இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லேவியராகமம் - அதிகாரம் 14

குஷ்டரோகிகளுடைய சுத்திகரிப்புக்கடுத்த சடங்குகளையும் வீடுகளின் தோஷங்களையும் குறித்து.

1. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. குஷ்டரோகியினுடைய சுத்திகரிப்பு நாளில் அவனுக்கடுத்த ஆசாரப் பிரமாணம் என்னவெனில், அவனைக் குருவிடத்தில் கொண்டு வருவார்கள்.

* 2-ம் வசனம். அதிக பயங்கரமும் அரோசிகமுமான குஷ்டரோகத்தைக் குறித்து மூன்று காரியங் கவனிக்கத் தகும். 1-வது, அந்த ரோகம் இஸ்ராயேலியரிடத்தில் கூடிய மட்டும் பரவாதபடிக்குச் சுவாமி பெயராலே மோயீசன் அவர்களுக்கு மகா விசேஷ பி;திமதிகளைச் சொல்லியும் அது உண்டான பட்சத்தில் அதையொழித்து விடத் தகுதியான வழிப்பாடுகளையும் காண்பித்து வருகிறார். 2-வது, அப்படிப்பட்ட ரோகமுள்ளவர்கள் தங்களுடைய நிர்ப்பாக்கியமான அந்தஸ்திலே மிதமற்ற கஸ்திப்பட்டுப் புத்தி மயங்காதபடிக்கு மோயீசன் அவர்களைக் குருப்பிரசாதிகளுடைய விசேஷ விசாரணையில் ஒப்பித்து விட்டார். 3-வது, குஷ்டரோகமானது பாவத்திற்கு அடையாளமாம். அக்காலத்துக் குஷ்டரோகிகக்ள தங்கள் சரீரத்தைக் குருமார்களுக்குக் காண்பித்து அவர்களுடைய தீர்ப்புக்கு எப்படிக் காத்திருக்க வேண்டியதாயிருந்ததோ அப்படியே இக்காலத்துக் கிறீஸ்துவர்கள் தங்கள் ஆத்துமத்திலுள்ள பாவரோகத்தைக் குருசுவாமியாரிடத்தில் காண்பிக்கப் பாவசங்கீர்த்தனம் பண்ணி அவர்களுடைய தீர்ப்பாகிய பாவப்பொறுத்தலுக்குக் காத்திருக்கக் கடவராக.

3. அவன் பாளையத்திற்குப் புறம்பாகப் போய்க் குஷ்டம் சொஸ்தமாயிற்றென்று கண்டால்,

4. சுத்திகரிக்கப் பட வேண்டியவனுக்காக உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு அடைக்கலான் குருவிகளையும், கேதுருக் கட்டையையும், இரத்தாம்பர நூலையும், ஈசோப்பையும் கொண்டு வந்து ஒப்புக் கொடுக்கக் கடவான்.

5. பிறகு அடைக்கவான் குருவிகளில் ஒன்றை மண்பாத்திரத்திலுள்ள ஊற்று நீர் மேல் பலியிடச் சொல்லி,

6. உயிருள்ள மற்றக் குருவியையும் கேதுருக் கட்டையையும் இரத்தாம்பர நூலையும் தான் எடுத்து, இவைகளைப் பலியிடப் பட்ட அடைக்கலான் குருவியின் இரத்தத்திலே தோய்த்து,

7. சுத்திகரிக்கப்பட வேண்டியவன் மேல் ஏழு விசையுந் தெளித்துப் போடுவான். அதினால் அவன் சட்டப்படி சுத்தமுள்ளவனாவானொழிய மற்றப்படியல்ல. அப்புறங் குரு உயிரோடிருக்கும் குருவியை வெளியிலே பறந்தோடும்படி விட்டுவிடுவான்.

8. பிறகு அம்மனிதன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துக் கழுவி உடம்பிலுள்ள மயிரெல்லாஞ் சிரைத்துக் கொண்டு தண்ணீரிற் குளிப்பான். இப்படி அவன் சுத்திகரமடைந்து பாளையத்திற் பிரவேசிப்பான். ஆயினும் ஏழுநாள் பரியந்தம் தன் கூடாரத்துக்குப் புறம்பே தங்கக் கடவான்.

