இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 19

சீனாயி மலையிலே தேவன் மோயீசனுக்குத் தரிசனமானது.

1. இஸ்றாயேலியர் எஜிப்த்து தேசத்திலிருந்து புறப்பட்டுவந்த மூன்றாம் மாதம் மூன்றாந்தேதியில் சீனாயியென்னும் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.

2. எங்ஙனமெனில் இராப்பிதிம் ஸ்தலத்திலிருந்து பிரயாணப்பட்டு சீனாயியென்னும் வனாந்தரத்திற்சேர்ந்து அவ்விடத்தில் தானே பாளையமிறங்கினார்கள். அங்கே இஸ்றாயேலியர் மலைக்கு எதிரே கூடாரங்களை அடித்தார்கள்.

3. மலையிலிருந்து தேவன் தன்னைக் கூப்பிடுகிறதைக் கேட்டு மோயீசன் அவருடைய சந்நிதிக்கு ஏறினபோது, கர்த்தர் அவனை நோக்கி: நீ யாக்கோபு வம்சத்தாராகிய இஸ்றாயேல் புத்திரரிடத்தில் சொல்லி அறிவிக்கவேண்டியதேதெனில்:

4. நாம் எஜிப்த்தியருக்குச் செய்த வகைகளையும், உங்களை நாம் கழுகுகளின் இறக்கைகள் மேல் சுமந்து நமக்குச் சொந்தமாய் அங்கீகரித்துக்கொண்ட விதத்தையும் நீங்களே கண்டிருக்கிறீர்கள்.

5. ஆகையால் நீங்கள் நமது வாக்கைக் கேட்டு, நமது உடன்படிக்கையைக் கைக் கொண்டு அனுசரிப்பீர்களேயாகில் சகல ஜனங்களிலும் நீங்கள் நமக்கு அதிக பிரியமான ஆட்சியாயிருப்பீர்கள். ஏனெனில், பூமியெல்லாம் நம்முடையது.

6. அன்றியும் நீங்கள் நமக்குக் குருவுக்குரிய இராச்சியமும் பரிசுத்த ஜாதியுமாயிருப்பீர்கள். இவை நீ இஸ்றாயேல் புத்திரரோடு சொல்லவேண்டிய வார்த்தைகளா மென்றார்.

7. மோயீசன் வந்து ஜனங்களின் பெரி யோர்களை அழைப்பித்துக் கர்த்தர் தனக் குச் சொல்லிக் கற்பித்த வார்த்தைகள் அனைத்தையும் அவர்களுக்கு விபரமாய்ச் சொல்ல,

8. ஜனங்கள் எல்லாரும் ஒருங்குடன் மறுவுத்தரம்பண்ணி: கர்த்தர் சொன்னவை யெல்லாம் செய்வோம் என்றார்கள். பிறகு ஜனங்களின் வார்த்தையை மோயீசன் கர்த்தரிடத்தில் தெரிவித்தபோது;

9. கர்த்தர் அவனை நோக்கி: நாம் உன் னோடு பேசும்போது ஜனங்கள் கேட்டால் அவர்கள் என்றைக்கும் உன்னை நம்புவார்கள். அது நிமித்தமாக நாம் இனிமேல் கார் மேகத்திலிருந்து வருவோம் என்றார். ஜனங் களின் வார்த்தைகளை மோயீசன் ஆண்டவ ருக்குத் தெரிவித்தபோது,

10. இவர் அவனை நோக்கி: நீ போய் இன் றும் நாளைக்கும் ஜனங்களைச் சுத்திகரம் பண்ணு, அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கழுவிக்கொண்டு,

11. மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டி ருக்கக் கடவார்கள்; ஏனெனில் மூன்றாம் நாளிலே கர்த்தர் சகல ஜனங்களுக்கு முன்பாகச் சீனாயி மலைமேல் இறங்குவார்.

12. மலைக்குச் சுற்றிலும் நீ ஜனங்கள் மீறி கடக்கக்கூடாத எல்லைக் கல்லை நாட்டி: நீங்கள் மலைமேலேற வேண்டாம். அதன் அடிவாரத்தை முதலாய்த் தொட வேண்டாம், எச்சரிக்கையாயிருங்களென்றும், எவன் மலையைத் தொடுவானோ அவன் சாகவே சாவான் என்றும்,

13. அப்படிப்பட்டவனை யாரும் தீண்டக் கூடாது. அவன் கல்லெறியுண்டாகிலும் வேலால் எய்யப்பட்டு என்கிலும் சாக வேண்டும். மனிதனானாலும் சரி, மிருகமானாலும் சரி உயிரோடே வைக்கப்படல் ஆகாது. ஆனால் எக்காள முழக்கம் எக்காலஞ் சப்திக் கத் தொடங்குமோ அப்போதே ஜனங்கள் மலைமேலேறக் கடவார்கள் என்றருளினார்.

