ஆத்துமங்களில் நித்திய ஞானமானவரின் செயல்பாடு!

20. ஆத்துமங்களில் தமது செயல்பாட்டின் விளைவுகளை நித்திய ஞானமானவர்தாமே சர்வப்பிரசங்கி ஆகமத்தின் 24- ம் அதிகாரத் தில் பின்வருமாறு விளக்குகிறார். அவருடைய வார்த்தைகளின் தெளிவையும், பக்திக்குரிய பொருளையும் நான் குறைத்து விடக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, அவருடைய தெய்வீக வார்த்தைகளோடு, என் பரிதாபத்திற்குரிய வார்த்தைகளை ஒன்றுகலக்க நான் துணிய மாட்டேன்:

1. ஞானமானது தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும். அது கடவுளிடத்தில் மகிமைப்படுத்தப்படும்; மனிதர்கள் நடுவில் மேன்மைப்படுத்தப்படும்.

2. உன்னத ஆண்டவரை வாழ்த்தும் சபைகளில் தன் வாய் திறக்கும்; அவருடைய வல்லமை முன்பாக மேன்மைப்படுத்தப் படும்.

3. ஜனங்கள் நடுவில் மகிமைப்படுத்தப்படும்; அதன் பரிசுத்த மேன்மையைக் கண்டுபிடிக்கிறவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

4. தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடைய கூட்டத்தில் புகழ்ச்சி பெறும். ஆசீர்வதிக்கப்பட்டவர்களால் ஆசீர்வதிக்கப் பட்டு அதுவே சொல்லுவதாவது: 

21.5. உன்னதக் கடவுளின் வாயினின்று நான் புறப்பட்டேன்; நானே சிருஷ்டிகளுக்கெல்லாம் முந்தி சிருஷ்டிக்கப்பட்டேன்;

6. வானங்களில் குன்றாத பிரகாசம் உதிக்கும்படி நானே செய்தேன். பூமி முழுவதையும் மேகத்தைப் போல நானே மூடினேன்.

7. நான் மேல் மண்டபங்களில் வாசம் செய்தேன்; என் சிம்மாசனம் மேகத்தூண் மேல் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.

8. வானமண்டலங்களைத் தனியே சுற்றி வந்தேன்; பாதாளத் தின் ஆழத்தை ஊடுருவினேன்; சமுத்திரத்தின் அலைகள் மீது உலாவினேன்.

9. பூமி முழுவதிலும் நின்றேன்; சகல சனங்களிடத்திலும், 

22. 10. சகல சாதியிடத்திலும் மேன்மையடைந்தேன்.

11. பெரியோர், சிறியோர் சகலருடைய இருதயங்களையும் என் பலத்தால் கீழ்ப்படுத்தினேன்; அவர்களிடத்தில் இளைப் பாற்றியைத் தேடினேன்; ஆண்டவருடைய சுதந்தரத்தில் தங்கி யிருப்பேன். 

23. 12. அப்போது சர்வ சிருஷ்டிகர் எனக்குத் தம் கட்டளைகளைத் திருவுளம்பற்றினார். என்னை உண்டுபண்ணினவர் என் கூடாரத்தில் இளைப்பாறினார்.

13. அவர் என்னை நோக்கி: யாக்கோபிடத்தில் வாசஞ்செய், இஸ்ராயேலைச் சொந்தமாக்கிக் கொள்; தெரிந்து கொள்ளப் பட்ட என்னுடையவர்களிடத்தில் வேரூன்று என்றார். 

24. 14. ஆதியிலும், யுகங்களுக்கு முந்தியும் சிருஷ்டிக்கப் பட்டேன்; எக்காலத்துக்கும் இராமலுமிரேன். பரிசுத்த வாச ஸ்தலத்தில் அவருடைய சமூகத்தில் என் தொழிலைச் செய்தேன்.

