இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லேவியராகமம் - அதிகாரம் 02

பற்பல பதார்த்தங்களின் காணிக்கையும் சந்திப்புஞ் செய்ய வேண்டிய விதம்.

1. ஒரு மனிதன் கர்த்தருக்குப் பலியாகக் காணிக்கையை ஒப்புக் கொடுக்கிற போது, அவனது காணிக்கை மெல்லிய மாவாயிருந்தால் அவன் அதின்மேல் எண்ணையை வார்த்துத் தூபவர்க்கத்தையும் போட்டு,

2. ஆரோனின் குமாரர்களாகிய குருக்களிடம் கொண்டு போவான். அவர்களில் ஒருவன் மெல்லிய மாவிலும் எண்ணையிலும் ஒரு முழு கைப்பிடியையும் தூபவர்க்கம் முழுவதையும் எடுத்துக் கொண்டு பீடத்தின் மீது ஞாபகக் குறியாகவும் கர்த்தருக்கு அதிசுகந்த மணமாகவும் வைத்துக் கொள்ளுவான்.

3. பலிப்பொருளிலே மீதியாயிருப்பதெதுவோ அது ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் சொந்தமாகி விடும். அது கர்த்தருக்குச் சமர்ப்பிக்கப் பட்ட காணிக்கைப் பாகமானதால் பரிசுத்தத்திலும் பரிசுத்தமானது.

4. நீ படைப்பது அடுப்பிற் பாகம் பண்ணப் பட்ட போஜனப் பலியானால், அது எண்ணையினால் தெளிக்கப்பட்ட புளிப்பில்லாத அப்பங்களாகவும், எண்ணை புசப்பட்ட புளிப்பில்லாத பணிகாரங்களாகவும் இருக்க வேண்டும்.

5. நீ படைப்பது தட்டையான சட்டியில் பொரிக்கப் பட்ட போஜனப் பலியானால் அது எண்ணையில் துவைக்கப் பட்ட புளியாத மெல்லிய மாவாயிருக்க வேண்டும்.

6. அதைத் துண்டு துண்டாகப் பிட்டு அதன் மேல் எண்ணையை வார்ப்பாய். 

7. ஆனால் நீ படைப்து பொரிக்கும் இரும்புக் கணியிற் பொரிக்கப் பட்ட போஜனப் பரியானால் அதுவும் எண்ணையிலே துவைக்கப் பட்டதாயிருக்க வேண்டும். 

8. அதைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்துக் குருவின் கரத்தில் ஒப்பித்து விடுவாய்.

9. அவன் அதை ஒப்புக் கொடுத்தபின்பு பலியிலிருந்து ஒரு பங்கைத் தனக்கு எடுத்துக் கொண்டு பலிபீடத்தின் மீது கர்த்தருக்குச் சுகந்த மணமாய்த் தகனிப்பான்.

10. மீதியானதெல்லாம் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் சொந்தமாய் விடும். அது கர்த்தருக்குச் சமர்ப்பிக்கப் பட்ட காணிக்கையாகையால் அது பரிசுத்தத்திலும் பரிசுத்தமானது.

11. கர்த்தருக்குப் படைக்கப் படுவதெல்லாம் புளிப்பில்லாத மாவினால் சித்தஞ் செய்யப் படுவதன்றி, புளித்த மாவுள்ளதொன்றையும் தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனப் பலியாகத் தகிக்கவொண்ணாது.

12. நீங்கள் அப்படிப்பட்ட பொருட்களை முதல் பலன்களாகவும் சந்திப்புகளாகவும் ஒப்புக் கொடுக்கலாமொழிய அதுகளைப் பீடத்தின் மேல் சுகந்த மணமாக வைக்கப் படாது.

13. நீ ஒப்புக் கொடுக்கும் எந்தப் போஜனப் பலியும் உப்பினால் சாரமாக்கக் கடவாய். உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் பலியினின்று நீக்காதே. நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைக்கக் கடவாய்.

14. நீ உன் முதற் பலன்களில் பச்சையான கதிர்களைப் போஜனப் பலியாகக் கர்த்தருக்குச் செலுத்த வந்தாலோ அவைகளை நெருப்பில் வாட்டி வறுத்த மாவைப் போல் அரைத்துத் தான் கர்த்தருக்குச் செலுத்தக் கடவாய்.

15. அதுகள் கர்த்தருக்கான காணிக்கையாதலால் அதுகளின் மேல் எண்ணையையும் வார்த்துத் தூபவர்க்கத்தையும் போடுவாய்.

16. குருவோ அதினின்று அரைக்கப்பட்ட கோதுமையிலும், எண்ணையிலும் ஒரு பாகத்தையும், தூபவர்க்கம் எல்லாவற்றையும் ஞாபகக் குறியாகத் தகனிக்கக் கடவான்.