இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லேவியராகமம் - அதிகாரம் 22

அர்ச்சித்தவைகளைப் போஷிக்கும் ஆசார முறைமைகள் இன்னதென்றும்-பலியிடும் மிருகங்களுக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள் இன்னதென்றும் சொல்லுகிறது.

1. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. நீ ஆரோனோடேயும் அவன் குமாரரோடேயும் பேசி, இஸ்றாயேல் புத்திரர்களால் நமக்கென்று நியமித்துப் பிரதிஷ்டையாக்கப் பட்டவைகளை அவர்கள் தொடவே வேண்டாம். அவர்களே நமக்குச் செலுத்தி வருகிற அர்ச்சிக்கப் பட்டவைகளின் நாமத்தைப் பங்கப்படுத்த வேண்டாமென்றுஞ் சொல்லு; நாம் ஆண்டவர.

3. நீ அவர்களையும் அவர்களின் சந்ததியாரையும் நோக்கி: உங்கள் வம்ச சந்ததியாரில் எவனாகிலும் தீட்டுப்பட்டவனாயிருந்து இஸ்றாயேல் புத்திரரால் கர்த்தருக்குப் பிரதிஷ்டையாக ஒப்புக்கொடுக்கப் பட்டவைகள் அண்டையில் சேர்ந்தானானால் அவன் கர்த்தர் சமூகத்திலே கொலை செய்யப் படுவான். நாம் ஆண்டவர்.

* 3-ம் வசனம். இவ்விதமான குற்றம் இரகசியமாயிருக்கும் போது சுவாமி நேரே பழிவாங்குவார. அது பிரசித்தமாயிருக்கும் போதோவென்றால் நீதிக்கர்த்தாக்கள் விசாரணை பண்ணி மரணாக்கினை விதிக்க வேண்டியவர்களாயிருந்தார்கள்.

4. ஆரோனின் சந்ததியாரில் எவன் குஷ்டரோகம் அல்லது பிரமியமுள்ளவனோ அவன் சொஸ்தமாகுமட்டும் நமக்குப் பிரதிஷ்டையாக்கப் பட்டவைகளில் ஒன்றையும் புசிக்கலாகாது. பிணத்தை ஸ்பரிசித்ததினாலே தீட்டுள்ளவனையும் சுக்கில ஸ்கலிதமுள்ளவனையும்,

5. தீட்டுப் படுத்தும் யாதொரு ஊரும் பிராணியாவது மற்றுமுள்ள தொடப்படாத வஸ்துவையாவது எவன் தொட்டானோ,

6. அவன் அந்தி வரையிலும் அசுத்தனாயிருந்து பிரதிஷ்டையாக்கப் பட்டவைகளை புசிக்கலாகாது. ஆனால் அவன் தன் சரீரத்தைத் தண்ணீரால் கழுவி,

7. சூரியன் அஸ்தமித்த பின்பு சுத்திகரமடைவானானால் அப்பொழுது தனக்குச் சொந்த ஆகாரமாகிய பிரதிஷ்டையானவைகளைப் புசிக்கலாம்.

8. குருக்கள் தானாய்ச் செத்ததையாகிலும், துஷ்டமிருகத்தால் பீறுண்டதையென்கிலும் புசிக்காமலும் அதுகளில் தீட்டுக் கொள்ளாமலுமிருப்பார்களாக. நாம் ஆண்டவர்.

9. அவர்கள் பாவத்துக்குட்படாதபடிக்கும், பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தின பிறகு அவர்கள் அதிலே சாகாதபடிக்கும் நம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக் கடவார்கள். நாம் அவர்களை அர்ச்சிக்கிற கர்த்தர்.

10. அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது. ஆசாரியன் வீட்டில் குடியிருக்கிறவனும் கூலிவேலை செய்கிறவனும் அவைகளில் புசிக்கலாகாது.

11. ஆயினும் ஆசாரியனால் பணத்துக்குக் கொள்ளப் பட்டவனும், அவன் வீட்டிலே பிறந்திருப்பவனும் அதுகளிலே புசிக்கலாம்.

12. குருவின் குமாரத்தி சனங்களில் ஒருவனோடு வாழ்க்கைப்பட்டால் அவள் பரிசுத்தமானவைகளிலும், படைக்கப் பட்ட நவபலன்களிலும் புசிக்கலாகாது.

13. ஆனால் அவள் விதவையாகி அல்லது பிள்ளையில்லாது தள்ளுபடியானவளாகி தகப்பன் வீட்டிற்குத் திரும்பி வந்தவளானால் அவள் சிறு பெண்ணான நாளிலே எப்படிச் சாப்பிட்டு வந்தாளோ அப்படியே இப்பவும் தகப்பனுடைய ஆகாரத்திலே புசிக்கலாம். அந்நியர் ஒருவனும் அதில் புசிக்கலாகாது.

14. எவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்தானோ அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டிப் பரிசுத்தமானவைகளோடு கூட ஆலயத்திற்காகக் குருவிடத்திற் கொடுத்து விடக் கடவான்.

15. இஸ்றாயேல் புத்திரரால் கர்த்தருக்குப் படைக்கப் பட்டவைகளை அவர்கள் பரிசுத்தக் குறைச்சல் பண்ணாதிருப்பதாக.