15. ஆனதால் சீயோனில் உறுதிப்படுத்தப்பட்டேன்; பரிசுத்த பட்டணத்திலும் இளைப்பாறினேன். எருசலேமில் என் அதிகாரம் சென்றது. 

25. 16. மகிமைப்படுத்தப்பட்ட பிரஜைகளிடத்தில் வேரூன்றி னேன்; அவர்களுடைய சுதந்திரம் என் ஆண்டவருடைய பாகம், பரிசுத்தருடைய கூட்டத்தில் என் வாசஸ்தலம்.

17. லீபானில் கேதுரென்னும் மரத்தைப் போல் உயர்த்தப் பட்டேன்; சியோன் மலையில் சைப்ரஸ் என்னும் மரத்தைப் போலானேன்.

18. காதேஸ் பனைமரத்தைப் போல் உயர்த்தப்பட்டேன். ஜெரிக்கோரோஜாத் தோட்டம் போலானேன்.

19. சமபூமியிலுள்ள அழகான ஒலிவைப் போலவும், மைதானங் களில் தண்ணீரருகே பிளாத்தான் மரத்தைப் போலும் உயர்த்தப்பட்டேன்.

20. சுகந்தம் பொருந்திய இலவங்கப் பட்டை போலும், பரிமளம் போலும் வாசனை வீசினேன்; விலையுயர்ந்த வெள்ளைப் போளம் போல வாசனையின் சுகத்தைத் தந்தேன்.

21. சுகந்த பன்னீர் போலும், பரிமளப் பிசின் போலும், கோமேதகம் போலும், வெள்ளைப் போளம் போலும், சாம்பிராணித் துளிபோலும், காயப்படாத லிபானைப் போலும் என் வாசஸ்தலத்தைப் பரிமளிக்கச் செய்தேன். என் சுகந்தம் கலப்பில்லாத பரிமளத்தைலம் போல,

22. தைலம் தரும் தெரெபிந்து மரம் போல என் கிளைகளை விரித்தேன்; என் கிளைகள் மகிமையும், நன்மையும் பொருந் தியவைகள்.

23. முந்திரிகைச் செடி போல வாசனையின் சுகத்தை வீசச் செய்தேன்; என்னுடைய புஷ்பங்களோ பெருமையினுடை யவும், யோக்கியதையுடையவும், கனிகள். 

26. 24. அரிய நேசத்தினுடையவும், (தேவ) பயத்தினுடையவும், அறிவினுடையவும், பரிசுத்த தேவநம்பிக்கையினுடையவும் மாதாவாயிருக்கிறேன்.

25. நன்னெறியினுடையவும், உண்மையினுடையவும் அழகெல்லாம் என்னிடத்திலுண்டு. என்னிடத்தில் தான் ஜீவியத் தினுடையவும், புண்ணியத்தினுடையவும் சகல நம்பிக்கையும். 

27. 26. என்னை ஆசிக்கிறவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து சேருங்கள். என் கனிகளினால் நிரப்பப்படுங்கள்.

27. என் புத்தி தேனை விட தித்திப்பாயிருக்கிறது, என் சுதந்தரம் தேனையும், அதன் இனிய சுவையையும் விட மேலானதாயிருக்கிறது.

28. எக்காலத்திற்கும் என் ஞாபகம் நிலைத்திருக்கும். 

28. 29. என்னைப் புசிப்பவர்கள் இன்னமும் ஆவல் கொள்வார்கள்; என்னை அருந்துகிறவர்கள் இன்னும் தாகமாயிருப்பார்கள்.

30. என்னைக் கேட்கிறவன் மோசம் போக மாட்டான். என்னைக் கொண்டு தங்கள் கிருத்தியங்களைச் (செயல்களைச்) செய்கிறவர்கள் பாவம் செய்ய மாட்டார்கள்.

31. என்னை மற்றவர்களுக்குப் போதிக்கிறவர்கள் நித்திய சீவியத்தை அடைவார்கள்.

32. இவையெல்லாம் ஜீவியத்தின் புத்தகம், உன்னத கடவுளின் உடன்படிக்கை, உண்மையின் அறிவிப்பு.

