இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உபாகமம் - அதிகாரம் 01

சீனாயி மலையை விட்ட நாள்முதல் காதேசுக்கு இரண்டாம் விசை வந்த நாள் மட்டும் இஸ்றாயேல் புத்திரருக்குச் சம்பவித்த பற்பல சங்கதிகளின் சங்க்ஷேபமான சரித்திரம்.

1. இஸ்றாயேலியர் யோர்தானுக்குக் (கீழ்ப்) புறத்திலே, வனாந்தரத்திலே, செங்கடலை நோக்கும் ஒரு சமவெளியிலே, பாரானுக்கும், தோப்பேலுக்கும், லாபானுக்கும், மிகுதியான பொன் விளைகின்ற அசெரோட்டுக்கும் நடுப்புறத்திலுள்ள ஒரு ஸ்தலத்திலே இருக்கும் போது, மோயீசன் அவர்களுடைய முழுச் சபையை நோக்கிப் பேசிய வார்த்தைகள் பின் வருமாறு:

2. மேற்படி ஸ்தலமானது காதேஸ் பார்னேயிலிருந்து செயீர் மலை வழியாய் ஒரேபுக்குப் போகிறவர்களுக்குப் பதினொரு நாள் பிரயாணத் துலைவிலிருக்கிறது.

3. அப்பொழுது (வனாந்தர யாத்திரையின்) நாற்பதாம் வருஷம், பதினோராம் மாதம் முதல் தேதி. அந்தத் தேதியில் மோயீசன் இஸ்றாயேல் புத்திரரோடு கர்த்தர் தனக்குச் சொல்லக் கட்டளையிட்ட வார்த்தைகளைச் சொல்லலானான்.

4. அதற்கு முன் அவன் ஏசெபோனில் குடியிருந்த அமோறையருடைய இராசாவாகிய செகோனையும், அசெரோட்டிலும் எதிராயிலும் வாசம் பண்ணியிருந்த பாசானின் இராசாவாகிய ஓகையையும் முறியடித்திருந்தான்.

5. யோர்தானுக்குக் (கீழ்ப்) புறத்தில் மோவாபின் தேசத்திலே அது நடந்தது. மோயீசன் (கர்த்தருடைய) நியாயப்பிரமாணங்களைச் (சனங்களுக்குத்) தெளிவித்துக் காட்டத் தொடங்கினான். எப்படியயன்றால், 

6. ஒரேபிலே நம்முடைய தேவனாகிய கர்த்தர் திருவுளம்பற்றினதாவது: நீங்கள் இந்த மலையருகில் இருந்தது போதும்.

7. நீங்கள் திரும்பிச் சென்று அமோறையர் மலையிடமும் அதற்குச் சுற்றிலுமிருக்கிற மற்ற ஸ்தானங்களிலும், தென்புற மாயுள்ள மைதானம், மலை, கணவாய்களிடமும், கடற்கரை யோரமாய்க் கானான், லிபான் தேசங்களிடமும், யுப்பிராத் என்கிற பெரிய நதி மட்டும் போகக் கடவீர்கள். 

8.  இதோ (அதனை) உங்கள் கையிலே வசமாக்கினோம். நீங்கள் போய்க் கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய அபிரகாமுக்கும், இசாக்குக்கும், யாக்போபுக்கும், அவர்களுக்கும், அவர்களுக்குப் பின்வரும் சந்ததிக்கும் ஆணையிட்டுக் கொடுப்பதாகச் சொன்னாரே, அந்தத்தேசத்தில் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள் என்றார்.

9.  அக்காலத்திலே நான் உங்களை நோக்கி:

10. நான் ஒருவனாய் உங்கள் பாரத்தைத் தாங்கக் கூடாதவனாயிருக்கிறேன். ஏனெனில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைப் பெருகச் செய்தார். நீங்கள் இப்போது வானத்தின் நட்சத்திரங்களைப் போலத் திரளாயிருக்கிறீர்கள்.

11. நீங்கள் இப்போது இருக்கிறதைப் பார்க்கிலும் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களை இன்னும் ஆயிரமடங்காகும் படி செய்து, அவர் சொல்லிய வாக்கியத்தின் படியே உங்களை ஆசீர்வதிக்கக் கடவாராக.

12. உங்கள் விசாரங்களையும் கஷ்டங்களையும் வழக்குகளையும் நான் ஒருவனாய்த் தாங்குவது கூடாத காரியம்.

13. ஆதலால் உங்கள் கோத்திரங்களில் ஞானமும், விவேகமும் நன்னடத்தையுமுள்ள புருஷர்களை நீங்கள் தெரிந்து கொண்டால் அவர்களை நான் உங்களுக்கு அதிபதிகளாக ஏற்படுத்தி வைப்பேன் என்று நான் உங்களுக்குச் சொன்னதற்கு,

14. நீங்கள் பிரதியுத்தாரமாக: தாங்கள் செய்யக் கருதினது நல்லதென்று சொன்னீர்கள்.

