இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உபாகமம் - அதிகாரம் 11

மோயீசன் தேவன் செய்த மகத்தான கிருத்தியங்களைச் சங்க்ஷேபமாய்ச் சொல்லி நல்லவர்களுக்கு வரும் நன்மைகளையுந் துஷ்டர்களுக்கு வருந் தின்மைகளையும் தெரிவிக்கின்றனன்.

1. ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தரை நேசித்து அவருடைய கற்பனைகளையும் இரீதி ஆசாரங்களளையும் நீதி முறைமைகளையும் பிரமாணங்களையும் எக்காலமும் அநுஷ்டிக்கக் கடவாயாக.

2. உங்கள் குமாரர்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கண்டனைகளையும் அவருடைய மகத்துவங்களையும் வலிய கரத்தையும் ஓங்கிய புஜத்தையும் காணாததினால் அவர்கள் அறியாதவைகளை நீங்களாவது இன்று ஆராய்ந்து பாருங்கள்.

3. அவர் எஜிப்த்தின் நடுவிலே பரவோன் என்னும் அரசனுக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்த அற்புதாதிசயங்களையும்,

4. எஜிப்த்திய எல்லாச் சேனையுங் குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின்தொடர்ந்து வந்தபோது செங்கடல் திரைகள் எழும்பி அவர்களை அமிழ்த்தியதையும் இந்நாள் வரையிலும் கர்த்தர் அவர்களை அழித்ததையும்,

5. நீங்கள் இவ்விடத்திற்கு வரும்மட்டும் அவர் உங்களுக்காக வனாந்தரத்திலே செய்து வந்ததையும்,

6. பூமி தன் வாயைத் திறந்து ரூபனுடைய புத்திரனான எலியாபின் குமாரர்களாகிய தாத்தான், அபிறோன் என்பவர்களையும் அவர்களுடைய வீட்டாரையும், அவர்களுடைய கூடாரங்களையும், இஸ்றாயேல் நடுவில் அவர்களுக்கு உண்டாயிருந்த சமஸ்த பொருட்களையும் விழுங்கினதையும்,

7. கர்த்தர் செய்த இது முதலிய மகத்துவமான செயல்களில் யாவையும் நீங்கள் கண்ணாலே கண்டிருக்கிறீர்கள் அல்லவா?

8.  (ஏன் செய்தாரென்றால்) நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற அவருடைய சகல பிரமாணங்களையும் நீங்கள் கைக்கொண்டு அநுசரிக்கவும், அதினாலே நீங்கள் பிரவேசிக்கப்போகிற பூமியை அடையவும் சுதந்தரித்துக் கொள்ளவும்,

9. கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கும், அவர்களுடைய சந்ததிக்கும் கொடுப்போமென்று அவர்களுக்கு ஆணையிட்டுப் பாலுந் தேனும் ஓடுகியதேசத்தில் நீங்கள் நீடித்து வாழும்படியாகத்தானன்றோ?

10. உள்ளபடி சுதந்தரித்துக் கொள்ளும்படி நீ பிரவேசிக்கப் போகிற தேசமானது நீ விட்டு வந்த எஜிப்த்து தேசத்தைப் போல் அல்லவே ; அங்கே விதை விதைத்த பின்பு தோட்டங்களுக்கு வாய்க்கால்களைக் கொண்டு நீர் பாய்ச்சுகிறது வழக்கம்.

11. இந்தத் தேசமோ மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ள தேசம். இமறஙகு வானத்தின் மழையே வேண்டும்.

12. அதை உன் தேவனாகிய கர்த்தர் எப்பொழுதும் விசாரித்து வருகிறார். வருஷத்தின் துவக்கம் முதல் வருஷத்தின் முடிவு மட்டும் அவருடைய கண்கள் அதன்மேல் வைக்கப் பட்டிருக்கின்றன.

13. ஆதலால் நான் உங்களுக்கு இன்று கற்பிக்கின்ற கட்டளைகட்கு நீங்கள் பணிந்தவர்களாய் உங்கள் தேவனாகிய கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமத்தோடும் நேசித்துச் சேவிப்பீர்-களாகில்,

14. அவர் உங்கள் பூமிக்கு முன் மாரியையும் பின்மாரியையும் பெய்யப் பண்ணுவதால் நீங்கள் தானியத்தையும் திராட்ச இரசத்தையும், எண்ணெயையும், 15. மிருக ஜீவன்களுக்காக உங்கள் வெளிகளில் புல்லையும் சம்பாதித்துக் கொண்டு சாப்பிட்டுத் திருப்தியடைவீர்கள்.

