இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லேவியராகமம் - அதிகாரம் 04

அறியாமல் செய்த பாவங்களுக்குப் பரிகாரப்பலிகளை ஒப்புக் கொடுக்கும் முறை

1. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. நீ இஸ்றாயேல் புத்திரரோடு சொல்ல வேண்டியதென்னவென்றால், யாதாமொருத்தன் செய்ய வேண்டாமென்று கர்த்தர் கட்டளையிட்ட சகல கற்பனைகளிலும் யாதொன்றையும் தெரியாமல் மீறிப் பாவத்துக்கு உட்பட்ட போது,

3. அபிஷேகம் பெற்றகுரு பாவஞ் செய்து, சனங்கள் பாவத்திற்கு உட்படச் செய்திருந்தால், அவனவன் தன் பாவ விமோசனமாகப் பழுதற்ற ஒரு இளஙகாளையைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுக்கக் கடவான்.

4. (எங்ஙனமெனில்) சாட்சியக் கூடார வாசலிலே கர்த்தருடைய சமூகத்தில் அதைக் கொண்டுவந்து, அதின் தலையின் மேல் கையை வைத்து, அதைக் கொன்று போட்டுக் கர்த்தருக்குப் பலியிடுவான்.

5. பிறகு அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சமெடுத்துக்கொண்டு சாட்சியக் கூடாரத்தினுள்ளே கொண்டு வந்து,

6. அவ்விரத்தத்தில் விரலைத் தோய்த்து அதைக் கொண்டு ஏழு முறை கர்த்தருடைய சமூகத்திலே பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கெதிலே தெளித்திடுவான்.

7. பின்னும் அவன் அதில் கொஞ்சமெடுத்துச் சாட்சியக் கூடாரத்தினுள்ளேயிருக்கும் கர்த்தருக்கு அதிபிரியமான பரிமளப் பீடக் கொம்புகளின் மேல் பூசிக் கொண்டு காளையினுடைய மற்ற இரத்தமெல்லாங் கூடாரப் பிரவேசத்திலுள்ள தகனப் பலி பீடத்தினுடைய பாதத்தின் மீது ஊற்றி விடுவான்.

8. பிறகு அவன் பாவத்திற்குப் பரிகாரமான பலிமிருகத்தின் கொழுப்பு முழுவதையும் ஆகிய குடல்களை மூடிக் கொண்டிருக்கிற கொழுப்பையும் உள்ளத்திலிருக்கிற எல்லாவற்றையும் எடுத்து,

9. இரண்டு சிறிய சிறுநீரகங்களையும் அதுகளின் மேலிருக்கும் விலாக்களையடுத்த சவ்வையும், சிறுநீரகங்களோடு இருக்கும் ஈரலுடைய நிணத்தையும்,

10. சமாதானப் பலிக்குரிய காளையினின்று எவ்விதமாய் எடுத்துக் கொள்வார்களோ அவ்விதமே எடுத்து, அவற்றை யெல்லாந் தகனப் பலியாகப் பலிபீடத்தின் மேல் சுட்டெரிக்கக் கடவான்.

11. ஆனால் தோலையும் எல்லா இறைச்சிகளையும், தலை, கால், குடல், சாணி,

12. முதலிய மற்ற உடலையும் அவன் பாளையத்திற்குப் புறம்பே சாம்பல் கொட்டுவதற்குக் குறிக்கப் பட்ட சுத்தமான ஸ்தலத்தில் கொண்டுபோய் அவ்விடத்தில் தானே விறகுக் கட்டைகளின் மேல் போட்டு சுட்டெரிக்கக் கடவான்.

* 12-ம் வசனம். இதனுடைய தாற்பரியம் எபிறே. 13:10,11 வசனங்களில் வெகு நேர்த்தியாய் காட்டப் பட்டிருக்கிறது. எப்படியெனில் நமக்கு ஒரு பலி பீடமுண்டு. அதில் ஒப்புக் கொடுக்கப் படும் பலியின் மாம்சங்களைப் புசிப்பதற்குக் கூடாரத்து ஆசாரியர்களுக்குச் சுதந்தரமில்லை. ஏனென்றால் எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவத்தின் நிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே பிரதான ஆசாரியனால் கொண்டு வரப் படுகிறதோ அந்த மிருகங்களின் உடல்கள் பாளையத்திற்குப் புறம்பே சுட்டெரிக்கப் படும். அந்தப் படியே சேசுவும் தம்சொந்த இரத்தத்தினாலே ஜனங்களைப் பரிசுத்தஞ் செய்யவேண்டி நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார் என்று அப்போஸ்தலர் எழுதி வைத்தார்.

13. இஸ்றாயேலின் சகல ஜனங்களும் தெரியாமையினாலே புத்தி தவறி கர்த்தருடைய கற்பனைக்கு விரோதமானதைச் செய்து,

14. பிறகு தாங்கள் செய்தது பாவம் என்று கண்டுபிடித்தால் அவர்கள் தங்கள் பாவப் பரிகாரமாக ஓர் இளங்காளையை ஒப்புக் கொடுக்க வேண்டும் என்று அந்தக்கூடார வாசலில் அதைக் கொண்டு வந்த போது,

15. சபையாரிலே வயோதிகர் கர்த்தருடைய சமூகத்திலே அதன் தலைமேல் கைகளை வைத்துக் கொள்வார்கள். அந்த இளங்காளை கர்த்தருடைய சந்நிதியில் பலியிடப் பட்ட பின்பு

16. அபிஷேகம்பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துச் சாட்சியக் கூடாரத்தினுட் கொண்டு வந்து,

17. அதிலே தன் விரலைத் தோய்த்து ஏழு முறை திரைக்கெதிரே இரத்தத்தைத் தெளித்திடுவான்.

