சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 05

ஆஸ்திகளை நம்பலர்காது; சர்வேசுரனுடைய பொறுமையையும் சாந்தகுணத்தையும்பற்றி மிதமிஞ்சின நம்பிக்கை கொள்ளலாகாது; மனந்திரும்பத் தாமதிக்கலாகாது.

1. அநீத உடைமைகள் மீது உன் இருதயத்தை இருத்தாதே; சீவிப்பதற்குப் போதுமானது எனக்குண்டு என்று சொல்லாதே; ஏனெனில் பழி வாங்கும் காலத்திலும் இருளின் காலத்திலும் உனக்கு அவை உதவாது.

2. உன் பலத்தை நம்பி உன் இருதயத் துராசைகளைப் பின்செல்லாதே.

3. நான் எவ்வளவு வல்லமையுள்ளவன்; என் கிரியைகளைப் பற்றி என்னைத் தாழ்த்துபவன் யார்? என்று சொல்லாதே. ஏனெனில் கடவுள் நிச்சயம் பழிவாங்குவார்.

4. பாவஞ் செய்தேன்: அதனால் எனக்குண்டான தின்மை என்ன? என்று சொல்லாதே. ஏனெனில் உன்னத கடவுள் சம்பாவனை அளிப்பதில் பொறுமையுள்ளவர்.

5. பொறுக்கப்பட்ட பாவத்தைப் பற்றி அச்சமற்றிராதே; பாவத்தின் மேற் பாவங் கட்டிக்கொள்ளாதே.

6. ஆண்டவரின் இரக்கம் பெரிதாயிருக்கின்றது; என் எண்ணிறந்த பாவங்களின் மட்டில் இரங்குவார் என்று சொல்லாதே.

7. ஏனெனில் இரக்கமுங் கோபமும் அவரிடமிருந்து விரைவாக வரும். அவருடைய கோபம் பாவிகளை நோக்குகிறது.

8. மனந்திரும்பி ஆண்டவரிடம் சேரத் தாமதியாதே; நாளுக்கு நாள் தாமதஞ் செய்யாதே.

9. ஏனெனில், அவருடைய கோபம் திடீரென வரும்; பழிவாங்கும் காலத்திலோ உன்னைச் சிதறடிப்பார்.

10. அநீதமாய்ப் பெறப்பட்ட பொருட்களைப்பற்றி கவலையாயிராதே; ஏனெனில் பேராபத்தின் நாளிலும் பழிவாங்கும் நாளிலும் அவற்றால் உனக்கு யாதொரு பயனும் உண்டாகாது.

11. காற்றடிக்கும்போதெல்லாம் தூற்றாதே; எல்லா வழிகளிலும் செல்லாதே; ஏனெனில் இவ்வண்ணமே ஒவ்வொரு பாவியும் இரட்டை நாவினால் அறியப்படுகிறான்.

12. ஆண்டவருடைய வழியிலும், உன் தீர்மானத்தின் உண்மையிலும்,

13. கேட்பதைப் புரிந்துகொள்ள, சாந்த குணத்தோடு அதைக் கேள்; ஞானத்தோடு உண்மையான பதிலைக் கொடு.

14. உனக்குத் தெரியுமானால் அயலானுக்கு மறுமொழி சொல்: தகாத காரியங்களைச் சொல்லி அகப்பட்டுக்கொண்டு வெட்கமடையாதபடி உன் கரத்தால் வாயை மூடிக் கொள்.

15. ஞானியின் வார்த்தையில் கனமும் மகிமையுமுண்டு; மூடனின் நாவோ அவனுக்கு அழிவாயிருக்கிறது.

16. கோள்சொல்பவன் என்று பேரெடுக்காதே; உன் வார்த்தையினால் அகப்பட்டுக்கொண்டு வெட்கமடையாதே.

17. ஏனெனில் திருடன்மேல் குழப் பமும், மனவருத்தமும் சுமருகின்றன; இரட்டை நாவுள்ளவன் மீது அவமானத் தின் தீய முத்திரை விழுகிறது; ஆனால், கோள் சொல்பவன் மீது வெறுப்பும், பகையும், கண்டனமும் உண்டாகின்றன.

18. சிறியவனுக்கும் பெரியவனுக் கும் சமமாக நீதி செலுத்துவாயாக.