16. அவர்கள் பரிசுத்தமானவைகளைப் புசித்தால் அவர்கள் தங்களுடைய குற்றத்துக்காகத் தண்டிக்கப் படுவதற்கு அஞ்சக் கடவார்கள். அவர்களை அர்ச்சிக்கின்ற கர்த்தர் நாமேயென்று திருவுளம்பற்றினார்.

17. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

18. நீ ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்றாயேல் புத்திரர் அனைவரையும் நோக்கிச் சொல்ல வேண்டியதென்னவென்றால்: இஸ்றாயேலித்தாரிலும் உங்கள் இடத்தில் தங்குகிற அந்நியர்களிலும் யாதாமொருவன் தன் பொருத்தனைகளின் படியாவது தன் உற்சாகத்தின் படியாவது தன் காணிக்கை ஒப்புக் கொடுக்க வரும்போது அவனுடைய காணிக்கை கர்த்தருக்குச் சர்வாங்கத் தகனப் பலிக்கென்று எவ்வகைப் பட்டிருந்த போதிலும்,

19. அதைப் படைக்க வேண்டுமென்று உங்களைக் கேட்டால் மாடுகளிலாவது, செம்மறியாடுகளிலாவது, வெள்ளாடுகளிலாவது பழுதற்ற ஆணாயிருக்க வேண்டும்.

20. அது பழுதானதாகில், (அதைச்) செலுத்தாதிருப்பீர்கள். அது ஏற்றுக்கொள்ளப் படத் தக்கதல்ல.

21. ஒருவன் பொருத்தனையாகவாவது உற்சாகமாகவாவது மாடுகளிலும் சரி, ஆடுகளிலும் சரி கர்த்தருக்குச் சமாதானப் பலியைச் செலுத்தப் போனால் அது அங்கீகரிக்கப் படும்படி ஒரு பழுதுமின்றி உத்தமமாயிருக்க வேண்டும்.

22. அது குருடு, நெரிசல், தழும்பு, கொப்புளம், சொறி, சிறங்கு முதலிய பழுதுகள் உள்ளதாகில் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவுமாகாது. ஆண்டவருடைய பலிபீடத்தில் சர்வாங்கத் தகனப் பலியிடவுமாகாது.

23. நீ உற்சாகத்தின்படி ஆட்டையாவது மாட்டையாவது படைக்கச் சித்தமுள்ளவனாயிருந்தால் அறுத்த காதும் முறித்த வாலுமுடைய மிருகத்தைப் பலியிட்டாலுமிடலாம். ஆனால் பொருத்தனைக்காக அது அங்கீகரிக்கக் படமாட்டாது.

24. விரை நசுங்கினதையும், நொறுங்கியதையும் சத்திரக் கத்தியால் விரை எடுக்கப் பட்டதையும் கர்த்தருக்குப் படைத்தலாகாது. உங்கள் தேசத்தில் அதைப் பரிச்சேதஞ் செய்யலாகாது.

25. நீங்கள் அன்னியன் கையிலே அப்பங்களையாவது வேறொன்றையுமாவது வாங்கி அவன் பேராலே கர்த்தருக்குச் செலுத்தாதேயுங்கள். உள்ளபடி அது எல்லாம் தீட்டும் பழுதுமுள்ளது. அவற்றை ஏற்றுக் கொள்ளவும் ஆகாது என்றருளினார்.

26. மறுபடியும் கர்த்தர் மோயீசனை நோக்கி:

27. கன்றுகுட்டியாவது, செம்மறி ஆட்டுக் குட்டியாவது, வெள்ளாட்டுக் குட்டியாவது பிறந்தால் அது ஏழுநாள் தன் தாயின் முலைப்பாலைக் குடிக்கும். ஆனால் எட்டாம் நாளில் அல்லது அதற்குப் பின்வரும் நாளில் அது கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கப் படலாம்.

28. (படைக்கலாமென்றாலும்) பசுவையும் ஆட்டையும் தன் தன் குட்டிகளுடன் ஒரே நாளில் பலியிடலாகாது.

29. உங்கள் பேரில் கர்த்தர் தயாபரராய் இருக்கும்படி அவருக்கு நன்றியறிதலாக ஒரு பலி செலுத்துவீர்களானால்,

30. அதை அதே நாளிற் புசிப்பீர்கள். அதில் யாதொன்றும் மறுநாள் சூரியோதய மட்டும் மீதியிருக்கலாகாது. நாம் ஆண்டவர்.

31. நமது கற்பனைகளைக் கைக்கொண்டு அந்தப் படி நடக்கக் கடவீர்கள். நாம் ஆண்டவர்.

32. நாம் இஸ்றாயேல் புத்திரர் நடுவே பரிசுத்தரென்று மதிக்கப் படும்படியாய் நமது நாமத்தைப் பங்கப் படுத்தாதேயுங்கள். உங்களைப் பரிசுத்தமாக்குகிறவர் நாமே.

33. உங்கட்குத் தேவனாகவிருக்கும்படி (உங்களை) எஜிப்த்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணினோம். நாமே ஆண்டவர்.