ஆமோஸ் ஆகமம் - அதிகாரம் - 08

தீர்க்கவசனர் உவமையைக் கொண்டு இஸ்றாயேலிய இராசாங்கத்தின் முடிவை வெளிப்படுத்துகின்றார்.

1. எம்பிரானான ஆண்டவர் எனக் குத் தந்த காட்சியாவது: பழங் கொய்யுந் துறட்டைக் கண்டேன்.

* 1-ம் வசனம். ஆண்டவர் துறட்டுக் கோல் கரத்தராய்க் காட்சி தந்ததுக்குப் பொருள்: இஸ்றாயேலெனும் விருட்சத்திய கனிகளாகிய மனிதர்களை உலுக்கிவிடுவது மன்றி, உயர்ந்த கிளைகளில் இருக்கும் கனிகளையும், அதாவது மன்னர்களையுந் துறட்டுக் கோலால் கொய்துவிடுவர் ஆண்டவர் என்றவாறு.

2. அவர் என்னைப் பார்த்து: ஆமோஸ், என்ன காண்கின்றனை எனக் கேட்டனர்; அதற்கு யான்: கனி கொய் யுந் துறடு என விடை பகர்ந்தேன்; அப் போது ஆண்டவர் என்னைப் பார்த்து: நமது பிரசையாகிய இஸ்றாயேல் மீது முடிவு காலம் வந்து விட்டது; இனி அதன் அக்கிரமங்களைத் தண்டியாமல் விடவே மாட்டோம் என்றார்.

3. பின்னுந் தேவனாகிய ஆண்டவர் சொல்வதேதெனில்: அக்காலையில் தேவாலயத்து ஆதாரமான (விசேஷ சுவர்கள்) பெருஞ் சப்தத்தோடு வீழ்வன; திரண்ட சனம் மாண்டுபோம்; எங்கும் பயங்கரமான மெளனங் காக்கப்படும்.

4. எளியனை நாசஞ் செய்கின்றவர்களே, தேசத்து அகதிகளைச் சாகடிப்போரே, இஃதைக் கேளுங்கள்.

5. நாம் சரக்குகளைக் கிராக்கியாய் விற்க (இந்த சுக விலை) மாதம் எப்போ தொழியும் எனவும்; நமது களஞ்சியந் திறந்து குறைந்த படியாலளக்கவும், அக விலை உயர்த்தவும், போலி தராசு படி யால் (பணத்தை) நிறுக்கவும், சாபாட் என்கிற ஓய்வுநாள் எப்போது முடியு மெனவும்,

6. நமது பணத்தால் வறுமையுடை யோரை அடிமைப்படுத்தவும், எளியவர் களை இலவசமாய்த் (தொண்டுகள்) ஆக்கவும், கோதும்பையின் உமித் தவிட்டை நல்ல விலை விற்கவும், செழிப் பான வார தேதிகள் எப்போது துலையு மோவெனவுஞ் சொல்லுபவர்களே சற்று காதுகொடுங்கள்.

7. அவர்கள் அகிர்த்தியங்களை எப் போதும் மறக்கவேமாட்டோம் என ஆண்டவர் யாக்கோபுக்கு விரோதமாய்ச் சத்தியங் கூறினர்.

8. அவைகட்குப் பின் நாடு நிலை பிறழவும், அதின் குடிகள் எல்லாம் பிரலாபிக்கவும், அவர்கள் (இருவரையும் புரண்டோடும்) நதியைப்போல் துலை தூரத்துக்குக் கைதிகளாக ஏறிப் போகவும், எஜிப்த்து நதிச் சலம்போல் சிதறிப் போகவுஞ் சம்பவிக்காதிருக்குமோ?

* 8-ம் வசனம். அவைகட்குப் பின்: அவர்கள் அக்கிரமங்களுக்குப் பின்.

9. அக்காலையில் சூரிய கிரணம் நண்பகலில் அஸ்தமிக்கும்; நாம் உச்சி உருமத்தில் பூமிமீது இருள் படரச் செய்வோம்.

* 9-ம் வசனம். அவர்களுக்கு எவ்வளவு துன்ப துயரங்கள் ஏற்படுமென்றால்: பகல் நேரம் இருள் நேரமாகக் காணப்படுமாம்.

10. அப்பொழுது உங்கள் உற்சவ ஞான்றைக் கண்ணீராகவும், உங்கள் பாடல்களை எல்லாம் புலம்பலாகவும் மாற்றுவோம்; நீங்களெல்லோருஞ் சாக்குத் துண்டைப் போர்த்துக் கொள்ள வும், தலையை முண்டிதமாக்கிக் கொள் ளவுஞ் செய்வோம்; (இஸ்றாயேலை) ஏக குமாரனைப் பலிகொடுத்தானைப்போல் பரதவிக்கவிடுவோம்; அதின் முடிவு மகா கசப்பான காலமாயிருக்குமாமே என்கிறார் ஆண்டவர்.

11. ஒரு காலம் வரும், அப்போது பூமி மீது பஞ்சம் அனுப்புவோம்; அஃது அப்பத்துப் பஞ்சமுமல்ல, சலத்துத் தரித்திரமுமல்ல, ஆண்டவருடைய வாக்கியத்தைக் கேளாதிருத்தலின் (பசியுந் தாகமுமேயாகும்.)

12. ஒரு சமுத்திரந் தொட்டு மறு சமுத்திரம் வரைக்கும், வடதிசை தொடங்கிக் கீழ்த்திசை பரியந்தமும் அவர்கள் கலக்கமுற்றவர்களாய்த் (தீர்க் கத்தரிசியரைக் காண ஓடுவார்கள்;) எங்கும் போய் ஆண்டவருடைய வாக்கி யத்தைத் தேடுவார்களாயினுங் காண மாட்டார்களே.

* 12-ம் வசனம். இப்போது தீர்க்கத்தரிசியருடைய அறிவிப்புக்குக் காதுகொடாதிருக்கிறீர் கள்; நிற்பாக்கியத்தை நிவிர்த்தி செய்துகொள்ள மார்க்கம் இஃது எனக் காட்டினுங் கேளாதிருக்கின்றீர்கள் அப்போது துன்பத்து நடுவில் வேகுகையில், அவர்களைத் தேடுவீர்கள் என விருத்தி உரையாகும்.

13. அக்காலையில் செளந்தரிய கன்னிகைகளும், பால்லியர்களுந் தாகவேட்கையால் வீழ்ந்துபோவார்கள்; (ஒருவனும் அவர்களைத் தாபரிக்கமாட்டான்.)

14. ஏனெனில், அவர்களும் அவர்கள் தாய்தந்தையரைப்போல் “தானே, உன் தேவன் வாழக்கடவர்; பெர்சாபே, உன் (வேத) வழிபாடு வாழக்கடவது” எனச் சமாரியாவின் அக்கிரமத்தினாலேயே சத்தியங் கூறினர் எவர்களோ அவர்கள் மறுபடி எழாவண்ணம் மாண்டுபோவர்களாமே என்கிறார் ஆண்டவர்.