இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

✝️தவக்காலம் முதல் வாரம் – புதன் 24/ 02/ 2021 நினிவே மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டு விலகினார்கள் மறையுரை மொட்டுக்கள்

⛪முதல் வாசகம்:-

இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3: 1-10

இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி” என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்று நாள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உரத்தகுரலில், “இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்” என்று அறிவித்தார்.

நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக்கொண்டனர். இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான். மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து, அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். “இதனால் அரசரும் அரச அவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக்கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது.”

கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு!

இறைவனுக்கு நன்றி!


✝️பதிலுரைப் பாடல்:-

திபா 51: 1-2. 10-11. 16-17 (பல்லவி: 17b)

✝️பல்லவி: "நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை"

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.

2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.

11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.  பல்லவி

16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.

17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை.  பல்லவி


✝️நற்செய்திக்கு முன் வசனம்:-

"ஆயன் தன் மந்தையை காப்பது போல ஆண்டவர் நம்மை காத்திடுவார்"

யோவே 2: 12-13

"இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நாம் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர்"


⛪நற்செய்தி வாசகம்:-

"இத்தீய தலைமுறையினர்க்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது"


✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32

அக்காலத்தில்

மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிடமகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்.

தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!

தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!

"ஆண்டவரின் அருள்வாக்கு!

இறைவனுக்கு நன்றி!


 ✝️தலைமைத்துவம்:-

மன்னிக்கும் இறைவன்!

பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த பெரிய எழுத்தாளரும் கடவுள் மறுப்பாளருமான வால்டர், சுவிட்சர்லாந்தில் உள்ள லாசன் (Lousanne) என்ற நகரில் இருந்தபொழுது, அவரைச் சந்திக்க வழக்குரைஞர் ஒருவர் வந்தார். அவர் வால்டரிடம், “ஐயா நீங்கள் கடவுளை மறுத்தும், அவர் இல்லையென்றும் எழுதிக்கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஒன்றை நீங்கள் உங்களது மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள், கடவுள் தன்னை மறுப்போரையும் தனக்கெதிராகப் பேசுவோரையும் கட்டாயம் மன்னிப்பார்; ஆனால், தயவுசெய்து நீங்கள் இந்த நகரில் உள்ள உயரதிகாரிகளுக்கு எதிராக எதுவும் எழுதிவிடாதீர்கள். ஏனெனில், கடவுள் மன்னிப்பது போல், இவர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்” என்றார்

இந்த வழக்குரைஞர் வால்டரிடம் சொன்ன வார்த்தைகள்தான் எத்துணை ஆழமானவை! ஆம், மனிதர்கள் தங்களுக்கு எதிராகப் பேசுபவர்களையும், நடந்து கொள்கின்றவர்களையும் மன்னியாமல் போகலாம்; ஆனால், ஆண்டவர் நிச்சயம் மன்னிப்பவர். ஏனெனில், ஆண்டவர் மன்னிப்பதில் தாராளமானவர். இன்றைய இறைவார்த்தை, தவறுசெய்து பின் மனம்மாறிய நினிவே நகர மக்களை ஆண்டவராகிய கடவுள் மன்னித்து, அவர்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பாததைக் குறித்து வாசிக்கின்றோம். அதைப் பற்றி நாம் சிந்திப்போம்.


✝️விவிலியப் பின்னணி:-

அசீரியரியர்களின் தலைநகர் நினிவே நகர். இங்கு வாழ்ந்தவர்கள் போர்புரிவதில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள். அதே நேரத்தில் பாவத்தில் வீழ்ந்து கிடந்தவர்கள். இப்படிப்பட்ட மக்களிடம் ஆண்டவராகிய கடவுள் தன்னுடைய செய்தியை அறிவிக்குமாறு இறைவாக்கினர் யோனாவை அனுப்பி வைக்கின்றார். அவரும் நினிவே நகருக்குச் சென்று, “இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்” என்று அறிவிக்கின்றார். அவருடைய செய்தியைக் கேட்டு, நினிவே நகர் மக்கள் மனம்மாறுகின்றார்கள். இதனால் ஆண்டவர் அவர்களது குற்றத்தை மன்னித்து, அவர்கள்மீது தாம் அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

“மன்னிப்பதில் ஆண்டவர் தாளர மனத்தினர்” (எசா 55: 7) என்று கூறுவார் எசாயா இறைவாக்கினர். எசாயாவின் இவ்வார்த்தைகளுக்கு அர்த்தம் தருவதாய் இருக்கின்றது, ஆண்டவர் நினிவே நகர மக்களை மன்னித்து, அவர்கள்மீது தாம் அனுப்புவதாக இருந்த தண்டனையை அனுப்பாதது; ஆனால் நினிவே நகர மக்களுக்கு மனமாற்றச் செய்தியை அறிவித்த யோனாவை விட இயேசு பெரியவர். அவரது போதனையைக் கேட்டு மக்கள் மனம்மாறாதுதான் வியப்பாக இருக்கின்றது. அதனால் இயேசு, தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள் என்கின்றார். நாம் இறைவார்த்தையைக் கேட்டு மனம்மாறத் தயாரா? சிந்திப்போம்.


✝️சிந்தனைச் சிதறல்:-

"ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுவது நலம்" (எசா 55: 6).

"பிறஇனத்தாராகிய நினிவே மக்களுக்கு மனமாற்றச் செய்தி அறிவிக்கப்பட்டதன் மூலம், கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர் ஆகின்றார்"

"நமக்கு அறிவிக்கப்படும் நற்செய்தியைக் கேட்டு நாம் மனம் மாறுகின்றோமா?"


✝️அருள்வாக்கு:-

"காலம் நிறைவேறிவிட்டது; மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற் 1: 15) என்பார் இயேசு. எனவே, நாம் அறிவிக்கப்படும் நற்செய்தியைக் கேட்டு மனம்மாறி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


✝️இயேசுவிற்கே புகழ்! ✝️இயேசுவிற்கே நன்றி! ✝️மரியே வாழ்க!