இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லேவியராகமம் - அதிகாரம் 13

குஷ்டரோகத்தை அறியும் குறிப்புகளைச் சொல்லுகிறது.

1. பின்னுங் கர்த்தர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:

2. ஒரு மனிதனுடைய தோலிலாகிலும், சதையிலென்கிலும் வித்தியாசமான நிறமாவது கொப்புளமாவது ஒரு வித துலக்கமான வெண்படலமாவது உண்டானால் அது குஷ்டரோகமென்று எண்ணி, அவனை ஆசாரியனான ஆரோனிடத்திலே யாகிலும் அல்லது அவனுடைய குமாரரில் எவனிடத்திலேயென்கிலும் கொண்டு வர வேண்டியது.

3. ஆசாரியன் அவனுடைய தோலிலே குஷ்டமிருப்பதையும், மயிர்கள் வெண்ணிறமாய் மாறினதையும், அந்தக் குஷ்டத்தின் தோற்றம் மற்றத் தோலையும் சதையையும் விடச் சற்றுப் பள்ளமாயிருப்பதையும் கண்டானாகில் அது குஷ்டரோகம் என்று கூறுவான். அப்பொழுது அவனுடைய தீர்ப்புக்கேற்றபடி அந்த ரோகி பிரத்தியேகமாய் வைக்கப் படுவான்.

4. அந்தத் துலக்கமான வெண்படர் தோலில் இருந்தும், அவ்விடம் அவனுடைய தோலையும் சதையையும் விடப் பள்ளமாயிராமலும் அதன் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால் ஆசாரியன் அவனை ஏழுநாள் அடைத்து வைத்து,

5. ஏழாம் நாளில் அவனைப் பார்க்கக் கடவான். அப்பொழுது ரோகம் அதிகப் படாமலும், முன்னைவிட அதிகமாய்த் தோலில் படராமலும் இருக்கக் கண்டால் ஆசாரியன் மறுபடி அவனை ஏழுநாள் அடைத்து வைத்து,

6. அவனை ஏழாம் நாளிலும் கவனித்துப் பார்க்கக் கடவான். அப்போது அது சற்றுக் கருமையாகி தோலில் அதிகப் படாமல் சுருங்கியிருந்தால் அது சிரங்காகையால் அவனைச் சுத்தமானவனென்று அனுப்பி விடுவான். அம்மனிதனோ தனது வஸ்திரங்களைக் கழுவிச் சுத்தவானாயிருப்பான்.

7. ஆயினும் ரோகி குருவினால் பரிசோதிக்கப் பட்டுச் சுத்தனென்று அனுப்பி விடப் பட்ட பின்பு, மறுபடியும் (அவன் சரீரத்திலே) குஷ்டம் அதிகப் பட்டால், குருவிடத்தில் அவன் மீண்டும் கொண்டு வரப்பட்டு,

8. அப்போது தீட்டுள்ளவனென்று தீர்வையிடப் படுவான்.

9. குஷ்டரோகம் ஒரு மனிதனிடத்தில் காணப்பட்டால் அவன் குருவினிடத்திற்குக் கொண்டுவரப் படுவான். 

10. குரு அவனைப் பார்ப்பான். அப்பொழுது அவன் தோலிலே வெண்படலங்களுமிருந்து, மயிர் நிறமும் மாறி, சதையும் புண்ணுமாகத் தோற்றுமேயாகில்,

11. அது வெகுநாள்பட்ட ரோகமென்றும் சதையினுட் பழுத்ததென்றும் தீர்மானிக்கப் படும். ஆகையால் ஆசாரியன் அவனைத் (தீட்டுள்ளவனென்று) தீர்ப்புச் சொல்லுவான். இருந்தாலும் அவனுடைய தீட்டு பிரசித்தமானபடியால் அவனை அடைத்துப் போட மாட்டான்.

12. ஆனால் தலையாதி பாதமட்டுஞ் சரீரமெங்கே பார்த்தாலும் பூத்தது போல் தோன்றி தோலிலே படர்ந்து தேக முழுவதையும் மூடிய ரோகமானால்,

13. குரு அவனைப் பரிசோதித்த பிற்பாடு அதி சுத்தமான ரோகமென்று தீர்க்கக் கடவான். உள்ளபடி ஏகமாய்த் தோல் வெளுத்துப் போயிற்று. இதைப்பற்றி அவன் சுத்தனாகவிருப்பான்.

