஷம் இராசாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங் காலம் வந்தபோது, தாவீது யோவாபையும் அவனோடு கூடத் தன் சேவகர்களையும் இஸ்றாயே லனைத்தையும் அம்மோன் புத்திரரை நிர்மூலமாக்கிவிடவும் இரப்பாவை முற்றிகைப் போடவும் அனுப்பினான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட் டான்.

2. இவை நடந்தேறிவரும்நாளில் ஒரு நாள் தாவீது மத்தியானத்துக்குப் பின் தன் படுக்கையினின்று எழுந்து அரண்மனை உப்பரிகையின் மேல் உலாவுகையில் அவனுக்கு எதிரே தன் அரமியத்தின் மீது ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்த ஒரு ஸ்திரீயைக் கண்டான்; அந்த ஸ்திரீ அதிக சவுந்தரவதி யாயிருந்தனள்;

3. அப்பொழுது இராசா அந்த ஸ்திரீ யாரென்று விசாரிக்க ஆளனுப்பினதற்கு, அவள் எலியாமின் குமாரத்தியும், உரியா சின் மனைவியுமாகிய பெத்சாபே என்று சொன்னார்கள்.

4. அப்பொழுது தாவீது ஆளனுப்பி அவளை வரவழைத்தான்.  அவள் அவனிடத்தில் வந்தபோது இராசா அவளோடு சயனித்தான்.  பிறகு அவள் தன் தீட்டு நீங்கத் தன்னைச் சுத்திகரித் துக் கொண்டு,

5. கர்ப்பந்தரித்தவளாய்த் தன் வீட்டுக்குப் போய் தான் கற்பவதியானாளென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆளனுப்பினள்.

6. அப்பொழுது தாவீது யோவாபிடம் காகிதம் அனுப்பி: ஏத்தையனான உரியாசை என்னிடத்தில் அனுப்பு என்று சொன்னான்; அப்படியே யோவாப் ஏத்தையனான உரியாசைத் தாவீதினிடத் திற்கு அனுப்பினான்;

7. உரியாஸ் தாவீதினிடத்தில் வந்த போது: தாவீது அவனை நோக்கி: யோவாப் சுகமாயிருக்கிறாரா?  ஜனங்கள் க்ஷேமமாயிருக்கிறார்களா?  யுத்தத்தின்  செய்தி சுபசெய்தியா? என விசாரித்தான்.

8. பிறகு தாவீது உரியாசை நோக்கி: உன் இல்லத்திற்குப் போய் பாதசுத்தி செய் என்றான்; உரியாஸ் இராசா அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது, இராசாவின் பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டன.

9. உரியாசோவென்றால் தன் இல்லத்துக்குப் போகாமல் தன் ஆண்டவ ருடைய மற்றுமுள்ள ஊழியர்களோடு கூட இராசாவின்  அரண்மனை வாசலிலே படுத்துக் கொண்டான்.

10. உரியாஸ் தன் இல்லத்திற்குப் போகவில்லை என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாசை நோக்கி: நீ யாத்திரையிலிருந்து வந்தவனல்லவா?  நீ உன் வீட்டுக்குப் போகாமலிருக்கிறதென்னவென,

11. உரியாஸ் தாவீதைப் பார்த்து: தேவ பெட்டகமும், இஸ்றாயேலும், யூதாவுங் கூடாரங்களிலே தங்கிக் கொண்டிருக்க, என் எஜமானான யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியே தரித்திருக்க நான் புசிக்கிறதற்குங் குடிக்கிறதற்கும், என் மனைவியோடு சயனிக்கிறதற்கும் என் வீட்டுக்குப் போவேனோ?  தேவரீர் ஆணை! தேவரீருடைய ஆத்தும இரட்சணியத்தின் ஆணை! நான் அப்படிச் செய்யவே மாட்டேன் என்றான்.

12. அப்போது தாவீது உரியாசை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு.  நாளை நானுன்னை அனுப்பிவிடுவேன் என்றான். அப்படியே உரியாஸ் அன்றும் மறுநாளும் எருசலேமிலிருந்தான்.

13. தாவீது அவனைத் தனக்கு முன்பாகவே புசிக்கவுங் குடிக்கவும் அழைத்து அவனை வெறிக்கச் செய்தான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல் சாயுங்காலத்திலே வெளியே போய்த் தன் ஆண்டவனுடைய ஊழியர்களோடு தன் படுக்கையில் நித்திரை பண்ணினான்.

