இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லேவியராகமம் - அதிகாரம் 05

பிறன் குற்றத்தை அறிவிக்காததினாலும்-தீட்டான வஸ்துவைத் தொடுவதினாலும் --அறியாமல் பாவத்தைச் செய்ததினாலும் செய்யவேண்டிய பிராயச் சித்தம்.

1. ஆணையிடுகிறவனுடைய குரலைக் கேட்ட சாட்சியாகிய ஒருவன் தான் கண்டதையும் அல்லது நிச்சயமாய் அறிந்ததையும் தெரிவிக்காமல் போவானானால் அவன் குற்றவாளியாகிறான். தன் அக்கிரமத்தையும் சுமந்து கொள்வான்.

2. நாட்டுமிருகத்தால் கொல்லப் பட்ட உடலையாவது தானாகச் செத்ததையாவது யாதொரு ஊரும் பூச்சியையாவது அல்லது வேறெந்த அசுத்தமான வஸ்துவையாவது எவன் தொட்டானோ தான் தீட்டுப் பட்டவன் என்று மறந்திருந்தாலும் அவன் தோஷமும் குற்றமுமுள்ளவனாயிருக்கிறான்.

3. அல்லது மனிதர் எவ்வித அசுத்தத்தினாலும் தீட்டுப்பட வழக்கப் படுகிறார்களோ இப்படித் தீட்டுப்பட்ட மனிதனின் யாதொரு அசுத்தத்தைத்தொட்ட பிற்பாடு அவன் முதலில் மறந்தும் பிறகு அறிந்து கொண்டிருந்தால் அவன் தோஷத்திற்கு உட்படுவான்.

4. தின்மையையாவது, நன்மையையாவது தான் செய்வதாக ஆணையிட்டும் வாயினால் சொல்லியும் எவன் சத்தியமாய்க் கூறினானோ, அவன் முதலிலே மறந்தும் பிறகு தான் செய்தது பாவமென்று அறிக்கையிட்டால்,

5. தான் செய்த குற்றத்திற்காகத் தபம் பண்ணவும்,

6. மந்தையினின்று செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது ஒரு பெண் குட்டியை ஒப்புக் கொடுக்கவும் கடவான். அப்போது ஆசாரியன் அவனுக்காகவும் அவன் குற்றத்திற்காகவும் பிரார்த்திப்பான்.

7. ஆனால் அவன் ஆட்டுக்குட்டியையாகிலும் வெள்ளாட்டுக் குட்டியை என்கிலும் ஒப்புக்கொடுக்கச் சக்தியற்றவனாயிருந்தால் அவன் இரண்டு புறாக்களையாவது, இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையாவது (எடுத்துக்) குற்றத்திற்காக ஒன்றையும் தகனப் பலிக்காக வேறொன்றையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக் கடவான்.

8. அதுகளைக் குருவிடம் கொடுப்பான். இவன் பாவநிவாரணப் பலிக்கானதை முன்னே செலுத்தி அதின் தலையை அதன் கழுத்தினிடத்தில் திருப்பி அதைக் கிள்ளாமலும் இரண்டாக்காமலும் கொன்றுபோட்டு,

9. அதின் இரத்தத்தினாற் பலிபீடத்தின் புறத்தைத் தெளிப்பான். பிறகு அது குற்றத்திற்குரிய பலி ஆகையால் மிஞ்சும் இரத்தமெல்லாம் அதன் பாதத்தல் ஒழுகவிடுவான்.

10. மற்றதையோ வழக்கத்தின்படி அவன் தகன பலியாகச் சுட்டெரிப்பான். அப்புறம் ஆசாரியன் அவனுக்காகவும் அவன் குற்றத்திற்காகவும் பிரார்த்திக்க, அவனுக்கு மன்னிப்பு கிடைக்கும்.

11. மேற்படியான் இரண்டு புறாக்களையாகிலும், இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளை யென்கிலும் கொண்டு வரச் சக்தியற்றவனாயிருந்தால் தனது குற்றத்துக்காக ஏப்பி (என்கிற அளவில்) பத்திலொரு பங்கு மெல்லிய மாவை ஒப்புக் கொடுப்பான். அது பாவ நிவாரணப் (பலி) ஆகையால் அதின்மேல் எண்ணை வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும், 

12. அதைக் குருவிடத்தில் கொண்டு வருவான். இவன் அதினின்று கைப்பிடி நிறைய எடுத்து ஒப்புக் கொடுத்தவனுடைய ஞாபகக் குறியாகப் பீடத்தின் மீது தகித்து,

13. அவனுக்காகப் பிரார்த்தித்துப் பிராயச்சித்தஞ் செய்வான். மீதியானதோ வெகுமதியாக ஆசாரியனைச் சேரும் என்றருளினார். 

14. பின்னும் கர்த்தர் மோயீசனை நோக்கி:

15. யாதொருவன் தெரியாமையினால் இரீதிச் சடங்குகளில் குற்றஞ் செய்து கர்த்தருக்குப் பிரதிஷ்டையானவைகளின் விஷயத்திலே பாவத்திற்கு உட்பட்டால், அவன் தன் குற்றத்துக்காகப் பரிசுத்த ஸ்தல நிறையின்படியே இரண்டு சீக்கல் விலைபெறுமான ஒரு பழுதுமில்லாத ஆட்டுக்கடாவை, மந்தையினின்று எடுத்துக் கொண்டு வர வேண்டியதுமன்றி,

16. தன்னாலுண்டான நஷ்டம் எவ்வளவோ அவ்வளவுக்கு உத்தரிக்கக் கடவான். அதனோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டிக் குரு கையில் ஒப்பிக்கக் கடவான். ஆசாரியனோ ஆட்டுக்கடாவை ஒப்புக் கொடுத்து அவனுக்காகப் பிரார்த்திக்க அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும்.

17. ஒருவன் கர்த்தருடைய பிரமாணத்தினால் விலக்கப் பட்டவைகளில் யாதொன்றைத் தெரியாமல் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அந்தக் குற்றவாளி தன் அக்கிரமத்தைக் கண்டறிந்த மாத்திரத்தில்,

18. அவன் பாவத்தின் கனத்துக்கும் அளவுக்கும் தக்கபடி மந்தையினின்று தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு பழுதுமில்லாத ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டு வருவான். இவனோ தெரியாமற் செய்தான் என்று அவனுக்காகப் பிரார்த்திக்க அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும்.

19. ஏனென்றால் அவன் தெரியாமலே கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தான் என்றருளினார்.