15. ஆனதுப்ற்றி நான் உங்கள் கோத்திரங்களில் ஞானமும் கனமும் பொருந்திய புருஷர்களைத் தெரிந்து கொண்டு அவர்களை உங்கட்கு சகலத்தையும் கற்றுக் கொடுக்கும்படி அதிபதிகளாகவும் ஆயிரம் பேருக்கும், ஐந்நூறு பேருக்கும், நூறு பேருக்கும், ஐம்பது பேருக்கும், பத்துப் பேருக்கும் தலைவராகவும் ஏற்படுத்தி வைத்தேன்.

16. பிறகு நான் அவர்களை நோக்கி: சனங்களுடைய வியாச்சியங்களைக் கேட்டு, அவர்கள் சகோதரர் ஆனாலும் அந்நியர் ஆனாலும் நீதிப்படி தீர்ப்புச் சொல்லுங்கள்,

17. நியாயத்திலே பட்ச பாதமில்லாமல் பெரியவனுக்கும் சிறியவனுக்கும் சரியாகச் செவிகொடுப்பீர்கள். முகத்தாட்சணியம் பார்க்கக் கூடாது. அதுவே தேவ நீதி. உங்களுக்குக் கடினமாய்த் தோன்றுங் காரியத்தை என்னிடத்தில் கொண்டு வாருங்கள், நான் அதைக் கேட்டுத் தீர்ப்புச் சொல்லுவேனென்று கற்பித்தேன்.

18. நீங்கள் செய்ய வேண்டுவதெல்லாவற்றையும் கட்டளையிட்டேன்.

19. அதன்பின் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கற்பித்திருந்தபடி, நாம் ஒரேபை விட்டுப் புறப்பட்டு நீங்கள் கண்ட பயங்கரமான அதிவிசாலம் பொருந்திய வனாந்தரத்தைக் கடந்து அமோறையரின் மலை வழியாய்ச் சென்று காதேசுக்கு நாம் வந்து சேர்ந்தோம். அப்பொழுது,

20. நான் உங்களை நோக்கி: நமது தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கப் போகிற அமோறையரின் மலைநாடு மட்டும் நீங்கள் வந்து சேர்ந்தீர்கள்;

21. இதோ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்தைப் பார். நமது தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு வாக்கிட்டபடி நீ போய் அதைச் சுதந்தரித்துக் கொள். பயப்படவும் வேண்டாம். கலங்கவும் வேண்டாம்.

22. அப்பொழுது நீங்கள் என் அண்டையில் வந்து: அந்தத் தேசத்தைப் பரிசோதித்துப் பார்க்கவும், நாம் இன்ன வழியாகச் சென்று அன்ன நகரங்களுக்குப் போகலாமென்று சொல்லவுந் தக்கதான புருஷர்களை அனுப்புவது நலம் என்றீர்களே.

23. நான் (உங்கள்) சொல்லை அங்கீகரித்து உங்கள் கோத்திரங்களுக்கு ஒவ்வொருவராகப் பன்னிரண்டு புருஷர்களை அனுப்பலானேன்.

24.  அவர்கள் புறப்பட்டு மலைகளிலேறி திராட்சப்பழப் பள்ளத்தாக்கு மட்டும் போய்த்தேசத்தை நன்றாய்ப் பார்த்ததுமல்லாமல்,

25.  தேசத்தின் செழுமைக்கு அடையாளமாக அதன் பழங்களில் சிலவற்றை எடுத்து நம்மிடங் கொண்டு வந்து: நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கப் போகிற பூமியானது நல்ல பூமி என்று சொன்னார்கள்.

26. நீங்களோ போகமாட்டோமென்று நமது தேவனுடைய வாக்கியத்தை நம்பாதவர்களாய்,

27. உங்கள் கூடாரங்களில் முறுமுறுத்து: கர்த்தர் நம்மை வெறுத்திருக்கிறார். ஆகையால் அவர் அமோறையர் கையில் நம்மை ஒப்புக் கொடுத்து நம்மை அழித்துப் போடுவதற்குத்தானே எஜிப்த்திலிருந்து புறப்படச் செய்தார்.

28. நாம் போவதெவ்வழி? அந்தச் சனங்கள் கணக்கில்லாதவர்களும், நம்மை விட நெடியவர்களும், அவர்களுடைய பட்டணங்கள் பெரியவைகளும் வானத்தை அளாவிய கோபுரங்களையுள்ளவைகளுமா யிருக்கிறதென்றும், அவ்விடத்தில் ஏனாக்கின் புத்திரர்களையும் கண்டோமென்றும் போய்ப் பார்த்தவர்கள் சொல்லிப் பயமுறுத்தினார்களென்று சொல்ல,

29. அதைக் கேட்ட நான்: அஞ்சாதீர்கள். அவர்களுக்குப் பயப்படாதேயுங்கள். 

30. உங்களை நடத்துகின்ற தேவனாகிய கர்த்தரே உங்களை ஆதரித்து எஜிப்த்து தேசத்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக அவர் எப்படி உங்களோடிருந்து யுத்தம் பண்ணினாரோ அப்படியே செய்வார்.

