இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 21

வேலைக்காரரான ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகளைக் குறித்தும் - திருட்டு களவு பண்ணுகிறவர்களைக் குறித்தும் - தாய்தந்தையரைச் சபிக்கிறவர்களைக் குறித்தும் - தேவன் சொல்லிய நீதி விதிகளின் வரலாறு.

1. நீ அவர்களுக்கு நியமித்துச் சொல்ல வேண்டிய நீதிச் சட்டங்களாவன:

2. எபிறேய அடிமையானவனை நீ விலைக்கு வாங்கினால் அவன் உனக்கு ஆறு வருஷம் ஊழியம் செய்து, ஏழாம் வருஷத்திலே ஒன்றும் கொடாமல் சுயாதீனனாய்ப் புறப்படுவான்;

* 2-ம் வசனம். அந்தப் பூர்வீகக் காலத்திலே அடிமைகளை வைத்துக் கொள்ளுகிறது எல்லாச் ஜாதி ஜனங்களுக்கு வழக்கம். அவர்களுடைய எஜமானர்கள் அவர்களை மனிதரென்று பாவிக்காமல் மிருகங்களென்றே எண்ணுவார்கள்; ஆதலால் அற்பக் குற்றத்தைப்பற்றியாவது யாதொரு முகாந்தரமுமில்லாமலாவது அவர்களை அநியாயமாய் அடிக்கவும் உதைக்கவும் கொலை செய்யவும் முதலாய் அஞ்சமாட்டார்கள். கேள்வியுமில்லை, உத்தரவுமில்லை. சர்வேசுரன் மோயீசனுக்குத் தந்தருளிய கற்பனைகளால் இஸ்றாயேலியரிடத்திலிருந்த அடிமைக ளுடைய நிலைமை காலத்திற்கும் அவசரத்திற்கும் ஒக்குமாப்போல இளக்காரமாகி விட்டது.

3. எவ்வித வஸ்திரத்தோடு வந்திருந்தானோ அவ்வித வஸ்திரத்தோடு புறப்படுவான். அவன் பெண்சாதியைக் கொண்டவனானால் ஸ்திரீயுங் கூடப் போகக்கடவாள்.

4. ஆனால் எஜமானன் அவனுக்கு ஒரு பெண்ணை விவாகம் செய்துகொடுத்து அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் பெற்றிருப்பாளானால் அந்த ஸ்திரீயும் அவள் பிள்ளைகளும் எஜமானைச் சேருவார்கள்.

5. அடிமையானவனோ: என் எஜமானையும் என் பெண்சாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன், விடுதலை பெற்றுப் போக எனக்கு மனதில்லை என்று சொன்னால்,

6. அவன் எஜமான் அவனை அதிகாரிகளிடத்திலே அழைத்துக்கொண்டு போய் அவனைக் கதவின் அருகேயாவது கதவு நிலைகளின் அருகேயாவது இருத்திப் பிறகு எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்துவான். அதனால் அவன் என்றைக்கும் அவனிடத்தில் சேவித்துக்கொண்டிருக்கக் கடவான்.

7. ஒருவன் தன் குமாரத்தியை வேலைக்காரியாக விற்றுப்போட்டானாகில் வேலைக்காரிகள் விடுதலை பெற்றுப் போவது போல, அவள் போகக் கூடாது.

8. அவளைக் கைக்கொண்ட எஜமான் பார்வைக்கு அவள் தகாதவளாய்ப் போனால் அவன் அவளைப் போகவிடுவான். ஆனால் அவளை அவன் பங்கப்படுத்தியிருப்பானாகில் அவளை அந்நியர் கையில் விற்றுப்போட அவனுக்கு அதிகாரமில்லை.

9. அவன் தன் மகனுக்கு அவளை நியமித்திருந்தானானால் தன் குமாரத்திகளை நடத்துகிறது போல அவளையும் நடத்தக்கடவான்.