14. ஆனாலும் இரண மாம்சம் அவனிடத்தில் காணப்பட்டபோது,

15. குரு அவனைத் தீட்டுள்ளவனென்று எண்ணுவதினால் அவன் தீட்டுள்ளவனென்றே மதிக்கப் படுவான். ஏனெனில் குஷ்டம் பிடித்த இரண மாம்சந் தீட்டே.

16. இரண மாம்சம் பிறகு வேள்ளையாகி தேக முழுவதும் மூடியதானால் 

17. குரு அவனைப் பரிசோதித்துப் பார்த்த பின்பு அவனைச் சுத்தனென்று தீர்க்கக் கடவான்.

18. (ஒருவனுடைய) சரீரத்தின் மேல் தோலிலும் சதையிலும் புண்ணுண்டாயிருந்து ஆறிப்போய்,

19. அவ்விடத்திலே வெள்ளைத் தழும்பு அல்லது செகப்பும் வெள்ளையும் கலந்த தழும்பு காணப் பட்டால் அம்மனிதனைக் குருவினிடத்திற் கொண்டு வர வேண்டும்.

20. இவன் குஷ்டமிருக்கிற அவ்விடமானது மற்றச் சதையைவிடப் பள்ளமாயிருக்கிறதென்றும், மயிர்கள் வெள்ளையாய் விட்டதென்றும் கண்டானாகில் அவனைத் தீட்டுள்ளவனென்பான். ஏனென்றால் அது புண்ணில் உண்டான குஷ்டம்.

21. ஆனால் மயிர் தற்சுபாவ நிறத்தையடையதும் தழும்பு மற்றத் தோலைப் பார்க்கிலும் குழிந்திராமல் சற்றுக் கருமையாகக் கண்டால் அவனை ஏழு நாட்கள் அடைத்துப் போட்டு,

22. வெள்ளைப் படர் அதிகப் பட்டதாகில், அது குஷ்டந்தானென்று தீர்ப்பாய்ச் சொல்லுவான்.

23. அது அதிகப் படாமல் அவ்வளவில் நின்றிருக்கக் கண்டாலோ அது புண்ணின் தழும்பாக்கும் என்று சொல்லிக் குரு அவனைச் சுத்தமுள்ளவன் என்பான்.

24. (ஒருவனுடைய) சரீரத்தின்மேல் நெருப்புப் பட்டதினாலே புண்ணுண்டாகி, அது ஆறிப்போக அவ்விடத்திலே வெள்ளை அல்லது சிவப்பான தழும்பு உண்டாயிருந்தால்,

25. அதைக் குரு பார்த்துக் கொள்ளுவான். அந்தப் புண்ணோ வெள்ளையாக மாறிப் போயிற்று என்றும், அற்றத் தோலைப் பார்க்கிலும் அவ்விடம் பள்ளமாயிருக்கிறதென்றும் கண்டால் குரு அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்ப்பான். ஏனெனில் அது தழும்பிலே உண்டான குஷ்டந்தான்.

26. ஆனால் மயிர் நிறம் மாறாமலும் புண்ணின் ஸ்தலம் மற்றச் சதையைப் பார்க்கிலும் குழிந்திராமலும், தழும்பு சற்றே கருமையாயிருக்கும் பட்சத்தில் குரு அவனை ஏழுநாள் அடைத்துப் போட்டு,

27. ஏழாம் நாளிலே அவனைக் கவனித்துப் பார்க்கக் கடவான். குஷ்டந் தோலிலே படர்ந்ததானால் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்ப்பாய்ச் சொல்லுவான்.

28. அப்படிக்கில்லாமல், வெளுவெளுப்பான வெள்ளையானது முன் எவ்வளவோ அவ்வளவிலே நின்றதானால், அது வேக்காடேயன்றி ஒன்றுமில்லை. ஆனது பற்றி குரு சூட்டினால் உண்டான தழும்பென்று அந்த மனிதனைச் சுத்தமானவனென்று தீர்ப்பாய்க் கூறுவான்.

29. ஒரு புருஷனுக்காகிலும் ஒரு ஸ்திரீக்கென்கிலும் தலையிலேயாவது, தாடியிலேயாவது குஷ்டம் போன்ற ரோகம் உண்டானால் குரு அதை விசாரிக்க வேண்டும்.