9. ஏழாம் நாளிலோ அவன் தலைமயிர்களையும் தாடியையும், புருவங்களையும், உடம்பு முழுவதிலுமுள்ள மயிர்களையும் சிரைத்துக் கொண்ட பிற்பாடு வஸ்திரங்களைத் தோய்த்து ஸ்நானம் பண்ணி,

10. எட்டாம் நாளிலே மாசில்லாத இரண்டு ஆட்டுக் குட்டிகளையும், ஒரு வயதுள்ள பழுதற்ற ஒரு பெண்ணாட்டையும் போஜனப் பலிக்காக எண்ணையில் பிசைந்த ஒரு மரக்காலிலே பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவையும், அது போக ஆழாக்கு எண்ணையையும் கொண்டு வருவான்.

11. அப்பொழுது அம்மனிதனைச் சுத்திகரிக்கிற குரு அவனையும் அந்த வஸ்துக்கள் எல்லாவற்றையும் சாட்சியக் கூடார வாசலிலே கர்த்தருடைய சமூகத்திலே நிறுத்தின பின்பு,

12. ஆட்டுக் குட்டியைப் பிடித்து அதையும் ஆழாக்கெண்ணையையும் பாவப் பரிகாரமாக ஒப்புக் கொடுப்பான். சகலத்தையும் கர்த்தர் சமூகத்திலே ஒப்புக் கொடுத்த பின்பு,

13. பாவ நிவாரணப் பலியும், சர்வாங்கத் தகனப் பலியும் எவ்விடத்தில் பலியிடப்படுமோ அந்தப் பரிசுத்த ஸ்தலத்தில்தானே ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவான். ஏனென்றால் பாவ நிவாரணப் பலியைப் போலவே, குற்றப் பரிகாரப் பலியும் குருவுக்குரியது. அது பரிசுத்தத்திலும் பரிசுத்தமே.

14. பின்னுங் குரு குற்றப் பரிகாரமாகப் பலியிடப் பட்ட மிருகத்தின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, சுத்திகரம் பண்ணப் படுகிறவனுடைய வலது காதின் ம்டலிலும், வலது கை கால்களுடைய பெருவிரலிலும் தடவுவான்.

15. ஆழாக்கெண்ணையிலும் தன் இடது கையிலே (கொஞ்சம்) வார்த்து,

16. அதில் வலது கையில் விரலைத் தோய்த்துக் கர்த்தர் சமூகத்திலே ஏழு முறை தெளிப்பான்.

17. இடது கையில் மீதியாயிருக்கிற எண்ணையையோ சுத்திகரிக்கப் படுகிறவனுடைய வலது காதின் மடலிலும், வலது கை கால்களுடைய பெருவிரல்களிலும், குற்ற நிவிர்த்திக்காகச் சிந்தப் பட்ட இரத்தத்தின் மேலும்,

18. அவனுடைய தலையின் மேலும் வார்ப்பான். 

19. அப்புறங் கர்த்தர் சமூகத்தில் அவனுக்காகப் பிரார்த்தித்துப் பாவ நிவாரணப் பலியையும் செலுத்தி, சர்வாங்கத் தகனப் பலி மிருகத்தைக் கொன்று,

20. அதையும் அதைச் சேர்ந்த பான போஜனப் பலியையும் பீடத்தின்மீது வைத்துக் கொள்ளுவான். அவ்விதமே மனிதன் பிரமாணப்படி சுத்தமுள்ளவனாவான்.