10. பிறகு அவன் தன் மகனுக்கு வேறொரு பெண்ணை மனைவியாகக் கொடுப்பானாகில் மேற்சொல்லிய பெண்ணுக்கு அன்னவஸ்திரமும், வேறொரு கலியாணத்துக்குச் செலவும், அவள் கன்னிமை நஷ்டத்துக்குப் பரிகாரப் பணமும் ஆகிய இவைகளில் குறைவு செய்யாமல் கொடுக்கக்கடவான்.

11. அவன் இம்மூன்றையும் அவளுக்குச் செய்யாதபட்சத்தில் அவள் பணமொன்றும் கொடாமலே சும்மாய்ப் போவாள்.

12. கொல்லவேண்டுமென்ற கருத்தோடு ஒரு மனிதனை அடிப்பவனெவனோ, அவன் கொலை செய்யப்படக்கடவான்.

13. பதிவிருந்து கொல்லாமல் தேவச் செயலால் தன் கைக்கு நேரிட்டவனைக் கொலை செய்தவனெவனோ அவன் ஓடிப் போய் நாம் பின்னும் நியமிக்கப்போகிற ஸ்தலத்திற்கு அடைக்கலந் தேடக்கடவான்.

14. ஒருவன் வேண்டுமென்று பதிவிருந்து தன் பிறனைக் கொன்றிருப்பானாகில் அவனை நமது பீடத்தினின்றே பறித்துக் கொண்டுபோய்க் கொல்லக்கடவாய்.

15. தன் தகப்பனையாவது தாயையாவது அடித்திருப்பவன் எவனோ அவன் சாகவே சாகக்கடவான்.

16. ஒரு மனிதனைத் திருடி விற்றிருப்பவன் எவனோ அவன் குற்றவாளியென்று ருசுவானவுடன் சாகவே சாகக்கடவான்.

17. தனது தகப்பனையாவது தாயையாவது சபித்திருப்பவன் எவனோ அவன் சாகவே சாகக்கடவான்.

18. இரண்டு பேர் சண்டை ஒருவன் மற்றொருவனைக் கல்லாலெறிந்தா வது, கை குத்துக் குத்தியாவது அடித்ததினா லே அவன் சாகாமல் படுக்கையாய்க் கிடந்து,

19. பிறகு எழுந்திருந்து தன் கோலின் மேலூன்றி வெளியே நடமாடினால் அடித்தவன் அவனுக்கு உண்டான மானக் கேட்டைப் பற்றியும் வைத்தியர் செலவைப் பற்றியும் நஷ்டத்துக்குப் பரிகாரம் பண்ணினால் குற்றமில்லாதவனாயிருப்பான்.

20. ஒருவன் தனக்கு அடிமையானவ னையாவது அடிமையானவளையாவது தடியால் அடித்திருக்க அவர்கள் அவன் கையாலே இறந்துபோனால் அவன் குற்ற வாளியாவான்.

21. ஆனால் (அடியுண்டபேர்) ஒருநா ளாவது இரண்டுநாளாவது உயிரோடிருந்தால் அவர்கள் எஜமானுடைய உடைமையாகையால் எஜமானைத் தண்டிக்க வேண்டியதில்லை.

22. மனிதர் சண்டையிலே ஒருவன் கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை அடித்ததினாலே கரு விழுந்திருந்தபோதிலும் அவள் உயிரோடு தப்பித்துக் கொண்டால், அவளுடைய புருஷன் கேட்டபடி நியாயாதிபதிகள் எவ்வளவு தண்டம் விதிப்பார்களோ அவ்வளவுக்கவன் தண்டமிறுப்பான்.

23. ஆனால் மரணம் நேரிட்டிருந்தால் பிராணனுக்குப் பிராணனை உத்தரிப்பான்.

24. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்.

25. சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழிகொடுக்க வேண்டும்.

26. யாதாமொருவன் தனது அடிமையானவனையாவது, அடிமையானவளையாவது கண்ணில் அடி கொடுத்ததினாலே அவர்கள் கண் குருடரானால் நஷ்டமான கண்ணுக்குப் பதிலாக அவர்களை விடுதலை பண்ணி விடக்கடவான்.

