சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 03

ஞானத்தைப் பின்செல்லுகிறவர்களுடைய குணம்.

1. ஞானத்தின் மக்கள் நீதிமான்களின் திருச்சபையாயிருக்கிறார்கள்; அவர்களின் சந்ததி கீழ்ப்படிதலும் சிநேகமுமாம்.

2. பிள்ளைகளே! உங்கள் தந்தையின் புத்திமதியைக் கேட்டு நீங்கள் இரட்சணியமடையும்படி அதன்படி நடந்து வாருங்கள்.

3. ஏனெனில் பிள்ளைகள் தந்தையைச் சங்கிக்க வேண்டுமென்றும், தாய்மாரின் புத்திமதியைத் தேட வேண்டுமென்றும் நியமித்து, அதைப் பிள்ளைகளின் மேல் உறுதிப்படுத்தி யிருக்கிறார்.

4. சர்வேசுரனை நேசிக்கிறவன் தன் ஜெபத்தால் தன் பாவத்திற்கு மன்னிப்புப் பெற்று, அவைகளைத் தன்னிடமிருந்து விலக்குவான். அவனுடைய நாட்களின் ஜெபம் கேட்கப்படும்.

5. தன் தாயைச் சங்கிக்கிறவன் ஒரு பொக்கிஷத்தைச் சேர்த்து வைக்கிறவன் (போல வாழ்வான்) 

6. தன் தந்தையைச் சங்கிக்கிறவன் தன் சொந்த மக்களில் சந்தோஷமடைவான்; தனது ஜெபத்தின் நாளில், அவனுடைய வேண்டுதல் கேட்கப்படும்.

7. தன் தந்தையைச் சங்கிக்கிறவன் நெடுங்காலம் சீவிப்பான்; தன் தந்தைக்குக் கீழ்ப்படிகிறவன் தன் தாய்க்குத் தேற்றரவாக இருப்பான். 

8. தெய்வ பயமுள்ளவன் தந்தை தாயைச் சங்கிக்கிறான்; தன்னை ஈன்றவர்களுக்கு எஜமானர்களுக்குச் செய்வதுபோல் ஊழியம் செய்வான்.

9. செயலிலும் வார்த்தையிலும் முழுப் பொறுமையிலும் உன் தந்தைக்குச் சங்கை செய்.

10. அதனால் உனக்கு அவனுடைய ஆசீர்வாதம் கிடைக்கும்; அவன் ஆசீர் வாதமும் உன் இறுதிக் காலத்தில் உன்மீது தங்கியிருக்கும்.

11. தந்தையின் ஆசீர்வாதம் பிள்ளைகளின் இல்லங்களை நிலைநாட்டும்; தாயின் சாபமோ பிள்ளைகளுடைய இல்லங்களின் அஸ்திவாரத்தைப் பிடுங்கி விடும்.

12. உன் தகப்பனுக்குண்டாகும் நிந்தையில் நீ பெருமை கொள்ளாதே; ஏனெனில் அவனுடைய அவமானம் உனக்கு பெருமையல்ல.

13. ஏனெனில் தந்தை மதிக்கப் படுவது ஒருவனுக்கு மகிமை, மதிப் பற்ற தந்தை மகனின் அவமானம்.

14. மகனே! உன் தந்தையின் முதிர்வயதில் அவனை ஆதரி; அவன் சீவிய காலத்தில் அவனை மனம் நோகச் செய்யாதே. 

15. அவன் புத்தி சுயாதீனம் குறைந் தால், பொறுமையாயிரு; நீ பலமுள் ளவனாயிருக்கும்போது, அவனைப் நிந்திக்காதே; ஏனெனில் தகப் பனுக்குக் காண்பிக்கப்படும் இரக்கம் ஒருபோதும் மறக்கப்படாது.

16. உன் தாயின் குற்றங்களைச் சகிப்பது உனக்கு நன்மையா யிருக்கும்.

17. ஏனெனில் நீதியில் நீ கட்டி யெழுப்பப்படுவாய்; உன் துன்ப நாட்களில் நீ நினைவுகூரப்படுவாய்; உஷ்ணத்தில் பனி உருகிப்போவதுபோல் உன் பாவங்களும் உருகிப் போகும்.

