சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 09

பெண்களிடம் நடந்துகொள்ள வேண்டிய விதம்.

1. உன்னுடைய அந்நியோந்நியமுள்ள மனைவி, ஒரு தீய பாடத்தின் துஷ்டத்தனத்தை உன்மட்டில் காட்டாதபடி, அவள் மீது காய்மகாரப்படாதே.

2. ஒரு பெண் உன் அதிகாரத்தினுள் புகுந்து, உன்னை வெட்கப்படுத்தாதபடி, உன் ஆன்மாவின் அதிகாரத்தை அவளுக்குத் தராதே.

3. பல காரியங்களை இச்சிக்கும் பெண்ணின் கண்ணிகளில் நீ சிக்கிக் கொள்ளாதபடி அவளை ஏறெடுத்துப் பார்க்காதே.

4. நடனக்காரியின் வசீகரங்களின் வலிமையால் நீ அழிந்து போகாதபடி, அவளுடைய சகவாசத்தை அதிகம் பயன்படுத்தாதே, அவள் சொல்வதைக் கவனிக்காதே.

5. கன்னிப் பெண்ணின் அழகு உனக்கு ஓர் இடறுகல்லாக இராதபடி அவளை உற்றுநோக்காதே.

6. உன்னையும், உன் சொத்துக்களையும் அழித்து விடாதபடி, எது விஷயத்திலும் விலைமாதருக்கு உன் ஆத்துமத்தைக் கையளிக்காதே; 

7. பட்டணத்தின் மைதானங்களில் சுற்றிப் பார்க்காதே; அதன் தெருக்களில் அங்குமிங்கும் சுற்றித் திரியாதே.

8. தன்னைத்தானே மினுக்கிக் கொண்டிருக்கும் ஸ்திரியினின்று உன் முகத்தைத் திருப்பிவிடு; அழகுள்ள பிறன் மனைவியை நோக்காதே.

9. பெண்ணின் அழகால் அநேகர் அழிந்து போனார்கள்; அவளுடைய அழகால் ஆசாபாசம் அக்கினியைப் போல் பற்றியெரிகின்றது.

10. வேசியான எவளும் வழியிலுள்ள சாணத்தைப்போல் மிதிக்கப்படுவாள்.

11. பிறன் மனைவியின் அழகைக் கண்டு அதிசயித்தவர்கள் அநேகர் தள்ளுண்டுபோனார்கள்; ஏனெனில், அவளுடைய உரையாடல் நெருப்பைப்போல் எரிகின்றது.

12. பிறன் மனைவியோடு ஒரு போதும் உட்கார்ந்திராதே; அவளோடு படுக்கையில் சாய்ந்திருக்காதே.

13. உன் மனம் அவளை நோக்கிச் சரியாதபடிக்கும், உன் இரத்தத்தால் நீ அழிவிற்குள் விழாதபடிக்கும், அவளுடன் மதுவருந்தி உல்லாசமாக உரையாடாதே.

14. பழைய சிநேகிதனைக் கை விடாதே; ஏனெனில் புதியவன் அவனைப்போல் ஆகமாட்டான்.

15. புதிய சிநேகிதன் புதிய இரசத்தைப் போலாம்; இரசம் பழைய தாகும்போது அதை இன்பத்தோடு அருந்துவாய்.

16. பாவியின் மகிமையையும் செல் வங்களையும் பற்றிக் காய்மகாரங் கொள்ளாதே; ஏனெனில் அவனுக்கு வரும் அழிவை நீ அறிய மாட்டாய்;

17. அக்கிரமி நரகம் வரைக்கும் கூட திருப்தியடைவதில்லை என்பதை அறிந்து, அநீதனால் செய்யப்பட்ட தீமையைக் கண்டு திருப்தி கொள்ளாதே. 

18. மரண பயத்தைப் பற்றி நீ சந்தேகம் கொள்ளாதபடி, கொலை செய்யும் வலிமையுள்ள மனிதனை விட்டகன்று தூரத்திலிரு; 

19. அவனிடம் நீ போவாயேயாகில் அவன் உன் உயிரை வாங்காதபடிக்கு தவறேதும் செய்யாதே.

20. அது மரணத்தோடு கொள்ளும் தொடர்பு என்று அறிந்துகொள்; ஏனெனில் நீ கண்ணிகளின் நடுவில் போகிறாய்; பிறரைத் துன்புறுத்து கிறவர்களின் ஆயுதங்கள்மேல் உலவுகிறாய்.

21. உன் பலத்துக்கு ஏற்றபடி, உன் அயலானைப் பற்றி எச்சரிக்கையா யிரு; ஞானிகளையும், விவேகிகளையும்போல் அவனை நடத்து.

22. நீதிமான்கள் உன் விருந்தாளி களாயிருக்கக்கடவார்கள்; உன் மகிமை தேவ பயத்தில் இருக்கக் கடவது.

23. உன் உள்ளத்தில் சர்வேசுர னைப் பற்றிய சிந்தனை இருக்கக் கடவது; உன் உரையாடல் எல்லாம் உன்னத கடவுளின் கட்டளைகளைப் பற்றியதாயிருக்கக்கடவது.

24. கைவினைஞர்களின் கரத்திற் காக அவர்களால் செய்யப்பட்ட பொருட்கள் புகழப்படுகின்றன. மக்களின் தலைவன் தன் பேச்சின் ஞானத்திற்காகப் புகழப்படுகிறான், ஆனால் முதியோரின் வார்த்தையோ அதன் கருத்திற்காகப் புகழ்ப்படு கிறது.

25. அதிகம் பேசுகிறவன் தன் பட்டணத்தில் பயங்கரமுள்ளவன்; யோசனையில்லாமல் பேசுகிறவன் வெறுப்புக்கு ஆளாவான்.