இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உபாகமம் - அதிகாரம் 03

இதுவுமது.--ஓக் அரசன் செயிக்கப் பட்டதும்--இரண்டரை கோத்திரங்களுக்குக் கொடுக்கப் பட்ட தேசமும்--கானான் தேசத்தைப் பார்க்க மோயீசனுக்கு உத்தரவு கொடுக்கப் பட்டதும்.

1. பின்பு நாம் திரும்பிப் பாஸானுக்குப் போகும் வழியாய்ச் செல்லுகையில், பாஸானின் அரசனாகி ஓக்கென்பவன் தன்னுடைய சமஸ்த சனங்களோடும் புறப்பட்டு நம்மோடு எதிர்த்து யுத்தம் பண்ணும்படி எதிராய்க்கு வந்தான்.

2. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ அவனுக்கு அஞ்சாதே. அவனையும் அவன் சகல ஜனங்களையும் அவன் தேசத்தையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தோம். ஏயஸபோனிலே குடியிருந்த அம்மோறையருடைய இராசாவாகிய செகோனுக்கு நீ செய்தது போல இவனுக்கும் செய்வாயயன்றருளினார்.

3. அவ்வாறே நம்முடைய தேவனாகிய கர்த்தர் பாஸானின் இராயனாகிய ஓக்கையும் அவனுடைய சகல சனங்களையும் நமது கையில் ஒப்புக் கொடுத்தமையால் நாம் அவர்களெல்லோரையும் வெட்டிச் சங்காரம் பண்ணினோம்.

4. ஒரே காலத்தில் அவனுடைய பட்டணங்களையயல்லாம் பிடித்து அழித்துப் போட்டோம். அதுகளில் நாம் பிடிக்காத பட்டணம் ஒன்றுமில்லை. பாஸானிலிருந்த ஓக்கின் இராச்சியமான அறுபது பட்டணங்களையும் பிடித்து அர்கோப் நாடு முழுவதையும் காடாக்கி விட்டோம்.

5. அந்தப் பட்டணங்களெல்லாம் மிகவும் உயர்ந்த மதில்களாலும் வாசல்களாலும் தாழ்ப்பாள்களாலும் அரணிக்கப்பட்டிருந்தன. அன்றியும் மதில்களல்லாத நகரங்களும் அநேகமிருந்தன.

6. நாம் ஏயஸபோனின் இராயனான செகோனுக்குச் செய்திருந்தது போல் அந்தப் பட்டணங்களையும் அழித்து அதுகளிலுள்ள ஸ்திரீ புருஷர்களையும் பிள்ளைகளையும் அதம் பண்ணினோம்.

7. ஆனால் ஆடுமாடுகளையும் பட்டணங்களில் அகப்பட்ட ஆஸ்திகளையும் பறித்துக் கொண்டு போனோம்.

8. இப்படியே யோர்தானுக்கு இந்தப் புறத்திலிருக்கிற அர்னோன் நதி துவக்கி ஏர்மோன் மலைமட்டும் அமோறையருடைய இரண்டு இராசாக்களின் தேசத்தைப் பிடித்தோம். 

9. அந்த ஏர்மோன் மலையைச் சிதோனியர் சரியோன் என்றும் அமோறையர் சனீர் என்றும் அழைக்கிறார்கள்.

10. சம பூமியிலுள்ள சகல நகரங்களையும் பாஸான் இராயனான ஓக்கென்பவனுடைய பட்டணங்களாகிய செல்கா எதிராயி வரையிலுமுள்ள கலாத்தின் நாடு பாஸானின் நாடு முழுவதையும் (பிடித்தோம்.)

11. ஏனென்றால் இராட்சத வம்சத்தாருக்குள்ளே பாஸானின் இராயனாகிய ஓக் என்பவன் மாத்திரம் மீந்திருந்தான். அம்மோன் புத்திரரைச்சேர்ந்த ரப்பாத் என்கிற நகரிலே இரும்பினால் செய்யப்பட்ட அவனுடைய கட்டில் இருக்கிறது. அது மனிதனுடைய கைமுழத்தின் அளவுப்படி ஒன்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருக்கிறது.

12. நாம் அந்தக் காலத்திலே சுதந்தரித்த தேசம் அர்னோன் ஆற்றங்கரையிலுள்ள ஆரோவேர் துடங்கிக் கலாத் மலைநாட்டில் பேர்பாதி மட்டும் விரியும். அதிலிருந்த பட்டணங்களை ரூபன் கோத்திரத்தாருக்கும் காதின் கோத்திரத்தாருக்கும் கொடுத்தேன்.

13. கலாத்தின் மற்ற பங்கையும், ஓக்கின் இராச்சியமாயிருந்த பாஸான் தேச முழுவதையும், அர்கோப் சீமை முழுவதையும் மனாஸேயுடைய பாதி கோத்திரத்திற்கு ஒப்பித்து விட்டேன். பாஸான் முழுவதுமே இராட்சத் தேசமென்று அழைக்கப் பட்டிருக்கிறது.

