இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லேவியராகமம் - அதிகாரம் 01

மாட்டு மந்தையிலாவது, ஆட்டு மந்தையிலாவது, பறவைகளிலாவது எடுத்துத் தகனப் பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டிய இரீதி.

1. கர்த்தரோவென்றால், சாட்சியக் கூடாரத்தினின்று மோயீசனைக் கூப்பிட்டு, அவனை நோக்கி:

* 1-ம் வசனம். (யாத்திரா. 27: 20) காண்க. சாட்சியக் கூடாரமென்பது உடன்படிக்கைக் கூடாரமென்பது போலாம்.

2. நீ இஸ்றாயேல் புத்திரர்களைப் பார்த்துச் சொல்ல வேண்டியதேதென்றால்: உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிபூசை வைக்க வந்தால், அதாவது: மாட்டு மந்தையிலாகிலும் ஆட்டு மந்தையிலென்கிலும் பலி மிருகத்தை ஒப்புக் கொடுக்க வந்தால், 

3. மாட்டு மந்தையிலிருந்தெடுத்துச் சர்வாங்கத் தகனப் பலியைச் செலுத்த வேண்டிய பட்சத்தில் அவன் பழுதற்ற ஒரு காளையைத் தெரிந்து கர்த்தர் தன் பேரில் தயாபரராயிருக்கத் தக்கதாக, அதைச் சாட்சியக் கூடார வாசலிலே கொண்டு வந்து,

4. பலிமிருகத்துத் தலையின்மேல் தன் கையை வைக்கக் கடவான். அதனால் அவனுடைய காணிக்கை அவன் பாவ நிவிர்த்திக்கென்று அங்கீகரிக்கப் படும்.

* 4-ம் வசனம். கிறீஸ்துநாதர் சிலுவையில் மனிதனுக்காகப் பாடுபட்டு சர்வேசுரனுக்குத் தம்மைப் பலியாக ஒப்புக் கொடுத்த நாள் முதற்கொண்டு மிருக பலி எல்லாம் பலனற்றதாயும் சர்வேசுரனுக்கு அருவருப்பாயும் இருக்கின்றன.

5. பிறகு அவன் கன்றுக் குட்டியைக் கர்த்தருடைய சமூகத்தில் அடித்துப் பலியிட்ட பின்பு, ஆரோனின் குமாரராகிய குருக்கள் கூடார வாசலின் முன்பாக இருக்கிற பீடத்தின் மேல் சுற்றிலும் அதின் இரத்தத்தை வார்த்து ஒப்புக் கொடுப்பார்கள்.

6. பலி மிருகத்துத் தோலை யுரித்துப் போட்டு உறுப்புகளைத் துண்டு துண்டாக வெட்டக் கடவார்கள்.

7. பிறகு பீடத்தில் அடுக்கி வைக்கப் பட்ட விறகிலே அவர்கள் நெருப்புப் பற்ற வைத்து,

8. துண்டித்த உறுப்புகளாகிய தலையையும், ஈரலோடு சேர்ந்ததெல்லாவற்றையும் அதின் மீது ஒழுங்காய் வைத்து,

9. அதின் குடல்களையும் கால்களையும் தண்ணீரால் கழுவி ஆசாரியன் அவைகளைக் கர்த்தருக்குத் தகனப் பலியாகவும் சுகந்த மணமாகவும் பீடத்தின் மீது சுட்டெரிப்பான்.

10. ஆனால் செம்மறியாட்டு மந்தையிலிருந்து ஆட்டையாகிலும், வெள்ளாட்டை யென்கிலும் தகனப் பலியைச் செலுத்த வேண்டிய பட்சத்தில், அவன் பழுதற்ற கடாவைக் கொண்டு வந்து,

11. கர்த்தருடைய சமூகத்திலே வட திசையை நோக்கிய பலிபீடத்தின் பாரிசத்திலே அதைக் கொல்லக் கடவான். பிறகு ஆரோனின் குமாரர்கள் அதின் இரத்தத்தைப் பீடத்தின் மீது சுற்றிலும் வார்த்து, 

12. அதின் உறுப்புகளையும் தலையையும் ஈரலோடு சேர்ந்ததெல்லாத்தையும் துண்டித்து, விறகின் மேல் வைத்து, அதின் கீழே நெருப்புப் பற்ற வைப்பார்கள்.

13. குடல்களையும் தொடைகளையும் தண்ணீரிலே கழுவுவார்கள். பிறகு ஆசாரியன் பீடத்தின் மீது கர்த்தருக்குத் தகனப் பலியாகவும் மிகச் சுகந்த மணமாகவும் சுட்டெரிக்கக் கடவான்.

14. ஆனால் பறவைகளில், அதாவது: புறாக்களாகிலும், மாடப்புறாக் குஞ்சுகளென்கிலும் கர்த்தருக்குத் தகனப் பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டிய பட்சத்தில்,

15. அதை ஆசாரியன் பீடத்திலே ஒப்புக் கொடுத்து, அதன் தலையைக் கழுத்தின் பிறகாலே திருப்பி, தேகத்திலே சத்திரமிட்டுக் காயத்தின் வழியாக ஒழுகும் இரத்தத்தைப் பீடத்தின் ஓரமாய்ச் சிந்த விடுவான்.

16. அதின் இரைப் பையையும் இறகுகளையுமோ பீடத்தருகில் கீழ்ப்புறத்திலே சாம்பல்களை எறிந்து விடுமிடத்தில் எறிந்து விட்டு,

17. அதின் செட்டைளை வெட்டாமல் அதைப் பிளக்கக் கடவான். அதைக் கத்தியால் இரண்டாக்கக் கூடாது. அப்போது (ஆசாரியன்) பீடத்தின் மீதுள்ள விறகுக் கட்டைகளில் நெருப்பை வைத்துச் சுட்டெரிப்பான். இது தகனப் பலியும் கர்த்தருக்கு அதிசுகந்த வாசனையுடைய காணிக்கையுமாகும்.