சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 01

ஞானத்தின் உற்பத்தி, மேன்மை மற்றவைகளைப் பற்றியது.

1. சகல ஞானமும் ஆண்டவராகிய சர்வேசுரனிடம் உண்டாகி அவருடன் எப்போதும் இருந்து வந்திருக்கிறது, அது எல்லாக் காலங்களுக்கும் முன்பிருந்தே இருக்கின்றது.

2. சமுத்திரத்தின் மணல்களையும், மழைத்துளிகளையும், உலகத்தின் நாட்களையும் கணக்கிட்டவன் யார்? வானத்தின் உயரத்தையும், பூமியின் அகலத்தையும் பாதாளத்தின் ஆழத்தையும் அளந்தவன் யார்?

3. சகலத்திற்கும் முற்பட்டதாகிய சர்வேசுரனுடைய ஞானத்தைக் கண்டுபிடித்தவன் யார்?

4. சகலத்துக்கும் முன் ஞானம் உண்டாக்கப்பட்டது. நித்தியத்தில் இருந்தே விவேகத்தின் புத்தி சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது.

5. உன்னதங்களிலுள்ள சர்வேசுர னுடைய வார்த்தையே ஞானத்தின் ஊற்றும், ஞானத்தின் வழிகளே அவருடைய நித்திய கட்டளை களுமாயிருக்கின்றன.

6. ஞானத்தின் வேர் எவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது? அதன் புத்தியுள்ள ஆலோசனைகளை அறிந் திருக்கிறவன் யார்?

7. ஞானத்தின் ஒழுங்கு எவனுக்கு அறிவிக்கப்பட்டு வெளியாக்கப் பட்டது? அதன் பலவிதப் படிகளைப் புரிந்துகொண்டவன் யார்? 

8. மகா உன்னதரும், வல்லமை யுள்ள அரசரும், மிகவும் அஞ்சத் தக்கவருமான சர்வ வல்லப சிருஷ்டிகர் ஒருவர் இருக்கிறார்; தமது சிம்மாசனத் தில் வீற்றிருந்து ஆண்டு வரும் தேவன் அவரே.

9. அவரே இஸ்பிரீத்துசாந்துவில் அதை உண்டாக்கி, அதைக் கண்டு, கணக்கிட்டு, அளவிட்டார்.

10. அவர் தமது சகல கைவேலை களின் மீதும், தமது கொடைக்கேற்ப சகல மாம்சத்தின் மீதும் அதைப் பொழிந் தருளினார். தம்மை நேசிப்பவர் களுக்கு அவர் அதைத் தந்திருக்கிறார்.

11. தேவ பயமானது கனமும் மகிமையும், இன்பமும், சந்தோஷத்தின் முடியுமாயிருக்கிறது.

12. தேவ பயமானது இருதயத்திற்கு இன்பம் தரும்; அகமகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்கும்.

13. தெய்வபயமுள்ளவனின் இறுதிக் காலத்தில் அது அவனோடு இணக்கமாயிருக்கும்; தன் மரண நாளில் அவன் ஆசீர்வதிக்கப்படுவான்.

14. தேவசிநேகம் சங்கைக்குரிய ஞானமாயிருக்கிறது.

15. அது யாருக்குத் தன்னைக் காண்பிக்கிறதோ அவர்கள் அதன் காட்சியாலும், அதன் மாபெரும் செயல்கள் பற்றிய அறிவாலும் அதை நேசிக்கிறார்கள்.

16. தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம், தாய் உதரத்திலேயே பிரமாணிக்கமுள்ளவர்களோடு அது படைக்கப்பட்டது; தெரிந்து கொள் ளப்பட்ட ஸ்திரீகளோடு அது நடக் கிறது; நீதிமான்களிடமும், விசுவாசி களிடமும் விளங்குகின்றது.

17. தெய்வ பயமானது அறிவின் வேத அனுசரிப்பாக இருக்கிறது.

18. வேத அனுசரிப்புள்ள சீவியம் இருதயத்தைக் காத்து, அதை நியாயப் படுத்துகிறது; சந்தோஷத்தையும் இன்பத்தையும் தருகிறது.

