இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லேவியராகமம் - அதிகாரம் 12

பிள்ளை பெற்ற ஸ்திரீகள் செய்ய வேண்டிய சுத்திகரச் சடங்குகளைக் குறித்து.

1. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. நீ இஸ்றாயேல் புத்திரரிடம் சொல்ல வேண்டியதாவது: ஒரு ஸ்திரீ கருப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால் அவள் மாதவிடாயுள்ள ஸ்திரீ விலக்கமாயிருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாள் அசுத்தமுள்ளவளாயிருப்பாள்.

3. எட்டாம் நாளிலே குழந்தை விருத்தசேதனம் செய்யப் படும்.

4. அவளோ முப்பத்து மூன்று நாள் பரியந்தம் தன் உதரச் சுத்திகரிப்பு நிலையிலிருந்து சுத்திகரத்தின் நாட்கள் நிறைவேறும் அளவும் யாதொரு பொருளைத் தொடாமலும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசியாமலும் இருக்கக் கடவள்.

5. பெண்பிள்ளையைப் பெற்றாலாகில் மாதவிடாய் முறைமைப்படி இரண்டு வாரம் அசுத்தமுள்ளவளாயிருந்து தன் உதரச் சுத்திகரிப்பு நிலையிலே அறுபத்தாறு நாள் பரியந்தம் இருக்கக் கடவாள்.

* 5-ம் வசனம். இந்தச் சுத்திகரங்களுக்குரிய கட்டளைகளுக்குக் காரணம் யாதெனில், சென்மப் பாவந்தானே. அந்தப் பாவத்தினாலே எல்லாங் கெட்டு அசுத்தங் கொண்டது. மனிதர்கள் நியாயமான விவாகத்தின் வழியாகத் தங்கள் வர்த்திப்புக்கும் பெருக்கத்துக்கும் முயற்சி செய்ய வேண்டுமென்பது தேவசித்தமாயிருந்தாலும் சிசு உற்பவமாகிய அக்கணமே பாவதோஷம் அதைப் பற்றிக் கொள்கிறது. பெண்பிள்ளையானால் பெற்ற தாயின் சுத்திகரம் அதிக நாளாய் நீளித்திருக்க வேண்டுமென தேவ கட்டளையாயிருந்தது. ஏனென்றால் ஆதித்தாய் முந்தமுந்தப் பாவத்திலே விழுந்து, பிற்பாடு ஆதாமை விழப் பண்ணினாள். உலகத்தின் இரட்சகரைப் பெற்ற தேவதாயாராகிய அர்ச். மரியம்மாளையல்லாமல் மற்றுமுள்ள சகல மனிதர்களில் எவனும் சென்மப் பாவத் தோஷமின்றி உற்பத்தியானதேயில்லை.

6. அவள் ஆண்பிள்ளையை அல்லது பெண்பிள்ளையைப் பெற்றிருந்தாலும் அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறின பிற்பாடு, அவள் ஒரு வயதான ஆட்டுக் குட்டியைச் சர்வாங்கத் தகனப் பலியாகவும், ஒரு புறாக் குஞ்சையாகிலும், காட்டுப் புறாவையென்கிலும் பாவ நிவாரணப் பலியாகச் சாட்சியக் கூடார வாசலில் கொண்டு வந்து குருவினிடத்தில் ஒப்புவித்து விடுவாள்.

7. அவன் அதுகளைக் கர்த்தருடைய சமூகத்திலே ஒப்புக் கொடுத்து அவளுக்காகப் பிரார்த்திக்க, அவள் தன் உதிரப் பெருக்கின் தீட்டு நீங்கி சுத்தம் அடைவாள். ஆண்பிள்ளையை அல்லது பெண்பிள்ளையைப் பெற்றவளைக் குறித்த பிரமாணம் இதுவே.

8. ஆட்டுக் குட்டியைக் கொண்டுவர அவளுக்கவகாசமில்லாதிருந்தால், இரண்டு காட்டுப் புறாக்களையாவது, இரண்டு மாடப் புறாக்களையாவது ஒன்றைச் சர்வாங்கத் தகனப் பலியாகவும் மற்றொன்றைப் பாவ நிவாரணப் பலியாகவும் கொண்டு வருவாள். ஆசாரியன் அவளுக்காகப் பிரார்த்திக்க, அவள் அவ்விதமே சுத்தமாவாள் என்று திருவுளம் பற்றினார்.

* 8-ம் வசனம். (லூக்காஸ் 2:24 ஒத்துப் பார்க்கவும்.) தேவமாதா அக்கட்டளைக்குக் கீழ்ப்பட்டவளல்ல. ஆயினும் நன்மாதிரிகைக்காகவும் தாழ்ச்சி முகாந்தரத்துக்காகவும் அதை அனுசரிக்கத் தெரிந்து கொண்டாள்.