இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லேவியராகமம் - முகவுரை

இந்தப் பிரபந்தமானது மோயீசனென்பலர் எழுதித் தந்தருளிய ஐந்தில் மூன்றாவது.

இதற்கு லேவியராகமமென்று எப்போதும் பரம்பரையாய்ப் பெயர் வழங்கிற்று. அதேதெனில் தேவாலய விசாரணை விஷயங்களிலும் தேவ ஊழியத்திற்கடுத்த கடமைகளிலும் லேவியரென்னப்பட்டவர்கள் அனுசரிக்க வேண்டிய ஒழுங்குகளும், நீதிச் சட்டங்களும் இதனில் விவரமாய்க் காட்டப் பட்டிருக்கின்றன.

லேவியராகமத்திலே அடங்கிய பொருள் எல்லாம் மூன்று பிரிவுகளாக வகுப்பது எளிதாம். எங்ஙனமெனில்:

1-வது: முதல் அதிகாரமாதி எட்டாம் அதிகாரம் வரையிலும் எபிறேயர் கடவுளுக்குச் செலுத்த வேண்டிய சந்திப்பு, காணிக்கை, பலி முதலியவைகளைக் குறித்துக் கற்பிக்கப் பட்டிருக்கிறது. 2-வது: எட்டாம் அதிகாரந் துவக்கி இருபத்து மூன்றாம் அதிகாரம் மட்டும் பலப்பல விசேஷப் பலிகளை ஒப்புக் கொடுக்க வேண்டியவர்களின் பேரிலும் சுத்த மிருகங்களின் பேரிலும் ஸ்திரீ பூமான்களுடைய தீட்டுக்களின் பேரிலும், நானாவிதத் தோஷங்களின் பேரிலும் விளக்கமாய்ச் சொல்லியிருக்கிறது. 3-வது: இருபத்து மூன்றாம் அதிகாரம் முதல் அவ்வாகமத்தின் கடை வசனமீறாகச் சாபத் முதலிய ஓய்வு நாட்கள், பண்டிகைகள், தேவாலயத்தைச் சேர்ந்த ஆசார முறைமைகள், நேர்ச்சிக் கடன், வேண்டுதல்கள் ஆகிய இவைகளைக் குறித்து விவரமாக வருணிக்கப் பட்டிருக்கிறதாம்.

சாளேசரம் எவனுக்குண்டோ அவன் நானாவிதப் பொருட்களின் ரூபம், சாயல், நிறம் ஸ்பஷ்டமாய்க் கண்டறிய மாட்டான். அதுபோல வேத புத்தகத்தை வாசிப்பவர்களில் வெகுபேர்கள் அதனுடைய தாற்பரியத்தைக் கிரகித்து உணராததினாலே அதில் அடங்கய பற்பல விசேஷங்களின் மட்டில் ஆவலாதி சொல்லி வருகிறார்கள். சந்திரனைப் பார்த்து நாய் குலைத்தால் சந்திரனுக்கு நஷ்டமா, நாய்க்கு நஷ்டமா? நாய்க்குத்தானே நஷ்டம். லேவியராகமத்திலே எக்கியம், யாகம், பலி முதலிய ரீதிகளுக்குச் சம்பந்தமான காலம், தேசம், ஒழுக்கம், ஆசாரம், தேவனுடைய அபிப்பிராயம் முதலியன அறியாதிருப்பதால் எபிறேயருக்கும் அவர்களுடைய குருக்களுக்கும் சுவாமி கட்டளையிட்டிருந்த அநேக நீதிச் சடங்கு, ஆசார முறைமை முதலிய சட்டப் பிரமாணங்களின் நயத்தையும் நியாயத்தையும் கண்டுபிடிக்காமல், நன்மையானதைத் தின்மையாக எண்ணித் தூஷணித்துப் பேசுகிறார்கள். சுவாமி தந்தருளிய வேத புஸ்தகத்தின் அமிர்தத்தை நஞ்செனக் கொண்டு கெட்டுப் போகிறார்கள். அவர்கள் ஞானக் குருடர். அவர்களுக்குப் பார்வையளிக்க நம்மால் இயலாது. ஆயினும் வழியைத் தடவிப் பார்க்கக் கைக்கோல் கொடுத்தாற் கோல சிற்சில நியாயங்களைக் காட்டுவோம். அதென்னவென்றால்: வரிவேத காலத்திற்குத் தேவனால் கற்பிக்கப் பட்ட நீதியாச்சாரங்களும், யாகம், எக்கியம், பலி முதலிய ஒழுங்குகளும் அருள் வேத காலத்தில் கட்டளையிடப்பட்ட அனுஷ்டானங்களைப் பார்க்கிலும் மிகவும் கஷ்டமுள்ளதாயினும் அவைகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தாமற் போகிறதில்லை. கோட்டைச் சுவரானது தானாய் நிற்காமல் தன் அஸ்திவாரக் கல்லில் ஊன்றியிருப்பது போல, பழைய ஏற்பாட்டின் ஒழுங்குகள் புதிய ஏற்பாடாகிய அஸ்திவாரக் கல்லின் மேல் ஊன்றியிருக்கின்றதாகையால், சுவருக்கும் அதின் அஸ்திவாரத்திற்கும் எவ்வித சம்மந்தமிருக்கின்றதோ, மேற்சொல்லிய பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் அவ்வித சம்பந்தமுண்டு. அருள் வேதம் ஆயிரம் சூரியனைப் போலப் பிரகாசிக்கும். வரிவேதம் அதனுடைய சாயலும் நிழலாட்டமுமாம். ஆனால் வெளிச்சத்துக்கும் நிழலுக்கும் எவ்வித சம்பந்தமோ, பழைய காலத்து அனுஷ்டானங்களுக்கும் புதிய காலத்து ஒழுங்குகளுக்கும் நெருக்கமான பொருத்தமுண்டென்கிறதினால் ஒன்றையறிந்து மற்றொன்றைக் கிரகித்து அறியலாமொழிய மற்றபடியல்ல. உதாரணம்: சேசுநாதர் செம்மறிப் புருவைப் பாவனையாய்த் தம்மைப் பிதாவாகிய சர்வேசுரனுக்குப் பலியாக ஒப்புக் கொடுத்தாரே, அதை அறிந்தாலல்லோ வரி வேதத்தில் சமாதானப் பலியின் பொருத்தத்தையும் தகுதியையும் கண்டுபிடிக்கலாம். இது சாயல். அது சூரியன்.

அர்ச். சின்னப்பர் எபிறேயருக்கு எழுதியனுப்பிய நிருபத்திலே, பது ஏற்பாடு பழைய ஏற்பாட்டுன் எப்படிப் பொருந்துமென்றும், மோயீசன், ஆரோன் என்பவர்கள் சேசுகிறீஸ்து நாதருக்கு எவ்வாறு பாவனையாயிருக்கிறார்கள் என்றும், வரிவேதத்துக் குருத்துவத்திற்கும் அருள் வேதத்துக் குருத்துவத்திற்கும் எவ்விதப் பேதா பேதமுண்டென்றும் உத்தம விதமாய்ச் சொல்லிக் காட்டினார். இந்த லேவியராகமத்தை வாசிக்கும் போது, எவன் எபிறேயருக்குச் சின்னப்பர் அனுப்பிய நிரூபத்தையும் கூடவே வாசித்து அவ்விரண்டையும் ஒத்துப் பார்ப்பானோ அவன் அதுகளின் அர்த்தம் சரியாய்க் கண்டுபிடிப்பான்.