யோனாஸ் ஆகமம் - அதிகாரம் - 01

யோனாஸ் கடலில் வீசப்பட்டது.

1. அமாத்தி குமாரராகிய யோனாஸ் என்போரிடம் ஆண்டவர் சம்பாஷித்து அவரைப் பார்த்து:

2. நீ (தட்சணமே) புறப்ட்டு, நினிவு மாநகரஞ் சென்று (தபஞ் செய்யும்படி) போதிப்பையாக; ஏனெனில், அதின் துஷ்கிருத்தியம் நமது சமுகத்திற்கு ஏறியது என்றார்.

* 2-ம் வசனம். நினிவு மாநகர் அசீரியருக்குத் தலைநகர்.

3. யோனாஸ் பிரயாணமாய் எழுந்து ஆண்டவர் சமுகத்தை விலகித் தார்சிசுக்கு ஓடிப் போகக் (கருதியவராய்) யோப்பாவில் இறங்கினர்; (அங்கு) தார்சீசுக்குப் பாய்விரித்த மரக்கலம் ஒன்றைக் கண்டு, அதுக்குக் கேள்வுபணந் தந்து; ஆண்டவர் சமுகம் விலகி நிற்பதற்கு மற்றவர்களோடு போகக் கப்பலேறினர்.

4. ஆனால் ஆண்டவர் சமுத்திரத்தின்மீது பெருங்காற்றை அனுப்பினர்; கடலின் பெரும் புயலுண்டாக, மரக்கலம் உடைந்து போகும்படியான அபாயத்திலிருந்தது.

5. அப்போது கப்பலாட்கள் திகில் கொண்டவர்களாய்த் தம் தம் தேவனை சப்தமாக மன்றாடினார்கள்; மரக் கலத்தை லகுவாக்க, அதிலிருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் வாரி எறிந்தார்கள்; யோனாசோ கப்பல் அடித்தட்டில் இறங்கி அசந்த நித்திரையாய்க் கண் வளர்ந்திருந்தனர். 

6. மாலுமி அவரை அணுகி, அவரைப் பார்த்து: நீ அசந்த நித்திரை போவதென்னே? நீ எழுந்து உன் தேவனைப் பிரார்த்தியேன்; சிலது விசை நாம் மாண்டு போகாதபடி கடவுள் நம்மை நினைத்தருள்வர் என்றான்.

7. கப்பல் ஆட்களில் ஒருவர் ஒருவ ரைப் பார்த்து: நமக்கு இத்தீங்கு வந்த காரணத்தையறிய வாருங்கள், திருவுளச் சீட்டு போடுவோம் என்றார்கள்; அங்ஙனம் அவர்கள் சீட்டு போடும் போது, அஃது யோனாஸ் பேரில் வீழ்ந்தது.

8. அப்போது அவர்கள் அவரைப் பார்த்து: இவ்வாபத்து எங்களுக்கு வந்ததற்குக் காரணம் யாது; உன் தொழிலென்ன, நீ எவ்வூர், நீ எங்கே போகின்றாய், நீ எந்தச் சாதியான் சொல்லெனக் கேட்டார்கள்.

9. அதற்கு அவர் அவர்களைப் பார்த்து: யான் எபிறேயனாயிருக்கின்றேன்; நிலனையும், நீரதியையுஞ் சிருஷ்டித்த விண்ணகத் தேவனாகிய ஆண்டவரைச் சேவிக்கும் பக்தன் யான் என்றார்.

10. இவர் ஆண்டவர் சமுகத்தை விலகி ஓடிவந்தவரென, அவர் தெரிவிக்க அறிந்தவர்களாய், அவர்கள் மிகவும் பயந்து இவரைப் பார்த்து: இஃதைச் செய்ததென்ன என்றார்கள்.

11. கடற்றிரைகள் கிளம்பி பொங்கினமையால், அவர்கள் இவரைப் பார்த்து: சமுத்திரம் எங்களுக்கு அமர்ந்திருக்கும் பொருட்டு, உனக்கு யாங்கள் செய்வதியாவது எனக் கேட்டார்கள்.

12. அதற்கு இவர் அவர்களைப் பார்த்து: என்னைத் தூக்கிச் சமுத்திரத்தில் போடுவீரேல், கடல் (கொந்தளிப்பு) நின்றுபோம்; என் நிமித்தமாகவே உங்கள்பேரில் புயலடித்தது என யானறிவேன் என்றார்.

13. அதைக் கேட்டும் அவர்கள் கரை அசர எத்தனித்துத் தண்டு வலித்தனர்; ஆயினும், கடற்றிரைகள் கிளம்பி கொந்தளித்தமையால் கூடாதுபோயிற்று.

14. அப்போது அவர்கள் ஆண்டவரை நோக்கிக் குரலை உயர்த்தி, ஆண்டவரே இம்மனிதனின் மரணமானது எங்களைச் சாராதிருக்கவும், குற்றமற்ற குருதி பழி எங்கள்மீது நீர் சுமத்தாதிருக்கவும் உம்மை மன்றாடுகிறோம்; ஆண்டவரே நீர்தான் இவ்விஷயத்தில் உமக்குச் சித்தமானதைச் செய்கின்றீர் என்றார்கள்.

15. பின்பு அவர்கள் யோனாசைத் தூக்கி சமுத்திரத்தில் போடவே கடல் கொந்தளிப்பு அமர்ந்தது.

16. அப்போது அம்மனிதர்கள் ஆண்டவர் மட்டில் மிக பயபக்தி கொண்டு, ஆண்டவருக்குப் பலி நிவேதனங்கள் நடத்திப் பிரார்த்தனைகளுஞ் செய்து கொண்டார்கள்.