ஓசே ஆகமம் - அதிகாரம் - 03

நாளது இஸ்றாயேலின் அந்தஸ்தைக் காட்டும் உவமை, - உலக முடிவிலே யூதர்கள் சத்தியவேதத்திலே உட்படுவர்.

1. ஆண்டவர் என்னைப் பார்த்து: இஸ்றாயேல் மக்களைப் பர தேவர்களை ஆசரிக்கையிலும், அவர்கள் திராட்ச இரசத்தின் வண்டலை அபேட்சிக்கையிலும் நீ போய் வேறொருவனால் ஸ்நேகிக்கப்பட்டவளும், வியபசாரியுமான ஒரு ஸ்திரீயை ஆண்டவர் இஸ்றாயேல் மக்களை ஆசிப்பதுபோல் நேசிப்பாயாகவென்றார்.

2. நான் அவளைப் பதினைந்து வெள்ளி நாணயத்திற்கும், ஒன்றரைப் பொதி வாற்கோதும்பைக்கும் பெண் கொண்டு,

3. அவளைப் பார்த்து: நீ வேசையாய்த் திரியாமலும், ஒருவனை வணங்காமலும் நெடுநாள் எனக்குக் காத்திருப்பாயாக; நானும் அங்ஙனமே காத்திருப்பேன் என்றேன்.

4. ஏனெனில், இஸ்றாயேல் மக்கள் வெகு காலம் அரசனின்றி, அமைச்சுமின்றி, பலியின்றி, பீடமுமின்றி, ஆசாரியனின்றி குருவுமின்றி (வெறுமனே) கிடப்பார்கள்.

5. அதற்குப் பின் இஸ்றாயேல் மக்கள் மனந்திரும்பித் தங்கள் தேவனாகிய ஆண்டவரையும், தம் அரசராகிய தாவீதென்போரையுந் தேடி, கடைசி நாட்களில் ஆண்டவரையும், அவருடைய பிரசாதங்களையும் பயபக்தியோடு பெற்றுக் கொள்வார்கள்.

* 1-5-ம் வசனம். சினாகோக் எனும் வரிவேதத் திருச்சபை வியபசாரத்துக் கொத்த விக்கிரக ஆராதனையால் கறைபட்டிருந்தும், அதை ஆண்டவர் நேசித்தே வந்தார்; இஸ்றாயேலருடைய அடிமைத்தன காலம் அளவாகக் காத்துமிருந்தார்; கடைசியாக அத்திருச்சபை சத்திய சபையாகி ஆண்டவரையும், தாவீது கோத்திரத் திலகனாகிய கிறிஸ்துவையும், அவரடைந்த பேறுபலன்களையும் பெற்றதற்கு முன் காட்சி விளங்ககிறது.