16. உங்களிருதயம் வஞ்சிக்கப் பட்டு நீங்கள் கர்த்தருக்கு முதுகு காட்டி அந்நிய தேவர்களுக்குப் பணிந்து ஆராதனை செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

17. இல்லாவிடில் கர்த்தர் கோபம் கொண்டு வானத்தை அடைத்துப் போட்டாலும் போடலாம். அப்பொழுது மாரியும் பெய்யாமலும், பூமி தன் பலனைத் தராமலுமிருக்கக் கர்த்தர் உங்களுக்குக் கொடுக்க இருக்கிற உத்தமமான தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்து போனாலும் போவீர்களே!

18. நீங்கள் இவ்வாக்கியங்களை உங்கள் இருதயங்களிலும் உங்கள் ஆத்துமத்திலும் பதித்து அவைகளை உங்கள் கைகளிலும் அடையாளமாகக் கட்டி உங்கள் கண்களின் நடுவிலுந் தொங்க விடுங்கள்.

19. நீங்கள் வீட்டிலிருக்கையிலும், வழியில் நடக்கையிலும் படுக்கையிலும் எழும்புகையிலும் அவற்றைத் தியானிக்கச் சொல்லி உங்கள் குமாரர்களுக்கு உபதேசியுங்கள். 

20. அவற்றை உன் வீட்டு நிலைகளிலும் கதவுகளிலும் எழுதுவாயாக.

21. அவ்வாறு செய்து வந்தால் வானமானது பூமியின் மேல் இருக்குந்தனையும் கர்த்தர் ஆணையிட்டு உன் பிதாக்களுக்குக் கொடுப்போமென்று சொல்லிய தேசத்திலே நீயும் உன் புத்திரர்களும் நெடுநாள் வாழ்ந்திருப்பீர்கள்.

22. உள்ளபடி நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை நேசித்து அவருடைய வழிகளிலெல்லாம் நடந்தொழுகி, அவரோடொன்றித்து நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளைக் கைக்கொண்டு அநுசரித்து வருவீர்களாகில், 

23. கர்த்தர் உங்கள் முன்னிலையில் இந்தச் சாதிகளையயல்லாம் சிதறடிப்பார். அப்போது நீங்கள் உங்களிலும் பெருத்த ஜனங்களையும் பலத்த சாதிகளையும் ஆதீனப்படுத்துவீர்கள்.

24. உங்கள் பாதம் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும். வனாந்தரமும் லீபானும் யுப்பிராத்தேஸ் மாநதியுந் தொடங்கி மேற்கிலுள்ள கடல் வரைக்கும் உங்கள் எல்லைகள் விரியும்.

25. உங்களுக்கு முன் எதிர்த்து நிற்பார் ஒருவருமில்லை. தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்த படியே உங்களால் உண்டாகும் கெடியையும் திகிலையும் நீங்கள் காலாலே மிதிக்கும் தேசமெல்லாம் அவர் பரவப் பண்ணுவார்.

26. இதோ இன்று நான் ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உங்களுக்கு முன்பாக வைக்கிறேன்.

27. இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவீர்களாகில் (உங்களுக்கு) ஆசீர்வாதம் (வரும்).

28. உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல் இப்போது நான் உங்களுக்குக் காண்பிக்கிற வழியை விட்டு விலகி நீங்கள் முன் அறிந்திராத அந்நிய தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் (உங்களுக்குச்) சாபம் (வரும்.)

29. நீ வாசம் பண்ணப் போகிற தேசத்தில் கர்த்தர் உன்னைப் பிரவேசிப்பித்த பிற்பாடு கரிஸிம் மலையின் மேல் ஆசீர்வாதத்தையும் எபால் மலையின்மேல் சாபத்தையும் கூறக் கடவாய்.

30. அவைகள் யோர்தான் அப்புறத்தில், சூரியன் அஸ்தமிக்கிற திசைக்குத் திரும்பும் வழிக்கு அந்தண்டை கானானியர் குடியிருக்கிற நாட்டு வெளியிலே கல்கலாவுக்கெதிரே இருக்கின்றன. கல்கலாவோ தூரமாய்ப் பரவா நின்ற ஒரு பள்ளத்தாக்கின் பிரவேசத்திலே இருக்கிறது.

31. நீங்களோவென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்க வேண்டிய தேசத்திலே பிரவேசித்து அதைச் சுதந்தரிக்கத் தக்கதாக யோர்தான் நதியைக் கடந்து போவீர்கள். அதை ஆதீனப் படுத்தி அதிலே குடியிருப்பீர்கள்.

32. இன்று நான் உங்கள் முன்னிலையில் எவ்வித இரீதி ஆசாரங்களையும் நீதிமுறைமைகளையும் ஏற்படுத்துவேனோ, அவைகளை நீங்கள் கைக்கொண்டு நிறைவேற்ற எச்சரிக்கையாயிருக்கக் கடவீர்களாக.