18. பிறகு சாட்சியக் கூடாரத்திலே கர்த்தருடைய சமூகத்திலிருக்கிற பீடத்தின் கொம்புகளிலும், மேற்படி இரத்தத்தில் கொஞ்சம் பூசி, மிஞ்சின இரத்தத்தைச் சாட்சியக் கூடார வாசலிலுள்ள தகனப் பீடத்துடைய பாதத்திலே ஊற்றி விடுவான்.

19. மேலும் அதினுடைய கொழுப்பெல்லாவற்றையும் பீடத்தின் மீது தகிப்பான்.

20. முந்தி செய்ததெப்படியோ அப்படியே இந்தக் காளை விஷயத்திலும் செய்யப்படும். ஆசாரியனும் அவர்களுக்காகப் பிரார்த்திக்கக் கர்த்தர் அவர்களின் மீது இரக்கங் கொண்டருள்வார்.

21. ஆனால் அது சாதாரண சபைக்காகச் செய்யப் படும் பாவ நிவாரணப் பலியாயிருக்கின்றமையால் முந்தின காளைக்குச் செய்தது போல இதையும் பாளையத்தின் புறம்பே எடுத்துக் கொண்டு போய்ச் சுட்டெரிக்கக் கடவான்.

22. அதிபதியானவன் கர்த்தருடைய பிரமாணத்தால் விலக்கப் பட்ட பலதுகளில் யாதொன்றைத் தெரியாமையினாற் செய்து பாவம் கட்டிக் கொண்டிருப்பானாகில்,

23. அவன் தன் பாவத்தைக் கண்டறிந்த பின்பு, வெள்ளாட்டு மந்தையினின்று மாசற்ற வெள்ளாட்டுக் கடாவொன்றைக் கர்த்தருக்குப் பலியாக ஒப்புக் கொடுத்து,

24. தனது கரத்தை அதன் தலையின்மீது வைத்துக் கொண்டு, அது பாவ விமோசனப் பலியாயிருக்கிறதினாலே கர்த்தர் சமூகத்தில் தகனப் பலியிடுவதற்குக் குறித்திருக்கும் ஸ்தலத்திலே அதைப் பலியிட்ட பின்பு,

25. ஆசாரியனானவன் பாவத்துக்கான பலியின் இரத்தத்தில் விரலைத் தோய்த்துத் தகனப் பலி பீடத்தின் கொம்புகளைத் தடவி மிஞ்சின இரத்தத்தை அதன் பாதத்திலே ஊற்றி விடுவான்.

26. கொழுப்பையோ சமாதானப் பலிகளில் செய்யப் படுகிற வழக்கப் படி (பீடத்தின் மீது) தகித்த பிற்பாடு, ஆசாரியன் அவனுக்காகவும், அவன் பாவத்துக்காகவும் பிரார்த்திக்கவே அவனுக்கு மன்னிக்கப் படும்.

27. நாட்டுச் சனத்தில் யாதாமொருத்தன் தெரியாமலே பாவம் பண்ணிக் கர்த்தருடைய பிரமாணக் கட்டளைகளால் விலக்கப் பட்டவைகளில் யாதொன்றை மீறிச் செய்து பிசகினானென்றால்,

28. அவன் தன் பாவத்தைக் கண்டுபிடித்த பின்பு மாசில்லாத ஒரு வெள்ளாட்டை ஒப்புக் கொடுத்து, 

29. பாவ விமோசனத்திற்குரிய பலி மிருகத்தின் தலையின் மீது கையை வைத்துக் கொண்டு அதைத் தகனப் பலியிடும் இடத்திலே அதைக் கொல்லக் கடவான்.

30. ஆசாரியனும், தன் விரலில் இரத்தத்தை எடுத்துக் கொண்டு தகனப்பலி பீடத்தின் கொம்பிகளைத் தடவி மிஞ்சும் இரத்தத்தை அதன் பாதத்தில் ஊற்றி விடுவான். 

31. கமாதானப் பலிகளின் விஷயத்திலே செய்யப்படுமாப் போல் (ஆசாரியன்) கொழுப்பெல்லாம் எடுத்துக் கொண்டு பீடத்தின் மீது கர்த்தருக்குச் சுகந்த மணமாய்த் தகித்து, அவனுக்காகப் பிரார்த்திக்கக் கடவான். அப்போது அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும்.

32. ஆனால் மேற்படியானவன் (சிறிய மந்தையினின்று மாசற்ற ஆட்டைப் பாவவிமோசனப் பலியாக ஒப்புக் கொடுப்பானானால்,

33. அவன் அதின் தலையின் மீது தன் கையை வைத்துக்கொண்டுஅதைச்சர்வாங்கப் பலி தகன மிருகங்கள் கொல்லப் படும் ஸ்தலத்திலே பலியிடுவான்.

34. ஆசாரியனோ தன் விரலில் அதின் இரத்தத்தை எடுத்துத் தகனப் பலி பீடத்தின் கொம்புகளில் தடவி, மிஞ்சின இரத்தத்தை அதன் பாதத்தில் ஊற்றி விடுவான்.

35. பிறகு சமாதானப் பலியாக வெட்டப்படும் செம்மறிக் கடா விஷயத்தில் எப்படி செய்வார்களோ அப்படியே செய்து அதனுடைய கொழுப்பெல்லாம் எடுத்துப் பீடத்தின் மீது கர்த்தருக்குடைத்தான தூபவர்க்கமாகத் தகித்து, அவனுக்காகவும் அவன் பாவத்துக்காகவும் பிரார்த்திக்கக் கடவான். அப்படியே அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும்.