30. பார்க்கும்போது அவ்விடம் மற்றத் தோலைப் பார்க்கிலும் குழிந்திருக்கிறதென்றும் மயிர் பொன்னிறமாயும் மிருதுவாயுமிருக்கிறதென்றும் கண்டானானால், அப்படிப் பட்டவர்களைத் தீட்டுள்ளவரெனத் தீர்ப்பாய்ச் சொல்லுவான். உள்ளபடி அது தலையின் அல்லது தாடியின் குஷ்டரோகமே.

31. ஆனால் வெள்ளைப் படரின் தோல் மற்றத் தோலின் மட்டத்திலிருக்கிறதென்றும், மயிர் தற்சுபாவ நிறமுள்ளதென்றும் கண்டால் அந்தப் பேர்வழியை ஏழுநாள் அடைத்து,

32. ஏழாம் நாளிலே அவனைப் பார்க்கக் கடவான். இப்படிப் பார்த்து வெள்ளைப் படரானது படரவில்லை, மயிர் சுயநிறமுள்ளது, அவ்விடத்துத் தோலும் மற்றத் தோலும் ஒரே மட்டத்திலிருக்கிறதென்று குரு கண்டால்,

33. அந்தப் படரினிடம் நீங்கலாக மற்ற மறிரைச் சவரம் பண்ணுவித்து அவனை வேறேழு நாளும் அடைத்துப் போட்டு,

34. ஏழாம் நாளிலே அதை விசாரிக்க, சொறியானது முன்னெவ்வளவோ அவ்வளவில்தானே நின்றதென்றும், அவ்விடம் மற்றத் தோலைவிடப் பள்ளமாயில்லையென்றும் கண்டானாகில் குரு அவனைச் சுத்தமுள்ளவனென்று கூறுவான். அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்த பிற்பாடு சுத்தமாய்த்தானிருப்பான்.

35. அப்படிக்கில்லாமல், அவன் சுத்தனென்று தீர்க்கப் பட்ட பின்பு சொறி தோலில் படர்ந்த பட்சத்தில்,

36. அவன் சந்தேகமின்றித் தீட்டள்ளவனாகையால், மயிர் பொன்னிறமானதோ அல்லவோவென்று குரு விசாரிக்க வேண்டியதில்லை.

37. ஆனால் படர் அதிகப் படவில்லை, மயிரோ கறுப்புள்ளçவ் அதைக் கண்டால் அந்த மனுஷன் சொஸ்தமானான் என்றறிந்து குரு அவனைச் சுத்தமானவனென்று அச்சமின்றி தீர்க்கக் கடவான்.

38. ஒரு புருஷன் அல்லது ஒரு ஸ்திரீயுடைய தோலில் வெள்ளைப் புள்ளிகள் காணப்பட்டாலோ, 

39. குரு அவர்களை விசாரித்துப் பார்க்கக் கடவான். இப்படிப் பார்க்கையில் அவர்களுடைய தோலிலே ஏதோ மங்கின வெள்ளை போல் மினுக்கும் புள்ளிகள் தோன்றியதென்று கண்டால், அது வெள்ளைத் தேமலேயொழிய, குஷ்டமல்லவென்றும், அவர்கள் சுத்தமானவர்களென்றும் கண்டுபிடிக்கக் கடவான்.

40. ஒருவனுடைய தலை மயிர்கள் உதிர்ந்து அவன் மொட்டையனானாலும் அவன் சுத்தமாயிருக்கிறான்.

41. அப்படியே அவனுடைய முன்னந்தலை மயிர்கள் உதிர்ந்ததானால் அவன் அரை மொட்டையன் ஆனாலும் அவன் சுத்தமானவன்.

42. ஆனால் முன்னந்தலையிலாவது, பின்னந் தலையிலாவது அவனுடைய மொட்டையான பக்கத்திலே வெள்ளை அல்து கபில படலமுண்டானால்,

43. குரு அதைக் கண்டவுடன் மொட்டைத் தலையிலுண்டான குஷ்டந்தான் சந்தேகமில்லை என்று தீர்ப்புச் சொல்லுவான்.

44. ஆகையால் எவன் குஷ்டரோகியென்று குருக்களின் தீர்மானப் படி விலக்கப் பட்டிருக்கிறானோ, 

45. அவன் தையல் பிரிக்கப் பட்ட வஸ்திரந் தரித்தவனாய்த் தன் தலையை மூடாதவனாய், முகத்தைத் துணியாலே மறைத்தவனாயிருந்து (யாரைக் கண்டாலும்) தீட்டு தீட்டெனக் கூவக் கடவான்.

46. அவனுக்குக் குஷ்டமிருக்கும் அளவும் அவன் அசுத்தனாதலால் பாளையத்திற்குப் புறம்பே தனிவாசம் பண்ணக் கடவான்.

