ஓசே ஆகமம் - அதிகாரம் - 05

பெரியோரைத் தேவன் தண்டிப்பார், --அவர்களை அகோரமாய்ச் சிக்ஷிப்பார்.

1. ஆசாரியரே இஃதைக் கேளுங்கள்; இஸ்றாயேல் வீட்டவர்காள் கவனங் கூருங்கள்; அரண்மனையாரே செவி கொடுங்கள்; நீங்கள் கண்காணிக்க வேண்டியவர்களுக்கு (நீங்களே) கண்ணியுந் தாபோர் மலையிடத்து விரிபடும் வலையுமாய் ஆனீர்கள்; ஆதலின் உங்களுக்குத் தீர்வை சமீபித்திருக்கின்றது.

* 1-ம் வசனம். தாபோர் மலையில் மிருக வேட்டைக்காகக் கண்ணி குத்துவ துண்டு; அதிபதிகளாயிருப்பவர்கள் நன்மாதிரியாயிருத்தல் வேண்டும்; அதற்கு மாறாகப் பிரசைகளுக்குக் கண்ணியைப் போலிருக்கும் பட்சத்தில், இவர்களை விடப் பெருந் தண்டனைக்குப் பாத்திரவான்கள் யாரிருக்கின்றார்கள் என்றவாறு.

2. நீங்கள் நமது பலிகளை (விக்கிரக ஆராதனைப்) படுகுழியில் திருப்பிவிட்டீர்கள்; நாம் அவை எல்லாவற்றையுங் குறித்து அறிக்கை செய்தே வந்தோம்.

* 2-ம் வசனம். பரசாதிப் பெண்ணை விவாகஞ் செய்தல் ஆண்டவருடைய கட்டளைக்கு விருத்துவம்; ஒரு மாதம் என்பது என்பது கொஞ்ச நாளில் எனப் பொருட்படும்.

3. எப்பிராயீம் சங்கதி நாமறிவோம்; இஸ்றாயேல் நடவடிக்கைகள் நமக்கு அதிசயமன்று; ஏனெனில், எப்பிராயீம் இப்போது சோரம் போனதும், இஸ்றாயேல் தீட்டுப்பட்டதும் (நமக்கு வெளிச்சமே.)

4. வியபசாரப் புத்தி அவர்கள் நடு வீற்றிருத்தலானும், ஆண்டவரை அறியாதிருத்தலானும் அவர்கள் தம் தேவனிடந் திரும்பி வரச் சிந்தனை கொள்ளார்கள் (போலும்.)

5. இஸ்றாயேலின் முகத்திய அகங்காரமானது அவர்கள் தண்டனைக்கு மறுவுத்தரமாகும்; இஸ்றாயேலும் எப்பிராயீமும் தம் அக்கிரமத்தில் ஒருங்கே வீழ்வர்; யூதாவும் அவர்களோடு அதோகதியாகும்.

6. (அப்போது) தங்கள் ஆடு மாடுகள் பலியால் ஆண்டவரைத் தேடிப் போவார் கள்; அவரைக் கண்டடையமாட்டார் கள்; ஏனெனில், அவர்களை விட்டு அவர் (முன்னமே) விலகிப் போயினர்.

7. அவர்கள் பரஸ்திரீ பிள்ளை களைப் பெற்றதால் ஆண்டவரை மீறி னர்கள்; ஆதலின் அவர்கள் ஒரு மாதத் தில் தம் சொத்து சுதந்தரங்களோடு அழிக்கப்படுவார்கள்.

8. (இதோ உங்கள் சத்துராதிகள்!) கபாஹாவில் கொம்பு ஊதுங்கள்; இராமா வில் எக்காளந் தொனிக்கச் செய்யுங்கள்; பெத்தாவோனில் கூக்குரல் போடுங்கள்; பெஞ்சமீன் (நீயும் எருசலேம் வரைக்கும்) உன் பின்னே சப்தம் போட்டு அபயமிடு.

9. தண்டனை நாளதனில் எப்பிரா யீம் உபத்திரியப்படும்; இஸ்றாயேல் கோத்திரத்தவருக்கு (யாமிட்ட தண்டனையால் நமது வாக்கு) நிர்ணயத்தைக் காட்டியிருக்கின்றோம்.

* 9-ம் வசனம். வியபசாரத்தை நிகர்த்த விக்கிரக ஆராதனையைக் குறித்து இஸ்றாயேல் குருக்களுக்கும், பிரசாதிபதிகளுக்கும், இராச கூட்டத்தவருக்குங் கடவுள் பயமுறுத்துகின்றார்.

10. யூதாவின் அதிபர் நிலம் அபகரிப் பவராய் ஏற்பட்டுள்ளார்; அவர்கண்மீது நமது கோபாக்கிரமத்தை சலம்போல் ஊற்றுவோம்.

11. எப்பிராயீம் இல்லாத குற்றமெல்லாஞ் சாட்டப்பட்டு அநியாயத் தீர்ப்படைவன்; ஏனெனில், அவன் கசுமாலத் துக்குப் பின் போக ஏற்பட்டனன்.

12. எப்பீராயீமுக்கு யாம் செல்லு பூச்சி போலும், யூதாவுக்குப் புண்ணழிவு போலும் இருக்கின்றோம்.

13. எப்பிராயீமுந் தன் வலியைக் கண்டு கொண்டனன்; யூதாவுந் தன் தளை பாரத்தை உணரலாயினன்; எப்பி ராயீம் அசூர் இடத்தில் (அடைக்கலம்) புக, யூதா தன்னைக் காக்கும்படி ஓர் அரசனைத் தேடினன்; அவன் உங்களைச் சொஸ்தப்படுத்தவும், உங்களிடமிருந்து தளையை அகற்றவும் ஏலாது போயினன்.

14. ஏனெனில், நாம் எப்பிராயீமுக்கு ஓர் பெண் சிங்கத்தை நிகர்த்தும், யூதா வீட்டவருக்கு இளஞ் சிம்மம் போன்று மிருப்போம்; நாமே (சிம்மமாகிய) நாமே இரை பொருளைக் கவருவோம்; அதைப் பிடித்துக் கொண்டு வருவோம்; ஆனால் நம் கரத்தினின்று அதைப் பறித்துக் கொள்வான் ஒருவனுமிரான்.

15. நாம் பின்பு நம்மிடந் திரும்பி, நீங்கள் (முழுதும்) சோர்ந்து, நமது சமுகத்தைத் தேடுந்தனையுங் காத்திருப்போம்.

* 15-ம் வசனம். யூதா மன்னர்கள் இஸ்றாயேல் அடைந்த தண்டனையால் நற்படிப்பினை அடையாது மென்மேலும் பாபத்தைக் கட்டிக்கொண்டு வந்ததால், ஆண்டவர் அவர்களுந் தண்டிக்கப்படுவார்களென்றும், மனித உதவியைத் தேடுவது அப்பிரயோசனமென்றும், மனந்திரும்பி தம்மிடம் வருந்தனையுஞ் சகல துன்பங்களாலும் வாட்டுவதாயுஞ் செப்புகின்றார்.