14. மனாஸேயின் புத்திரனாகிய ஜயீரென்பவன் அர்கோப் நாட்டை முழுவதையும் ஜெசூரி எல்லையும் மாக்காத்தி எல்லையும் மட்டும் சுதந்தரித்துக் கொண்டு பாஸானைத் தன் பெயரின்படியே ஆவோட் ஜயீர் என்றழைத்தான். ஆவோட் ஜயீரென்பது ஜயீருடைய நகரமென்பதாம். இநதப் பேர் இந்நாள் வரைக்கும் வழங்கி வருகிறது.

15. மக்கீருக்குங் கலாதைக் கொடுத்தேன்.

16. ஆனால் அர்னோனென்னும் நதி மட்டுமுள்ள கலாத் சீமையில் ஒரு பங்கையும் அர்னோன் நடு ஆறும், அவற்றின் அருகேயுள்ள நாடுந் துவக்கி அம்மோன் புத்திரருடைய எல்லையாகிய ஜாபோக் என்னும் ஓடை வரைக்கும் விரியாநின்ற சீமையையும்,

17. வனாந்தரத்திலுள்ள வெளியையும் யோர்தானையும், அதியுவர்க்கடலாகிய செங்கடல் மட்டுமுள்ள செனெரேட்டின் எல்லைகளையும், கீழ்த்திசையை நோக்கும் பிஸ்கா மலைக்கடுத்த நாட்டையும் ரூபன் கோத்திரத்தாருக்கும் காதின் வம்சத்தாருக்கும் கொடுத்தேன்.

18. அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு இந்தத் தேசத்தைச் சுதந்தரமாகத் தருகிறார். யுத்தத்துக்குத் தக்க புருஷராகிய நீங்கள் அனைவரும் ஆயுதம் அணிந்தவர்களாய் உங்கள் சகோதரராகிய இஸ்றாயேல் புத்திரருக்கு முன்னே நடந்து போங்கள்.

19. உங்கள் மனைவிகளையும் உங்கள் பிள்ளைகளையும் (உங்களுக்குத் திரளான மந்தைகள் உண்டென்றறிவேன்.) அந்த ஆடுமாடுகளையும் நான் உங்களுக்குக் கொடுத்த பட்டணங்களிலே இருக்கச் சொல்லி,

20. கர்த்தர் உங்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தது போல அவர் உங்கள் சகோதரரையும் இளைப்பாறப் பண்ணி அவர்களுக்கு யோர்தானுக்கு அப்புறத்தில் கொடுக்கப் போகிற தேசத்தை அவர்கள் சுதந்தரித்துக் கொள்ளும் வரைக்கு; நீங்கள் (பாளையத்தில்) இருந்து, பிறகு அவரவர் நான் கொடுத்த சுதந்தரத்திற்குத் திரும்பி வருவீர்களென்று கட்டளை கொடுத்தேன்.

21. அக்காலத்திலேயும் நான் ஜோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த இரண்டு அரசர்களுக்கும் செய்தவைகளை நீ உன் கண்ணாரக் கண்டாயல்லோ. நீ போய்ச் சேர வேண்டிய எல்லா இராச்சியங்களுக்கும் அவர் அவ்விதமே செய்வாராகையால்,

22. நீ அவர்களுக்குப் பயப்படாதே. உங்கள் தேவனாகிய ஆண்டவரே உங்கள் பாரிசத்தில் யுத்தம் பண்ணுவார் என்றேன்.

23. அக்காலத்திலே நான் கர்த்தரை நோக்கி:

24. தேவனாகிய கர்த்தரே, தேவரீர் அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் சர்வ வல்ல கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீரே. தேவரீர் செய்து முடித்த கிரியைகளுக்கும் காண்பித்த வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யத்தக்க வேறு தேவன் வானத்திலுமில்லை, பூமியிலுமில்லை.

25. நான் யோர்தானைக் கடந்து அப்புறத்திலுள்ள உத்தமமான அந்தத் தேசத்தையும், அழகிய மலையையும், லீபான் பர்வதத்தையும் கண்ணாரக் கண்டு மகிழ்வேனென்று வேண்டிக் கொண்டேன்.

26. கர்த்தரோவென்றால், உங்கள் நிமித்தம் என்மேல் சினந்தவராய் என் மனுவைக் கேட்டருளினாரில்லை ; என்னைப் பார்த்து: போதும், இனி இந்தச் சங்கதியைக் குறித்து நம்மோடு பேச வேண்டாம்.

27. நீ பாஸ்கா மலையின் கொடுமுடியிலேறி உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும், கிழக்கிலும் திருப்பிப் பார். ஏனெனில், யோர்தான் நதியை நீ கடந்து போவதில்லை.

28. நீ ஜோசுவாவுக்குப் புத்தி போதனையைச் சொல்லி அவனைத் திடப்படுத்துவாயாக! அவனே இந்தச் சனங்களுக்குத் தலைவனாகி நீ காணப் போகிற தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பான் என்றருளினார்.

29. பின்பு போகர் என்னும் தேவாலயத்துக்கு எதிரான பள்ளத்தாக்கிலே தங்கித் தரித்தோம்.