18. தன் தந்தையைப் புறக்கணித்து விடுகிறவன் எவ்வளவோ நிந்தைக் குரியவன்; தன் தாயைக் கோபப் படுத்துகிறவன் சர்வேசுரனால் சபிக்கப்பட்டவன்.

19. என் மகனே! உன் செயல்களை சாந்த குணத்தோடு செய்வாயாகில் மனிதரின் மகிமைக்கு மேலாக நீ நேசிக்கப்படுவாய்.

20. எவ்வளவுக்கு நீ பெரியவனா யிருக்கிறாயோ அவ்வளவுக்கு சகலத்திலும் உன்னைத் தாழ்த்து; அப்போது சர்வேசுரனுடைய சமுகத்தில் வரப்பிரசாதத்தைக் கண்டடைவாய்.

21. ஏனெனில் சர்வேசுரனுடைய வல்லமை மட்டுமே மேன்மையுள்ளது; அவர் தாழ்ச்சியுள்ளவர்களால் மகிமைப்படுத்தப்படுகிறார்.

22. உனக்கு எட்டாத உயரத்திலுள்ள காரியங்களைத் தேடாதே; உன் திறமைக்கு மேலானவைகளை நீ கண்டறிய நாடாதே; ஆனால் சர்வே சுரன் உனக்குக் கட்டளையிட்டிருப் பவைகளை எப்போதும் நினைத்துக் கொள்: அவருடைய செயல்களில் பலவற்றில் வினோதப் பிரியம் கொள்ளாதே.

23. ஏனெனில் மறைவான காரியங்களை உன் கண்களால் காண்பது உனக்கு அவசியமில்லை.

24. அவசியமற்ற காரியங்களைப் பற்றி வினோதப் பிரியம் கொள்ளாதே; அவர் கைவேலைகளில் அநேகமானவைகளை ஆராய விரும்பாதே.

25. ஏனெனில், மனிதர் புத்திக் கெட்டாத அநேக காரியங்கள் உனக் குக் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.

26. அவைகளைப் பற்றிய சந்தேகம் அநேகரை ஏமாற்றி, அவர்களுடைய மனங்களை வீண் பெருமையில் சிறைப்படுத்தியது.

27. ஒரு கடின இருதயம் இறுதியில் தான் தீமைக்கு அஞ்சும்; ஆபத்தை நேசிப்பவன் அதிலேயே அழிவான்.

28. இரு வழிகளில் செல்லும் இருதயம் வெற்றியடையாது; தீய இருதயம் அவற்றில் இடறலடையும். 

29. துஷ்ட இருதயம் துயரங்களின் பாரத்தைச் சுமக்கும். பாவியானவன் பாவத்தின்மேல் பாவங் கட்டிக் கொள்வான்.

30. ஆங்காரிகளுடைய கூட்டம் குணப்படுத்தப்படாது; ஏனெனில் துர்ப்புத்தியின் செடி அவர்களில் வேரூன்றும், அதை அவர்கள் உணர மாட்டார்கள்.

31. ஞானியின் இருதயம் ஞானத் தில் புரிந்துகொள்ளப்படுகிறது; நல்லவனின் செவி ஞானம் கூறுவதை முழு ஆசையோடு கேட்கும்.

32. ஞானமும் புத்தியுமுள்ள இருதயம் பாவத்தை விலக்கும்; நீதியின் செயல்களில் அது வெற்றி கொள்ளும்.

33. எரிகிற நெருப்பைத் தண்ணீர் அணைக்கின்றது; தானதருமம் பாவத்தைத் தவிர்க்கிறது.

34. தயவு காட்டுபவனுக்குத் தேவை யானதைக் கடவுள் அவனுக்குத் தருகிறார். பிற்காலத்தில் அவர் அவனை நினைவுகூர்கிறார். அவன் விழும் நேரத்தில், ஓர் உறுதியான ஊன்றுகோலை அவன் காண்பான்.