இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பதிலுரைப்பாடல்_மறையுரை (பிப்ரவரி 27)தவக்காலம் முதல் வாரம் 

சனிக்கிழமை

திருப்பாடல் 119: 1-2, 4-5, 7-8 (1b)

“யார் பேறுபெற்றோர்?”

கடவுளின் வார்த்தையின்படி நடந்த இராணுவ வீரன்:

இராணுவ வீரன் ஒருவன் இருந்தான். அவனுக்குக் கடவுள்மீது நம்பிக்கை கிடையாது. அவனுடைய தாய் அவனுக்கு முற்றிலும் மாறாக, கடவுள்மீது ஆழமான நம்பிக்கைகொண்டு வாழ்ந்தார். அவன் பணிபுரியும் இடத்திற்குப் புறப்பட்டபொழுது அவனுடைய தாய் அவனிடம் ஒரு கையடக்கப் புதிய ஏற்பாட்டைக் கொடுத்து, “இதை எப்பொழுதும் உன்னுடைய சட்டைப் பைக்குள் வைத்திரு; நேரம் கிடைக்கின்றபொழுது எடுத்து வாசி” என்றார். அவனோ தன் தாய் சொல்லிவிட்டாரே என்பதற்காகப் அதைத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான்.

அவன் பணிபுரியும் இடத்திற்குச் சென்றபிறகு, எதிரி நாட்டோடு போர்புரியும் சூழல் ஏற்பட்டது. இதனால் அவன் மற்ற இராணுவ வீரர்களோடு சேர்ந்து, எதிரி நாட்டினரோடு போர்புரியச் சென்றான். போரில் குண்டு ஒன்று அவன் மார்பில் பாய்ந்ததும், அவன் அப்படியே சாய்ந்தான். ‘எப்படியும் நாம் இறந்துவிடுவோம்’ என்று அவன் நினைத்துக்கொண்டே, குண்டு பாய்ந்த மார்பைப் பார்த்தான். அங்கு தன் தாய் தன்னிடம் கொடுத்திருந்த புதிய ஏற்பாட்டில் குண்டு பாய்ந்திருந்ததால், அவனுக்கு எதுவும் ஆகவில்லை. இதனால் அவன் மிகவும் வியந்து புதிய ஏற்பாட்டை வாசிக்கத் தொடங்கினான். அவ்வாறு அவன் வாசிக்கும்பொழுது யோவான் 3:16 இல் இடம்பெற்ற இறைவார்த்தை அவனைத் தொட, அவன் புதிய ஏற்பாடு முழுவதையும் வாசிக்கத் தொடங்கி, அதன்படியே வாழத் தொடங்கினான். இதனால் அவன் வாழ்க்கையில் பல மடங்கு உயர்ந்தான்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன் வைத்திருந்த புதிய ஏற்பாடு அவனுடைய வாழ்வைக் காப்பாற்றியோடு அல்லாமல், அவனைப் பலமடங்கு உயர்த்தியது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல் ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர் என்கின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

ஆண்டவரின் திருச்சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் திருப்பாடல் 119, யாரால் எப்பொழுது, எழுதப்பட்டது என்பன பற்றிய குறிப்புகள் இல்லையென்றாலும், ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர் என்ற உண்மையை மிகவும் வலியுறுத்திக்கூறுகின்றது. ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கேட்டோர் அல்ல, அதன்படி நடப்போர் பேறுபெற்றோர் என்ற வார்த்தைகள், “என்னை நோக்கி ஆண்டவரே ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை; மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்” (மத் 7: 21) என்ற இயேசுவின் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துபவையாக இருக்கின்றன. ஆகவே, நாம் ஆண்டவரின் திருச்சட்டத்தின் நடப்பதற்கு முயற்சிசெய்வோம்.

சிந்தனைக்கு:

 நற்பேறுபெற்றவர் யாரெனில், ஆண்டவரின் திருச்சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் (திபா 1: 3).

 கடவுளின் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை (1 யோவா 5: 3)

 கடவுளிடம் அன்புகொண்டிருந்தால், அவரது கட்டளையைக் கடைப்பிடிப்போம் (யோவா 14: 15)

ஆன்றோர் வாக்கு:

‘என்னுடைய துன்பவேளையில், திருவிவிலியம் எனக்கு ஆறுதலையும் ஆற்றலையும் தராமல் இருந்ததே இல்லை’ என்பார் ராபர்ட் இ.லீ என்ற அறிஞர். எனவே நமக்கு ஆறுதலையும் ஆற்றலையும் தரும் திருவிவிலியத்தை வாசித்து வாழ்வாக்கி இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

#மறைத்திரு_மரிய_அந்தோனிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.