இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லேவியராகமம் - அதிகாரம் 03

ஆட்டுமாட்டுச் சமாதானப் பலி செலுத்தும் இரீதி.

1. ஒருவன் சமாதானப் பலியைப் படைக்கக் கருதி, மாட்டு மந்தையிலொன்றை எடுத்துச் செலுத்துவானாகில் அது காளையாயிருந்தாலுஞ் சரி, பசுவாயிருந்தாலுஞ் சரி, பழுதற்றிருப்பதையே கர்த்தருடைய சமூகத்தில் செலுத்தக் கடவான்.

2. அவன் தன் பலிமிருகத்தின் தலைமேல் கையை வைத்துக் கொண்டு, சாட்சியக் கூடார வாசலுக்கு முன்பாகக் கொல்லக் கடவான். பின்பு, ஆரோனின் குமாரராகிய குருக்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் வார்க்கக் கடவார்கள்.

3. சமாதானப் பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ளிருக்கிற கொழுப்பு முழுவதையும் கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்து,

4. இரண்டு சிறுநீரகங்களையும், விலாக்களை மூடிய கொழுப்பையும் சிறுநீரகத்தையும் கல்லீரலையும் சேர்ந்த சவ்வையும் (எடுத்து),

5. அவைகளைப் பீடத்தின் மேலுள்ள விறகுக்கட்டைகளில் நெருப்புப் பற்ற வைத்துத் தகனித்து கர்த்தருக்கு அதிசுகந்த மணமுடைய காணிக்கையாகச் செலுத்தக் கடவார்கள்.

* 5-ம் வசனம். சமாதானப் பலியிலே பலிமிருகத்தில் முதற் பங்கைச் சுவாமி அங்கீகரித்துக் கொள்ளுகிறார். வேறொரு பங்கு தேவாலயத்தில் ஊழியஞ் செய்து வரும் குருப்பிரசாதிமார் சவரட்சணைக்கு விடப் படுவது. மூன்றாம் பங்கு சபையாரைச் சேரும். பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள நெருக்கமான பொருத்தமும் கமானமும் கத்தோலிக்குத் திருச்சபையிலே விளங்குகிறதொழிய மற்றுமுள்ள கிறீஸ்துவ சபைகளிலே விளங்காது.

6. அவன் ஆட்டைச் சமாதானப் பலியாகச் செலுத்த வந்தாலோவெனில், அது ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, பழுதற்றதாயிருக்க வேண்டும்.

7. அவன் ஆட்டுக் குட்டியைக் கர்த்தருடைய சமூகத்தில் ஒப்புக் கொடுத்தால்,

8. அவன் தன் பலியின் தலை மீது தன் கையை வைத்துக் கொண்டு, அதைச் சாட்சியக் கூடார மண்டபத்திற் கொல்லக் கடவான். பிறகு ஆரோனின் குமாரர்கள் பீடத்தின் மேல் சுற்றிலும் அதின் இரத்தத்தை வார்த்து,

9. சமாதானப் பலியிலே கொழுப்பையும் முழு வாலையும் கர்த்தருக்குப் பலியிட்டுக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கக் கடவார்கள்.

10. அன்றியும் குரு சிறுநீரகங்களையும் வயிறு முதலிய சகல சீவிய உறுப்புகளை மூடிய கொழுப்பையும் விலாக்களை அடுத்த கொழுப்பையும், இரு சிறுநீரகங்களையும், கல்லீரலையும் சேர்ந்த சவ்வையும் (எடுத்து)

11. அவைகளைப் பீடத்தின் மீதுள்ள அக்கினியிலே போட்டு, நெருப்புக்கும் கர்த்தருக்கிடுங் காணிக்கைக்கும் ஆகாரமாகச் சுட்டெரிப்பான்.

12. அவன் வெள்ளாட்டைக் கர்த்தருக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தாலோவெனில்,

13. அவன் பலி மிருகத்துத் தலையின்மீது தன் கையை வைத்துக்கொண்டு, அதைச் சாட்சியக் கூடாரப் பிரவேசத்திற் கொல்லக் கடவான். ஆரோனின் குமாரர் பீடத்தின் மேற் சுற்றிலும் அதின் இரத்தத்தை வார்த்து,

14. அதிலே கர்த்தருடைய நெருப்புக்கு ஆகாரமாக வயிறு முதலிய சகல ஜீவ உறுப்புகளை மூடுகிற கொழுப்பையும்

15. இரண்டு சிறுநீரகங்களையும் விலாக்களையடுத்து அதுகளின் மேலிருக்கிற சின்ன சவ்வையும் சின்ன சிறுநீரகம் கல்லீரல் பை இவைகளையும் (எடுத்து),

16. இவைகளை ஆசாரியன் பீடத்தின் மீதுள்ள நெருப்புக்கும், அதி சுகந்த மணத்துக்கும் ஆகாரமாகச் சுட்டெரிக்கக் கடவான். நிணமானதெல்லாம் கர்த்தருக்குடைத்தானது.

17. இது உங்கள் தலைமுறைகடோறும் நீங்கள் வசிக்கும் இடங்கள் தோறும் நித்தியப் பிரமாணமாயிருக்கும். அன்றியும் இரத்தத்தையாவது கொழுப்பையாவது நீங்கள் புசிக்கலாகாது என்றருளினார்.