14. மோயீசன் மலையிலிருந்து இறங்கிச் ஜனங்களிடத்தில் வந்து அவர்களைச் சுத்தி கரப்படுத்தினான். அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்த பிற்பாடு,

15. அவன் அவர்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தமாயிருங்கள். உங்களுடைய மனைவிகளிடத்தில் சேராதிருங்கள் என்றான்.

* 15-ம் வசனம். சம்சார வாழ்க்கை பாவதோஷமுள்ளதல்ல என்றாலும் சர்வேசுரனை அண்டவேண்டிய ஆடம்பரமான சமயங்களிலே அதைத் தற்காலம் நிறுத்தி விடுவது தகுதியாம். அது முகாந்தரமாகத் திருச்சபையிலுள்ள குருப்பிரசாதிகள் தினந்தோறும் திவ்விய பூசையென்னும் பரிசுத்தப் பலியை ஒப்புக்கொடுப்பதினால், அவர்கள் விரதத்துவத்தை அனுசரிக்க வேண்டுமென்று திருச்சபை மாறாத கட்டளையாக ஸ்தாபித்திருக்கிறது. இச்சுகிர்தமான முறைமையை எவர்கள் பழிக்கிறார்களோ அவர்கள் புத்தியீனர் என்றாலும் என்கலாம்.

16. மூன்றாம் நாள் அருணோதய நேரத்தில் இதோ இடிமுழக்கம் கேட்கப்படவும், மின்னல்கள் மின்னவும் மலையின்மேல் கார் மேகம் வந்து மூடவும், எக்காளம் நெடுந்தொனி தொனிக்கவும் தொடங்கியது. ஆனது பற்றிப் பாளையத்திலிருந்த ஜனங்களெல்லோரும் அச்சமுற்றனர்.

17. அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக மோயீசன் அவர்களைப் பாளைய ஸ்தானத்திலிருந்து கூட்டிக் கொண்டு வந்தான். அவர்கள் மலையின் அடிவாரத்திலே நின்றார்கள்.

18. கர்த்தர் சீனாயி மலைமீது அக்கினியில் இறங்கினபடியாலும், சூளையிலிருந்து புகை புறப்படுமாப்போல மலையினின்று புகை எழும்புவதினாலும் அந்தச் சீனாயி பர்வதம் புகைக் காடாகிப் பார்க்கிறதற்குப் பயங்கரமாயிருந்தது.

19. எக்காளத்தின் ஒலியும் வரவரப் பலமாய்த் தொனித்து அதிதூரமாய்ச் சப்தித்துக்கொண்டிருக்க, மோயீசன் தேவனோடே பேசியும், அவனுக்குக் கர்த்தர் மறுவுத்தரஞ் சொல்லியும் இருந்தார்.

20. அப்புறங் கர்த்தர் சீனாயி மலையின் மீதுள்ள கொடுமுடியிலிறங்கி மோயீசனை உச்சத்திலே வரச்சொல்லிக் கூப்பிட்டார். அவன் அங்கே ஏறினபோது,

21. அவர் மோயீசனை நோக்கி: ஜனங்கள் கர்த்தரைப் பார்க்கவேண்டி எல்லைகளைக் கடந்துவரத் துணியாதபடிக்கும், அதினாலே அவர்களில் அநேகாநேகர் அழிந்து போகாதபடிக்கும் நீ இறங்கிப்போய், அவர்களை எச்சரித்து வை. 

22. மேலும் கர்த்தரின் சந்நிதிக்கு வருகிற ஆசாரியர்களும் தங்களைப் பரிசுத்தப்படுத்தக் கவனமுள்ளவர்களாய் இருக்கச் சொல்லு, இல்லாவிட்டால் கர்த்தர் அவர்களைச் சங்கரித்துப் போடுவார்.

23. அதற்கு மோயீசன்: ஆண்டவரே மலைச் சுற்றிலும் எல்லைக் கல் வைக்கச் சொல்லி, ஜனங்களைச் சுத்திகரப்படுத்தத் தேவரீர்தானே கட்டளையிட்டிருக்கிறீர். ஆகையால் ஜனங்கள் சீனாயி மலைமேல் ஏறிவர மாட்டார்கள் என்றான்.

24. கர்த்தர் அவனை நோக்கி: நீ இறங்கிப் போ. பின்னும் நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள். மீளவும் கர்த்தர் சங்காரம் பண்ணுவாரென்று சொல்லி, ஆசாரியர்களும் ஜனங்களும் கர்த்தரிடத்தில் வரும்படி எல்லைகளைக் கடக்க வேண்டாமென்று எச்சரிக்கையாயிருக்கச் சொல் என்றார்.

25. அப்படியே மோயீசன் இறங்கி ஜனங்களிடத்தில் போய் அவையெல்லாம் அவர்களுக்கு அறிவித்தான்.