19. தெய்வ பயமுள்ளவனோடு அது இணக்கமாயிருக்கும், தனது இறுதி நாட்களில் அவன் ஆசீர்வதிக்கப் படுவான்.

20. தெய்வபயம் ஞானத்தின் பூரணத்துவமாகும்; அதன் பூரணத் துவம் அதன் கனிகளால் விளங்கும்.

21. அது தனது இல்லம் முழுவதை யும் தனது அபிவிருத்தியாலும், களஞ்சியங்களைத் தன் பொக்கிஷங் களாலும் நிரப்பும்.

22. தெய்வபயம் ஞானத்தின் முடியாயிருக்கிறது; அது சமாதானத் தாலும், இரட்சணியத்தின் கனி களாலும் நிரப்புகிறது. 

23. தெய்வபயம் ஞானத்தைக் கண்டு அதைக் கணக்கிட்டது; அவை இரண்டும் சர்வேசுரனுடைய கொடைகளாயிருக்கின்றன.

24. ஞானமானது அறிவையும், விவேகமுள்ள புத்தியையும் பகிர்ந்தளிக்கும்; அது தன்னைப் பற்றிக் கொள்பவர்களை மகிமையில் உயர்த்துகிறது.

25. ஆண்டவருக்கு அஞ்சுவது ஞானத்தின் வேராகும்; அதன் கிளைகள் நீடித்த ஆயுசுள்ளவை.

26. ஞானத்தின் பொக்கிஷங்களோ புத்தியும் அறிவின் வேத அனுசரணையுமாகும்; பாவிகளுக்கோ ஞானம் அருவருப்பாயிருக்கிறது;

27. தெய்வ பயம் பாவத்தை அகற்றுகின்றது.

28. ஏனெனில், தெய்வ பயமற்றவன் நீதிமானாக்கப்பட இயலாது; கொந் தளிப்புள்ள அவனுடைய கோப மானது அவனது அழிவாயிருக்கிறது.

29. பொறுமையுள்ளவன் குறித்த காலத்திற்கு சகித்துக் கொள்வான்; அதன்பின், அவனுடைய சந்தோஷம் புதுப்பிக்கப்படும்.

30. நற்புத்தியானது குறித்த காலத்திற்கு அவனது வார்த்தைகளை மறைக்கும்; அநேகருடைய உதடுகள் அவனது ஞானத்தை அறிக்கையிடும்.

31. ஞானத்தின் பொக்கிஷங்களில் ஒன்று நல்லொழுக்கத்தின் அடை யாளம்.

32. தேவ வழிபாடு பாவிக்கு அருவருப்பாயிருக்கிறது.

33. மகனே! நீ ஞானத்தை விரும்புவாயாகில் நீதியைக் காத்துக்கொள்; சர்வேசுரன் உனக்கு அதை அளிப்பார்.

34. தெய்வ பயம் ஞானமும் நல்லொழுக்கமுமாகும். விசுவாசமும் சாந்தமும் அவருக்கு உகந்தவையாகும்; 

35. விசுவாசம், சாந்தகுணம் இவைகளைக் கொண்டு ஞானியின் திரவியங்களை நிரப்புவார்.

36. தேவ பயத்தில் நம்பிக்கையற்ற வனாயிராதே; கபடுள்ள இருதயத்தோடு அவரிடம் வராதே.

37. மனிதரின் பார்வையில் கள்ள ஞானியாயிராதே; உன் உதடுகள் உனக்கு ஓர் இடறுகல்லாக இராதிருக்கக் கடவது.

38. நீ விழுந்து விடாதபடியும், உன் ஆத்துமத்திற்கு அவசங்கை வருவிக்காதபடியும் விழிப்பாயிரு.

39. சர்வேசுரன் உன் இரகசியங்களைக் கண்டுபிடித்து, சபை நடுவே உன்னை அடித்து வீழ்த்துவார்.

40. ஏனெனில், கெட்ட கருத்தோடு ஆண்டவரிடம் வந்தாய்; உன் இருதயம் கபடும் வஞ்சகமும் நிறைந்ததாயிருக்கின்றது.