29. நித்திய ஞானமானவர் தங்கள் பலதரப்பட்ட கனிகளாலும், தேவ சலுகை பெற்ற ஆத்துமங்களின் மிகப் பலவாறான அந்தஸ்துக்கள், செயல்பாடுகள் மற்றும் புண்ணியங்களை விரித் துரைக்கும் பண்புகளாலும் அறியப்படுகிற இந்த எல்லா மரங் களோடும், செடிகளோடும் தம்மை ஒப்பிடுகிறார். இந்த தேவ சலுகை பெற்ற ஆன்மாக்கள் பரலோகத்தை நோக்கி உயர்ந்திருக் கும் தங்களது இருதயங்களின் உயர்வான நிலையால் கேதுரு மரங்களையும், அல்லது மரணத்தின் மீதான தங்கள் இடைவிடாத தியானத்தால் சைப்ரஸ் மரங்களையும் ஒத்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் தாழ்ச்சியுள்ள கடும் உழைப்பால் பனை மரங் களையும், தங்கள் வேதசாட்சியத்தாலும், இரத்தம் சிந்துதலாலும் ரோஜாச் செடிகளையும் ஒத்திருக்கிறார்கள். இவர்கள் நதிக் கரைகளில் நடப்பட்டுள்ள பிளாத்தான் மரங்களை, அல்லது தங்கள் அயலார் மீது தாங்கள் கொண்டுள்ள மாபெரும் அன்பைக் குறித்துக் காட்டும் விதமாக, கிளை பரப்பி நிற்கும் தெரேபிந்து மரங்களை ஒத்திருக்கிறார்கள். மேலும் இவர்கள், மனிதரால் அறியப்படுவதை விட கடவுளால் அறியப்படுவதைத் தேர்ந்து கொள்ளும் அர்ப்பணமுள்ள ஆன்மாக்கள் அனைவரையும் குறித்துக் காட்டுபவையும், குறைவாகக் கவனிக்கப்படுபவையு மான பரிமளம், வெள்ளைப்போளம் மற்றும் பல சுகந்தமுள்ள தாவரங்களையும் ஒத்திருக்கிறார்கள். 

30. தெய்வீக ஞானமானவர் சகல நன்மைகளின் தாயாகவும், ஆதாரமாகவும் தம்மைக் காட்டுகிறார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தம்மை மட்டுமே ஆசிக்கும்படி அவர் எல்லா மனிதர்களுக்கும் அறிவுறுத்துகிறார். ஏனெனில், அர்ச். அகுஸ்தீனார் சொல்வது போல, "இத்தகைய ஓர் உயர்வான நோக்கத்திற்குத் தகுதியுள்ள முழு ஆசைப் பற்றுதலோடு தம்மை ஆசித்துத் தேடுபவர்களுக்கு மட்டுமே அவர் தம்மைத் தருகிறார்."

30, 31 வேத வாக்கியங்களில் தேவ ஞானமானவர் பரிசுத்த ஜீவியத்தின் மூன்று நிலைகளைப் பட்டியலிடுகிறார். இவற்றில் கடைசி நிலை உத்தமதனமாக இருக்கிறது:

(1) தாழ்ச்சியும் அமைதலுமுள்ள மனதோடு கடவுள் சொல்வதைக் கேளுங்கள்;

(2) நிலையான பிரமாணிக்கத்தோடு அவரிலும், அவர் வழியாகவும் செயல்படுங்கள்;

(3) ஞானமானவரின் மீதுள்ள நேசத்தை மற்றவர்களில் தூண்டியெழுப்ப உங்களுக்குத் தேவையான ஒளியையும், அபிஷேகத்தையும் ஆர்வத்தோடு தேடுங்கள். இவ்வாறு அவர் களில் தூண்டப்படும் நேசம் அவர்களை நித்திய ஜீவியத்திற்கு இட்டுச்செல்லும்.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...