47. ஆட்டு மயிர் வஸ்திரத்திலாவது, மெல்லிய சணல் நூல் வஸ்திரத்திலாவது,

* 47-ம் வசனம். குஷ்டமானது தொற்றுவியாதியாகையால் ரோகியை மூடிய வஸ்திரத்திலும் குஷ்டமிருந்திருக்கலாம், சந்தேகமில்லை.

48. ஆட்டுமயிர் வஸ்திரத்திலுஞ் சரி, மெல்லிய சணல்நூல் வஸ்திரத்திலுஞ் சரி, பாவிலேயாவது, ஊடையிலாவது குஷ்டந் தோன்றினால், விசேஷமாய்த் தோலிலுந் தோலினாற் செய்யப் பட்ட எந்தெந்த வகை உடையிலும் மேற்சொல்லிய தோஷங் காணப்பட்டால்,

49. அப்படிப் பட்டவைகளில் வெள்ளை அல்லது கபில நிறமுள்ள கறை தோன்றினால் அது குஷ்டமென்று எண்ணலாம். ஆதலால் அதனைக் குருவுக்குக் காண்பிக்க வேண்டும்.

50. இவன் அதை விசாரித்துப் பார்க்கக் கடவான். இப்படிப் பார்த்த பின்பு அதை ஏழுநாள் அடைத்துப் போடுவான்.

51. ஏழாம் நாளில் திரும்பவும் அதைச் சோதித்துப் பார்க்கையில், கறைபடர்ந்து கண்டால் குரு அது விடாக் குஷ்டமென்று கண்டு மேற்படி வஸ்திரமும் முற்சொல்லிய கறை எதில் காணப்பட்டதோ அதுவும் தீட்டுள்ளதென்று தீர்ப்பாய்ச் சொல்லுவான்.

52. இது முகாந்தரமாய் அந்தத் தோஷம் பட்டது எதுவோ, அது நெருப்பிலே சுட்டெரிக்கப் படும்.

53. அப்படிக்கில்லாமல் கறை அதிகப்படவில்லையென்று குரு கண்டானாகில், 

54. குஷ்டம் எதில் காணப் பட்டிருக்கிறதோ அதைக் கழுவச் சொல்லி இரண்டாந்தரம் ஏழு நாளைக்கு அடைத்துப் போடுவான்.

55. அப்பொழுது அதற்குச் சுய நிறந் திரும்பி வராதிருந்த போதிலும் குஷ்டம் பரவவில்லை என்று காண்பானால் மேற்சொல்லிய வஸ்து தீட்டாயிருக்கிறதென்று கண்டு அதை அக்கினியில் சுட்டெரித்துப் போடுவான். ஏனென்றால் குஷ்டமானது வஸ்திரத்தின் வெளிப்புறத்திலேயாவது உட்புறத்திலும் வெளிப்புறத்திலுமாவது பரவியிருக்கின்றது.

56. ஆனால் கழுவப் பட்ட பின்பு வஸ்திரத்திலுள்ள கறை சற்றே இருண்டதாகக் குரு கண்டால் அழுக்குப் பட்ட இடத்தை வஸ்திரத்திலிராத படிக்குக் கத்தரித்தெடுத்துப் போடுவான்.

57. ஆனால் முந்திச் சுத்தமாயிருந்த இடங்களில் மறுபடியும் இங்கங்கே நிலையற்ற ஒருவித குஷ்டங் காணப்படுமேயாகில் வஸ்திரம் முழுவதுமே நெருப்புக்கிரையாகக் கொடுக்கப் படும்.

58. அந்தத் தோஷம் அதை விட்டுப் போயிற்றென்றால் சுத்தமான இடங்களை இரண்டாந்தரங் கழுவிப் போடுவான் அப்பொழுது அவைகள் தீட்டில்லாமலே போய்விடும்.

59. ஆட்டுமயிர்களால் அல்லது மெல்லிய சணற்பு நூல்களால் நெய்யப்பட்ட வஸ்திரங்களின் பாவிலாவது, ஊடையிலாவது, எவ்வகைத் தோல் சாமான்களிலாவது குஷ்டங் காணப் பட்டால் அது எப்படிச் சுத்தமுள்ளதாகும் அல்லது தீட்டுள்ளதாகும் என்பதற்கு இதுவே பிரமாணமாம் என்று (கர்த்தர்) திருவுளம் பற்றினார்.