27. அப்படியே அவன் தன் அடிமையானவனுடைய பல்லையாவது, அடிமைப் பெண்ணுடைய பல்லையாவது உதிர அடித்திருந்தால் அவர்களைச் சுயாதீனராக்கி விடுதலை செய்யக்கடவான்.

* 27-ம் வசனம். குற்றத்திற்கும் ஆக்கினைக்கும் தராதர பொருத்தம் இருக்க வேண்டு மென்பதே இம்மூன்று வசனங்களின் தாற்பரியம். யூதர்களில் சிலர் இந்த அர்த்தத்தைப் புரட்டியுருட்டி எவனும் சுய அதிகாரத்தினாலே பழிக்குப் பழி வாங்கலாமென்று போதிக்கத் துணிந்தார்கள். இது பெரிய தப்பறையென்று பின்வரும் வசனங்களைக்கொண்டு தெளிவாகத் தெரியவரும். (மத். 5:43,48)

28. ஒரு மாடு ஒரு பூமானையாவது ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினாலே அவர்கள் மரித்தால் அந்த மாடு கல்லாலெறியப் படவேண்டும். அதன் மாமிசம் புசிக்கப்படலாகாது. ஆனால் மாட்டெஜமான் குற்றவாளியாக மாட்டான்.

29. ஆயினும் தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடென்று சொல்லிச் ஜனங்கள் எஜமானுக்குத் தெரிவித்திருந்தும் அவன் அதைக் கட்டி வைக்காததினாலே அது ஒரு பூமானையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்றுபோட்டால் மாடும் கல்லாலெறியப்பட வேண்டும். மாட்டு எஜமானும் கொலை செய்யப்பட வேண்டும்.

30. ஆனால் அவனுக்கு அபராதங் கொடுக்கும்படி விதிக்கப்பட்டதானால் அவன் தன் பிராணனை மீட்டிரட்சிக்கத்தக்கதாக எம் மாத்திரம் தண்டங் கொடுக்கக் கேட்பார்களோ அம்மாத்திரம் இறுக்கக்கடவான்.

31. ஒருவனுடைய மகனையாவது மகளையாவது மாடு முட்டினால் அந்தத் தீர்ப்புப்படியே மாட்டுக்குடையவனுக்குச் செய்யப் படும்.

32. அடிமையானவனையாவது அடிமைப் பெண்ணையாவது மாடு முட்டியிருந்தால் மாட்டுக்குடையவன் (அவர்களுடைய) எஜமானுக்கு முப்பது வெள்ளிச் சீக்கில்களைக் கொடுப்பான். மாடோவென்றால் கல்லாலெறியப்பட வேண்டும்.

33. யாதாமொருவன் ஒரு கிணறு வெட்டித் திறந்து அதை மூடாமல் விட்டிருந்ததினாலே மாடாவது வேசரியாவது அதில் விழுந்ததாகில்,

34. கிணற்றுக்குடையவன் மிருகம் செத்த நஷ்டத்திற்குப் பரிகாரமாக வேண்டிய பணம் கொடுக்கவேண்டும். செத்த மிருகமோ அவனுடையதாகும்.

35. ஒருவனுடைய மாடு மற்றொருவனுடைய மாட்டைக் காயப்படுத்தினதினாலே ஒருவேளை அது செத்தால் உயிரோடிருக்கிற மாட்டை விற்றுப்போட்டு, இருவரும் அதன் கிரயத்தைப் பங்கிட்டு செத்த மாட் டையும் பங்கிட்டுக் கொள்ளக்கடவார்கள்.

36. ஆனால் அந்த மாடு முன்னமே முட்டுகிற மாடென்று எஜமான் அறிந்திருந்தும், அதைக் கட்டிவைக்காதிருந்தால் மாட்டுக்கு மாட்டைக் கொடுத்து உத்தரிக்கக்கடவான்; செத்த மாடோ அவனுடையதாக வேண்டும்.