14. காலமே தாவீது யோவாபுக்கு ஓர் நிருபம் எழுதி அதை உரியாசின் கையில் கொடுத்து அனுப்பினான்.

15. அந்த நிருபத்திலே போர் வெகு மும்முரமாயிருக்குமிடத்தில் நீர் உரியாசைப் படைமுகத்திலே வைத்து அவன் வெட்டுண்டு சாகும்படி அவனை விட்டு விடும் என்று எழுதியிருந்தது.

16. அப்பிரகாரமே யோவாப் பட்டணத்தை முற்றிகைப் போடுகையில் அதிபராக்கிரமசாலியான வீரர்கள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாசை நிறுத்தினான்.

17. அப்பொழுது பட்டணத்துச் சேவகர் வெளிவந்து யோவாபோடு  சண்டை ஆரம்பித்தபோது தாவீதின் வீரர் கூட்டத்திலே பலபேர் விழுந்து செத்தார் கள்; ஏத்தையனாகிய உரியாசுஞ் செத்தான்;

18. அப்போது யோவாப் அந்த யுத்தத்தின் சமாச்சாரமெல்லாந் தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பி,

19. தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ சண்டையின் சேதியனைத்தையும் இராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தான போது,

20. சிலவேளை அவர் சினந்து: நீங்கள் பட்டணத்து மதில்களுக்கு அத்தனை கிட்டப்போய் யுத்தம் பண்ண வேண்டியதென்ன?  சத்துருக்கள் அலங் கத்தினின்று எய்வார்களென்று உங்களுக் குத் தெரியாதா?

21. ஜெரோபாலின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார்?  தேபிஸ் பட்டணத்து முற்றுகையிலே ஒரு பெண்பிள்ளை அலங்கத்திலிருந்து ஓர் எந்திரக் கல்லின் ஒரு துண்டை அவன் மேல் வீசினதினால் அல்லோ அவன் செத்தான்; நீங்கள் அலங்கத்துக்குக் கிட்டப் போனதென்ன?  என்று ராஜா உன்னோடு சொன்னால் நீ அவரைப் பார்த்து: உம்முடைய ஊழியனாகிய ஏத்தையனான உரியாசும் கூட விழுந்து செத்தான் என்று சொல்லென்றான்.

22. அப்பிரகாரமே தூதன் புறப்பட் டுத் தாவீதிடம் வந்து, யோவாப் தனக்குக் கற்பித்திருந்த செய்தி எல்லாம் அவருக்கு அறிவித்து: 

23. அவன் தாவீதை நோக்கி: சத்துருக் கள் கைமிஞ்சி எங்களோடு வெளியே யுத்தம் பண்ண வந்தார்கள்.  நம்மவர் களோ அவர்கள்மேல் விழுந்து பட்ட ணத்து வாசல் மட்டும் அவர்களைத் துரத்தினபோது,

24. வில் வீரர் அலங்கத்திலிருந்து உம் முடைய தாசர்களின்மேல் அம்பு எய்ததால் இராசாவின் சேவகரிலே பலர் வீழ்ந்தனரன்றியே உம் தாசனாகிய உரியாஸ் ஏத்தையனுங் கூட மாண்டான் என்றான்.

25. அப்பொழுது தாவீது தூதனை நோக்கி, நீ யோவாபிடத்திலே போய், இந்த விஷயத்தைப் பற்றி நீர் கலங்க வேண்டியதில்லை; யுத்தத்தில் அதிஷ்டம் பலவிதம்.  பட்டயம் ஒரு விசை ஒருவ னையும், மற்றொரு விசை வேறொரு வனையும் பட்சிக்கும்.  நீர் நம்மவர் களைத் திடப்படுத்திப் பட்டணத்தைச் சீக்கிரத்தில் பிடித்து இடிக்க அவர்களை மூட்டி விடுவீரென்று சொல்லென்றான்.

26. உரியாசின் மனைவியோவென் றால் தன் கணவனான உரியாஸ் மரித்தானென்று கேள்விப்பட்டு அவனுக் காக இழவு கொண்டாடினான்.

27. ஆனால் இழவு நாள் தீர்ந்தான போது தாவீது ஆளை அனுப்பி அவளைத் தன் வீட்டிலே சேர்த்துக் கொண்டான்.  அவள் அவனுக்கு மனைவியாகி அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றனள்.  தாவீது செய்த இந்தக் காரியமோ கர்த்தருடைய பார்வைக்கு மகா அரோசிகமாயிருந்தது.