31. வனாந்தரத்திலும் அவர் செய்தது உங்களுக்குத் தெரியும் அல்லவா? ஒரு மனிதன் தன் குழந்தையை ஏந்துவது போல உங்கள் தேவனாகிய கர்த்தர் (உங்களைப் பேணி) நீங்கள் இவ்விடம் வந்து சேரும் வரையில் நடந்து வந்த வழிகள் தோறும் அவர் உங்களைச் சுமந்து கொண்டாரல்லோ? 

32. ஆனால் நீங்கள் அப்பொழுது முதலாய்

33. உங்களுக்கு முன் வழியைத் திறந்து பாளையம் இறங்க வேண்டிய இடத்தை அளந்து கொடுத்தவரும், உங்களுக்கு வழிகாட்டியாகி இரவில் அக்கினியிலும், பகலில் மேக ஸ்தம்பத்திலும் உங்களுக்கு முன் சென்றவருமாகிய உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்பினீர்களோ? இல்லை.

34. ஆகையால் கர்த்தர் உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டுக் கடுங்கோபங் கொண்டு,

35. உங்ள் பிதாக்களுக்குக் கொடுப்போமென்று நாம் ஆணையிட்டுப் பேசிய அந்த நல்ல தேசத்தை இந்தத் துஷ்ட சந்ததியாகிய மனிதரில் ஒருவரும் காணப்போவதில்லை யயன்றும்,

36. ஜெப்போனேயுடைய குமாரனாகிய காலேப் கர்த்தரைப் பின்பற்றி நடந்தான். ஆதலால் அவன் அதைக் காண்பான் என்றும், அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் அவன் மிதித்து வந்த பூமியைத் தருவோமென்றும் அருளிச் செய்தார்.

37. அவர் இப்படியே (சனங்களின் மேல்) கோபங் கொண்டது ஆச்சரியமென்ன? உங்கள் நிமித்தம் அவர் என்மேலும் கோபங் கொண்டு: நீயும் அதில் பிரவேசிப்ப தில்லை ;

38. ஆனால் உன் பரிசாரகனாயிருக்கிற நூனின் குமாரனாகிய ஜோசுவா அதில் உனக்குப் பதிலாய்ப் பிரவேசிப்பான். அவனுக்கு நீ புத்தி சொல்லி அவனைத் திடப்படுத்து. ஏனெனில் அவனே அதைத் திருவுளச் சீட்டுப் போட்டு இஸ்றாயேலுக்குப் பங்கிட்டுக் கொடுப்பான்.

39. சிறையாய்க் கொண்டு போகப் படுவார்களென்று நீங்கள் சொன்ன உங்கள் சிறுவர்களும், இந்நாளிலே நன்மை தின்மை யறியாத (உங்கள்) பிள்ளைகளும் அத்தேசத்தில் பிரவேசிப்பார்கள். அவர்களுக்கே அதைக் கொடுப்போம். அவர்கள் அதைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.

40. நீங்களோ திரும்பிச் சென்று செங்கடல் வழியாய் வனாந்தரத்திற்குப் பிரயாணப் பட்டுப் போங்களென்றருளினார் என் றேன்.

41.  அப்போது நீங்கள் என்னை நோக்கி: கர்த்தருக்குத் துரோகம் செய்தோம். நம்முடைய தேவனாகிய கர்த்தர் கற்பித்தபடி இதோ போய் யுத்தம் பண்ணுவோம் எனப் பதில் கூறி, ஆயதமணிந்தவர்களாய் மலைமேலேற முஸ்திப்பாயிருக்கையில்,

42. கர்த்தர் என்னைப் பார்த்து: நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்து போவீர்கள். ஆதலால் நீங்கள் போகவும் யுத்தம் பண்ணவும் வேண்டாம். நாம் உங்கள் நடுவே இரோமென்று அவர்களுக்குச் சொல்லென்றார்.

43. நான் அப்படியே உங்களுக்குச் சொன்னேன். ஆனால் நீங்கள் செவிகொடாமல் கர்த்தருடைய கற்பனையை மீறி ஆங்காரத்தால் வீங்கினவர்களாய் மலைமேலேறத் துணிந்திருந்தமையால்,

44. அந்த மலைகளில் குடியிருந்த அமோறையர் உங்களை எதிர்க்கப் புறப்பட்டு வந்து தேனீக்கள் துரத்துவது போல உங்களைத் துரத்திச் செயீர் துடங்கி ஓர்மா வரைக்கும் உங்களை முறியடித்தார்கள்.

45. அப்பொழுது நீங்கள் திரும்பி வந்து கர்த்தருடைய சமூகத்திலே அழுத போது அவர் உங்களுக்குச் செவி கொடுக்கவுமில்லை. உங்கள் மனுவை அங்கீகரிக்கவுமில்லை.

46. ஆகையால் நீங்கள் காதேஸ் பர்னேயில் வெகுநாளாய்த் தங்கினீர்கள்.