சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 02

தவத்துக்கேவுதல், ஆண்டவருக்குப் பயந்து அவர்மட்டில் தங்களுடைய நம்பிக்கை வைக்கிறவர்களுடைய பாக்கியம்.

1. மகனே! நீ தேவ ஊழியத்துக்கு வரும்போது, நீதியிலும் தெய்வ பயத்திலும் நிலைகொண்டு பாவ சோதனைக்குத் தப்ப உன் ஆத்துமத்தை ஆயத்தப்படுத்து.

2. உன் இருதயத்தைத் தாழ்த்தி அமைதலாயிரு; செவிசாய்த்து, புத்தியின் வார்த்தைகளைப் பெற்றுக்கொள்; கலக்க சமயத்தில் ஆத்திரப்பட்டு யாதொன்றுஞ் செய்யாதே.

3. பொறுமையோடு சர்வேசுரனுக் குப் பணிவிடை செய்; அவரோடு ஒன்றித்து கடைசியில் உன் சீவியம் விருத்தியாகும்படி பொறுமையாயிரு.

4. உனக்கு நிகழ்வதெல்லாவற்றையும் உன்மீது ஏற்றுக்கொள்; உன் துயரத்தை சகித்துக்கொள், உன் அவமானத்தில் பொறுமையாயிரு.

5. ஏனெனில் பொன்னும் வெள்ளியும் நெருப்பில் புடமிடப்படுகின்றன, மனிதரோ அவமானத்தின் உலையில் புடமிடப்படுகிறார்கள்.

6. சர்வேசுரனை நம்பு, அவர் உன்னைக் குணமாக்குவார்; செவ்வழியில் செல், தெய்வபயத்தைக் காத்துக் கொள்; அதில் முதிர்ச்சி பெறு.

7. ஆண்டவருக்குப் பயப்படுகிறவர்களே, அவருடைய இரக்கத்துக்காகக் காத்திருங்கள்; விழுந்துவிடாதபடி அவரிடமிருந்து விலகாதீர்கள்.

8. ஆண்டவருக்குப் பயப்படும் நீங்கள் அவரை நம்புங்கள்; உங்கள் சம்பாவனை வெறுமையாய்ப் போகாது.

9. ஆண்டவருக்குப் பயப்படும் நீங்கள் அவரை நம்புங்கள்; நீங்கள் இன்பங் கொள்ளும்படி, இரக்கம் உங்களிடம் வரும்.

10. ஆண்டவருக்குப் பயப்படும் நீங்கள் அவரை நேசியுங்கள்; உங்கள் இருதயங்கள் பிரகாசிப்பிக்கப்படும்.

11. என் மக்களே! மனிதர்களின் சந்ததிகளைப் பாருங்கள்; ஆண்டவரை நம்பின எவனும் கலங்கினதில்லையென்று கண்டறியுங்கள்.

12. ஏனெனில் அவரது கட்டளைகளில் நிலைநின்றவன் எவன் கைவிடப்பட்டான்? அவரை மன்றாடினவன் எவன் புறக்கணிக்கப்பட்டான்? 

13. ஏனெனில் ஆண்டவர் தயையும் இரக்கமும் உள்ளவர், துன்ப நாளில் பாவங்களை மன்னிப்பார்; சத்தியத்தில் தம்மைத் தேடுகிறவர்களை ஆதரிக்கிறார்.

14. கபடுள்ள இருதயத்திற்கும், அக்கிரம உதடுகளுக்கும், துர்க்கிரிகைகளைச் செய்யும் கரங்களுக்கும், பூமியில் இருவழியாய் நடக்கும் பாவிக்கும் கேடாம்.

15. சர்வேசுரனை நம்பாத கோழைகளுக்கு ஐயோ கேடு; ஆகையால் அவர்கள் அவரால் காப்பாற்றப்பட மாட்டார்கள்.

16. பொறுமையை இழந்தவர் களுக்கும், செவ்வழிகளை விட்டகன்றவர்களுக்கும், துர்வழிகளுக்குள் விலகிச் சென்றவர்களுக்கும் ஐயோ கேடு!

17. ஆண்டவர் பரிசோதிக்கத் தொடங்குகையில் அவர்கள் என்ன செய்வார்கள்?

18. ஆண்டவருக்கு அஞ்சுகிறவர்கள் ஆண்டவருடைய வார்த்தைகளை விசுவசியாமல் இருக்க மாட்டார்கள்; அவரை நேசிக்கிறவர்கள் அவர் வழியில் நிலைகொள்ளுவார்கள்.

19. தெய்வ பயமுள்ளவர்கள் அவருக்குப் பிரியமானவைகளைத் தேடுவார்கள்; அவரை நேசிப்பவர்கள் அவருடைய திருச்சட்டத்தால் திருப்தியடைவார்கள்.

20. தெய்வ பயமுள்ளவர்கள் தங்கள் இருதயங்களை ஆயத்தப்படுத்துவார்கள்; அவருடைய பார்வையில் தங்கள் ஆத்துமங்களை அர்ச்சிப்பார்கள்.

21. தெய்வ பயமுள்ளவர்கள் அவர் கட்டளைகளை அனுசரிப்பார்கள்; ஆண்டவர் தங்களை வந்து சந்திக்கும் வரையிலும் பொறுமையா யிருப்பார்கள்.

22. ஏனெனில், தவஞ் செய்யாமற் போவோமேயாகில் மனுஷருடைய கரங்களில் அல்ல, ஆண்டவரின் கரங்களில் விழுவோம் என்று சொல்லிக் கொள்ளுவார்கள்.

23. ஏனெனில் அவர் எவ்வளவு மேன்மையுள்ளவரோ, அவ்வளவுக்கு இரக்கமும் அவரோடு இருக்கிறது.