ஆமோஸ் ஆகமம் - அதிகாரம் - 03

தேவ தண்டனை இஸ்றாயேலின் பேரில் அகத்தியமாய் வருமென்பது.

1. இஸ்றாயேல் மக்களே! உங்களைக் குறித்தும், எஜிப்த்து தேசத்தினின்று நாம் புறப்படச் செய்த உங்கள் எல்லா உறவினரைக் குறித்தும் ஆண்டவர் செப்பலுற்ற வசனங்களைக் கேளுங்கள்; அவர் சொல்வது:

* 1-ம் வசனம். இவ்வசனத்தில் இஸ்றாயேலைக் குறித்து மாத்திரமல்ல, யூதாவைக் குறித்தும் ஆண்டவர் பேசுவதாக இயெரோணிமூஸ் எனும் வேத வியார்த்திகர் எண்பிக்கின்றார்.

2. பூதலத்து சகல சாதி சனங்களிலும் உங்களை மாத்திரம் யாம் (நன்மை செய்ய) தெரிந்து கொண்டோம்; ஆனது முன்னிட்டே உங்களெல்லா அக்கிரமங்களுக்காக உங்களைக் (கடினமாய்த்) தண்டிப்போம்.

3. ஒருவனோடோருவன் பொருந் தாதிருக்க, இருவர் சேர்ந்து நடப்பதெங்ஙனம்?

* 3-ம் வசனம். ஆண்டவர் சொல்தொன்றும், பிரசை நடப்பது வேறுமாயிருந்தால் ஸ்நேக பாகம் ஏற்படுமோ? ஆண்டவர் அச்சனத்தோடிருக்க இஷ்டங் கொள்வரோ என்பது கருத்து.

4. கானகத்தில் சிம்மம் இரையைக் கைக்கொள்ளாதிருக்கக் கர்ச்சிப்ப துண்டோ? யாதொன்றையும் பிடிக் காமல் சிங்கக் குட்டி எழுந்து சப்தம் போடுமோ?

* 4-ம் வசனம். சிங்கம் பசியால் வாடியிருக்கையிலும், தீனி கிடைத்த சமயத்திலுங் கர்ச்சிப்பது சகஜம்; தீர்க்கத்தரிசியர் இங்கு இரண்டாஞ் சமயத்தைக் குறித்துப் பேசுகின் றனர்; இதின் கருத்து யாதெனில்: சிங்கம் இரை அகப்பட்டதுங் கர்ச்சிப்பது வழக்கமென்று அறிந்து சனங்கள் சிங்க கர்ச்சனை கேட்டதும் சிங்கத்துக்கு நல்ல இரை கிடைத்தாற்போல் தோன்றுகிறது என எண்ணுவார்கள்; அதுபோல ஆண்டவர் கர்ச்சித்து, பயமுறுத்துகையில் ஆண்டவருடைய தண்டனை சமீபித்துவிட்டது என உணர வேண்டும் என்கிறார் தீர்க்க வசனர்.

5. பறவை வேடன் வலையைத் தரையில் விரிக்காதிருக்க, வலையில் குருவி வீழ்வதுண்டே? ஒன்றும் பிடிபடாததற்கு முன்னரே, தரையினின்று கண்ணி எடுபடுமோ?

6. பட்டணத்தில் எக்காளம் ஒலிக் கச்சே, பிரசை திகில்கொள்ளாதிருக் குமோ? ஆண்டவர் அனுப்பாதிருக்கத் தின்மை பட்டணம் புகுமோ?

* 6-ம் வசனம். ஆண்டவர் அனுப்பாமல், மனிதனுக்குப் பஞ்சம், படை, கொள்ளை நோய் முதலியவைகள் வராது; இஸ்றாயேல் சனம் இதை உணராதிருப்பதென்னே என்பது கருத்து.

7. தம் அடியராகிய தீர்க்கத்தரிசி யருக்குத் தம் மர்மத்தை வெளியிடாது, தேவனாகிய ஆண்டவர் ஒரு காரியத்தையும் நடத்துகின்றாரில்லை.

8. சிம்மம் கர்ச்சிக்கப் பயங்கொள் ளான் யாவன்? ஆண்டவர் பேசியிருக்க, காட்சி கூறாதிருப்பவன் எவன்?

9. (ஆண்டவர் என்னை நோக்கி:) நீ அசோத் வீடுகளிலும், எஜிப்த்து தேச மாளிகைகளிலும் இதனை அறிவி; (நீ அவர்கட்கு): சமாரியா பர்வதங்களின் கண் ஒன்றுகூடுங்கள்; அதின் நடுவே நடக்கும் எண்ணிறந்த மதிகேடுகளையும், அதில் எங்ஙனம் மாசற்றவர்கள் அபதூறால் உபத்திரிக்கப்படுகின்றனர் எனவும் பாருங்கள் எனச் சொல்வையாக (என்றார்.)

10. நீதியானதைச் செய்ய வகையறிந்தார்களில்லை; அவர்கள் தம் இல்லத்தில் அக்கிரமத்தினாலும், கொள்ளையினா லுந் திரவியஞ் சேர்க்கின்றார்கள்.

11. ஆகையால் ஆண்டவர் சொல்வதேதெனில்: (இஸ்றாயேல்) நாடு காலால் துவைக்கப்படும்; அது (சத்துருக்களால்) சூழப்படும்; உன் செல்வ பலம் உன்னினின்று எடுக்கப்படும்; உன் மாளிகைகள் கொள்ளையாடப்படுவன.

12. இதோ ஆண்டவர் சொல்வது: சமாரியாவில் இன்பத்திலும், தமாஸ்கில் செல்வ சவுக்கியத்திலுஞ் சீவிக்கும் இஸ்றாயேல் புத்திரர்களில் (சொற்பப் பேர்கள்) தப்பித்தால், அது கோனான் சிங்கத்து வாயினின்று (ஆட்டின்) இரு சப்பைகளையும், காது நுனியையும் பிடித்திழுப்பது போலாம்.

13. (தீர்க்கத்தரிசியரே!) இதைக் கேளுங்கள்; யாக்கோபு வீட்டவர்க்கு தாட் டிகமாய் வெளிப்படுத்துங்கள் என்கிறார் சேனைகளின் தேவனாகிய ஆண்டவர்.

14. (அதாவது:) நாம் இஸ்றாயேலைக் கட்டளை மீறும் பாபத்திற்காகத் தண்டிக்க ஆரம்பிக்கையில், அதின்பேரிலும், பேட்டேல் பீடங்கள்பேரிலும் நமது பழியைச் செலுத்துவோம்; (அந்தப்) பீடங்களின் கொம்புகள் பிடுங்கப்பட்டுக் கீழே எறியப்படுவன.

15. (பிரபுக்களின்) குளிர்காலத்திய மாளிகைகளையும், வேனில் காலத்திய அரண்மனைகளையும் விழத்தாட்டுவோம்; தந்தங்கள் இழைத்த வீடுகள் ஒழிந்து போவன; எண்ணிறந்த கட்டடங்களும் நாசமாக்கப்படுவன என்கிறார் ஆண்டவர்.