21. ஆனால் அவன் ஏழையாயிருந்து (மேற்)சொல்லியவற்றைச் சேகரிக்கச் சக்தியற்றவனானால், குரு அவனுக்காக மன்றாடும்பொருட்டுக் குற்றப் பரிகாரத்திற்கு ஒப்புக் கொடுக்கப் பட வேண்டிய ஓர் ஆட்டுக் குட்டிçயும் போஜனப் பலிக்காக எண்ணையிற் பிசைந்த ஒரு மரக்கால் மெல்லிய மாவிலே பத்திலோரு பங்கையும் ஆழாக்கெண்ணையையும் பொண்டு வந்து,

22. இரண்டு காட்டுப் புறாக்களையாவது, இரண்டு மாடப்புறாக்களையாவது, அவைகளில் ஒன்று பாவநிவாரணத்திற்காகவும் மற்றொன்றை சர்வாங்கத் தகனப் பலிக்காகவும் வாங்கி,

23. அவைகளைத் தனது சுத்திகரத்தின் எட்டாம் நாளில் சாட்சியக் கூடார வாசலிலே 

24. இவன் குற்றப் பரிகாரப் பலியாக ஆட்டுக் குட்டியையும், ஆழாக்கெண்ணையையும் வாங்கிக் கொண்டு ஒருமிக்கத் தூக்கி அசைவாட்டி,

25. ஆட்டுக்குட்டியைக் கொன்று பிறகு அதினுடைய இரத்தத்தில் கொஞ்சமெடுத்துச் சுத்திகரம் பண்ணப்படுகிறவனுடைய வலது காதின் மடலிலும், கைகால்களுடைய பெருவிரல்களிலும் தடவிய மாத்திரத்தில்,

26. அந்த எண்ணையிலே கொஞ்சம் தன் இடது கையில் வார்த்து,

27. அதிலே வலது கையின் விரலைத் தோய்த்து, ஏழுமுறை கர்த்தர் சமூக்திலே தெளித்து,

28. சுத்திகரிக்கப் படுகிறவனுடைய வலது காதின் மடலிலும் வலது கைகால்களின் பெருவிரல்களிலும் குற்றமுமுமுமுப் பரிகாரமாக இரத்தத்தைப்முமுய) இடத்தின்மேல் தொட்டு,

29. பின்பு சுத்திகரம் பண்ணப் படுகிறவனுக்காகக் கர்த்தரைச் சமாதானப்படுத்த, இடதுகையிலிருக்கிற மற்ற எண்ணையை அவனுடைய சிரசின்மேல் வார்த்துத் தடவுவான்.

30. அன்றியும் காட்டுப் புறாவையாவது மாடப் புறாவையாவது,

31, ஒன்றைக் குற்றப் பரிகாரத்திற்கும் மற்றொன்றைச் சர்வாங்கத் தகனத்திற்கும் கொண்டுவந்து அதனைச் சேர்ந்த பான போஜனப் பலியோடு கூட ஒப்புக் கொடுப்பான்.

32. தனது சுத்திகரிப்பு விஷயத்திலே வேண்டியவைகளைச் சம்பாதிப்பதற்கு அவகாசமில்லாத குஷ்டரோகியைக் குறித்த பிரமாணமிதுவே என்றார்.

33. பின்னும் கர்த்தர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:

34. நாம் உங்களுக்குச் சுதந்தர காணியாட்சியாகக் கொடுக்கவிருக்கிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்த பின்பு, யாதொரு வீட்டில் குஷ்டதோஷங் காணப்பட்டால்,

35. வீட்டுக்குடையவன் குருவிடத்திற்குப் போய், என் வீட்டிலே குஷ்டரோகம் இருக்கிறாப் போல் தோன்றுகிறது என்று அறிவிப்பான்.

36. அப்பொழுது வீட்டிலுள்ள யாவுந் தீட்டுப்படாதபடிக்குக் குரு அந்த வீடு குஷ்டமுள்ளதோ என்று போய் விசாரிக்குமுன்னே வீட்டை ஒழித்து வைக்கும்படிக் கட்டளையிட்டுப் பிறகு தாமே அவ்வீட்டிலுள்ள தோஷத்தைப் பார்க்கப் போவான்.

37. அப்போதவன் வீட்டுச் சுவர்களிலே பார்க்கிறதற்கு அலங்கோலையான வெள்ளையாவது சிகப்பாவது கறைகள் உண்டென்றும், அவைகள் மற்றச் சுவரைப் பார்க்கிலும் பள்ளமாய்க் குழிந்திருக்கிறதென்றும் கண்டால்,

38. வீட்டின் வாசலுக்குப் புறம்பே வந்து தட்சணமே கதவைப் பூட்டி வீட்டை ஏழுநாள் அடைத்து வைப்பான்.

