வாரீர் இறையடி தொழவே வாரீர் ***

வாரீர் இறையடி தொழவே வாரீர்
அருள்தனைப் பெறவே வாரீர்
திரண்டிடும் அலையென முகிழ்ந்திடும் மழையென
மகிழ்ந்து விரைந்து வாரீர்

1. மஞ்சள் முகமது மங்களப் புன்னகை
பொங்கிட மங்கையர் வாரீர்
வஞ்சம் துளி கூட இன்னும் நுழையாத
பிஞ்சு மனங்களே வாரீர்
வங்கக்கடல் போல பொங்கும் உளம் கொண்ட
சங்கத் தமிழரே வாரீர்
தங்கள் பணி தீர்ந்த நெஞ்ச நிறைவோடு
தாங்கும் முதியவரே வாரீர்

2. வறுமை பிணியிலே வாழ்வு சுமையாக
வாடும் சோதரர் பாரீர்
விழிகள் குளமாகி வழியும் நீர் தேக்கி
விம்மும் குரலினைக் கேளீர்
சிறிய சகோதரர்க்கு செய்த பணி எல்லாம்
தேவன் பணிதான் என்று
அறிய உண்மையினை அறிந்து அன்பு வரம்
அடைய இன்று நீர் வாரீர்

3. தரணி மீட்பதற்கு இறையின் ஏக மகன்
இயேசுவே இங்கு வந்தார்
வருந்தி மலைமீது இறந்து உயிர்த்து நாம்
இழந்த வாழ்வுதனை வென்றார்
அடைந்து அவர் தந்த அருளின் திருவாழ்வை
விசுவாசத்தாலே பெறுவோம்
தடைகள் ஏதுமில்லை வரங்கள் பெறுவதற்கு
விரைந்தே நாமும் வருவோம்