39. ஏழாம் நாளில் திரும்பிப் போய்ப் பார்த்து குஷ்டம் அதிகப் பட்டிருப்பதைக் கண்டால்,

40. குஷ்டமுண்டாயிருக்கிற கற்களைப் பெயர்த்து நகரத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு ஸ்தலத்தில் போடவும்,

41. அவ்வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச் சொல்லிச் செதுக்கப் பட்ட மண்ணை நகரத்துக்குப் புறம்பே அசுத்தமான இடத்தில் கொட்டவும்,

42. வேறு கற்களை எடுத்து வந்து பெயர்க்கப் பட்ட கற்களுக்குப் பதிலாகக் கட்டி வேறு மண்ணைக் கொண்டு மணியாசமிடவும் கட்டளையிடுவான்.

43. ஆனால் கற்களைப் பெயர்த்துத் தூசியைச் செதுக்கி வேறு மணியாசஞ் செய்த பிற்பாடு,

44. குரு பிரவேசித்துக் குஷ்டந் திரும்பவும் வீட்டில் வந்ததென்றும், சுவர்கள் கறை கறையாயிருக்கிறதென்றும் கண்டால் அது விடாக் குஷ்டமாதலால் வீடு தீட்டாயிருக்கும்.

45. அது முழுவதையும் இடித்து, அதன் கல்லுகளையும் மரங்களையும் சாந்து, மண் முதலிய இடிசல்களையும் நகரத்திற்குப் புறம்பே அசுத்தமான ஒரு ஸ்தலத்தில் போட வேண்டும்.

46. வீடு அடைக்கப் பட்டிருக்கும் நாளில் எவன் அதற்குள் பிரவேசித்திருப்பானோ அவன் சாயுங்கால மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

47. அந்த வீட்டிலே எவன் படுத்திருப்பானோ அல்லது சாப்பிட்டிருப்பானோ அவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக் கடவான்.

48. குரு திரும்ப வந்து மறுபடி வீடு பூசப்பட்ட பிறகு அதிலே குஷ்டம் படரவில்லையென்று கண்டானானால் தோஷம் நிவிர்த்தியாயிற்றென்று அதைச் சுத்திகரிப்பான்.

49. அதைச் சுத்திகரிப்பதற்காக இரண்டு அடைக்கலான் குருவிகளையும், கேதுருக் கட்டைகளையும், இரத்தாம்பரத்தையும், ஈசோப்பையும் எடுத்து,

50. ஒரு அடைக்கலான் குருவியை மண்பாத்திரத்திலுள்ள ஊற்றுநீரின் மேல் கொன்று

51. கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும் இரத்தாம்பரத்தையும், உயிருள்ள அடைக்கலான் குருவியையும் எடுத்துக் கொண்டு அவைகளைப் பலியிடப் பட்ட அடைக்கலான் குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் ஏழு முறை வீட்டைத் தெளித்து,

52. அதை அடைக்கலான் குருவியின் இரத்தத்தினாலும், ஊற்று நீராலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டை, ஈசோப், இரத்தாம்பரங்களாலும் சுத்திகரிப்பான்.

53. உயிருள்ள குருவியை வெளியிலே பறந்தோட விட்டபின்பு, குரு வீட்டிற்காகப் பிரார்த்திப்பான். அவ்விதமே அது சட்டப்படி சுத்திகரிக்கப் பட்டிருக்கும்.

54. இது சகலவித குஷ்ட தோஷத்திற்கும், அடித்தழும்புக்கும்,

55. வஸ்திரக் குஷ்டத்திற்கும், வீட்டுக் குஷ்டத்திற்கும்

56. ஊறு புண்ணுக்கும், எழும்பும் கொப்புளத்துக்கும், மினுக்கிற கறைகளுக்கும், நானாவிதமாய் நிறமாறும் படலங்களுக்கும் அடுத்த பிரமாணம்.

57. எது சுத்தம் எது அசுத்தம் என்று தெரிவிப்பதற்குக் (கற்பிக்கப் பட்ட பிரமாணம் இதுவேயாம்) என்றருளினார்.