தம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணம் கொடுக்கும் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயம்!

நம்மிலேயே நாம் எவ்வளவு வறியவர்களாக இருக்கிறோமென்றால், நம் தரித்திரத்தைப் புரிந்து கொள்ளக்கூட நம்மால் முடியாது. கோடீஸ்வரனும் கூட, தன்னிடம் கொஞ்சம் இருக்கிறது என்று அவன் நினைத்தாலும் கூட, அவன் ஏழையாகவே இருக்கிறான். “இல்லாதவனிடமிருந்து, தன்னிடம் உள்ளதாக அவன் நினைக்கிறதும் எடுக்கப்பட்டு, உள்ளவனிடத்தில் கொடுக்கப்படும்” என்று வேதாகமம் கூறுவதால் தான் தன்னிடம் கொஞ்சம் இருக்கிறது என்று அவன் நினைக்கிறான் என்று நான் சொன்னேன்.

இனி, உள்ளவன் யார்? அர்ச். சின்னப்பர் இதற்குப் பதில் சொல்கிறார். தன்னிடம் ஒன்றுமில்லாதவனைப் போலத் தோன்றினாலும், ஏழை மனிதன்தான் உள்ளவனாக இருக்கிறான். தரித்திரனாயிருக்கிற ஒரு மனிதன் எல்லாம் உள்ளவனாயிருக்கிறானா? ஆம், மனத் தரித்திரனாயிருக்கிறவன் பரலோக இராச்சியத்தையும், அதனால் கடவுளையும் சொந்தமாகக் கொண்டிருக்கிறான். கடவுள் அவனுடைய சொந்தமாயிருக்கிறார். உண்மையில் சகலமும் கடவுளுக்குச் சொந்தமாயிருக்கின்றன என்று சொல்ல முடியும் என்பதால், கடவுளைச் சொந்தமாகக் கொண்டிருக்கிறவன் சகலத்தையும் சொந்தமாகக் கொண்டிருக்கிறான் என்றும் சொல்ல முடியும். ஆம். தரித்திரனாகிய மனிதன் சகலத்தையும் சொந்தமாகக் கொண்டிருக்கிறான். அவன் எல்லாவற்றையும் எல்லோருக்கும் தந்து விடுகிறான். இதை நன்கு குறித்துக் கொள்ளுங்கள்: அவன் எல்லாவற்றையும் தந்து விட்டான், தனக்கு சொந்தமாயிருக்கிற கொஞ்சத்தை மட்டுமல்ல, உலக முழுவதையுமே சொந்தமாகக் கொண்டிருக்கிறான். ஒரு தாராளமுள்ள ஆத்துமம் இதுபற்றி எடுத்துரைப்பது போல - “இதோ நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?” இவ்வளவுக்கும் ஒரு சில மீன் வலைகளே அவருக்குச் சொந்தமாக இருந்தன. ஆனால் அவர் தாம் சொன்னதைப் புரிந்தே சொன்னார். அவர் உலக முழுவதையும் விட்டு விட்டார். அவர் எல்லாவற்றையும் கொடுத்து விட்டு எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டார். கடவுள் தம்மையே அவருக்குத் தந்தார். அது அவரை செல்வந்தராக்கியது. அப்போது, உலகமே தமக்குச் சொந்தம் என்று உண்மையாகவே சொல்ல அவரால் முடிந்தது. ஆகவே, அர்ச். சின்னப்பர் தன்னிடம் எதுவுமில்லாத மனிதன் எல்லாவற்றையும் சொந்தமாகக் கொண்டிருக்கிறான் என்று தாம் சொன்ன போது, அவர் ஓர் அற்புதமான காரியத்தைப் பேசினார்.

அர்ச். பிரான்சிஸ் தம் உடைமைகளைப் பற்றி அறிந்திருந்தார். உலகமே அவருடையதாக இருந்தது. அவர் தமக்குத் தேவையானதெல்லாம் தரப்பட்டவராக ஒருபோதும் வெளியே போனதில்லை. தமக்குப் பசிக்கும்போது கடவுள் தமக்கு சாப்பிட ஏதாவது தருவார் என்று அவர் நம்பினார். கவலையினின்றும், பேராசையினின்றும் அவர் கொண்டிருந்த அந்த சுதந்திரம் அவரை ஓர் அரசராக ஆக்கியது. ஆ, அர்ச். பிரான்சிஸ் உலகமாகிய தமது இராச்சியத்தினூடாக நடந்தது போல, உலகத்தின் எந்த ஓர் அரசனும் அவ்வளவு சுதந்திரமாகவும், அவ்வளவு கவலையற்றவனாகவும் தன் ஆளுகைக்குட்பட்ட பகுதியினூடாக ஒருபோதும் நடந்து சென்றதில்லை. ஏனென்றால் அர்ச். பிரான்சிஸ் இந்த உலகத்தை மிகப் பாதுகாப்பான முறையில் தம் சொந்தமாகக் கொண்டிருந்தது போல, எந்த ஒரு அரசனும் தன் உடமைகளை சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை. மேலும், ஓர் அரசனின் இராச்சியம் மற்றொரு அரசனால் அவனிடமிருந்து பறிக்கப்படலாம். ஆனால் அர்ச். பிரான்சிஸுக்குத் தீங்கிழைக்க யாராலும் முடியாது. அவரால் தாம் விரும்பியதை, விரும்பிய நேரத்தில் சொந்தமாகக் கொண்டிருக்க முடிந்தது. தம் பணிக்காக கோடிக்கணக்கான டாலர்கள் பணம் தமக்கு உண்மையாகவே தேவைப்பட்டது என்றால் அதைப் பெற்றுக் கொள்ளத் தம்மால் முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவருடைய பிதாவாகிய சர்வேசுரனின் மகிமைக்கென பிரான்சிஸுக்கு இந்தப் பணம் தேவையென்றால், சர்வேசுரனுக்கு முன், இந்தக் கோடிக்கணக்கான டாலர்கள் என்னும் சிறிய தொகையான பணம் எம்மாத்திரம்? ஆனால் அர்ச். பிரான்சிஸ் இந்தக் கோடிக்கணக்கான டாலர்களைக் கொண்டு செய்யக் கூடியதை விட மிக அதிகமாக, பணமின்றி செய்தார். அவர் மக்களினங்களை மனந்திருப்பினார். கோடிகளின் உதவியைக் கொண்டு பெரும் காரியங்களைச் செய்வதை விட, ஒரு பைசா கூட இல்லாமல் அவற்றைச் செய்வது அதிக அற்புதமான விஷயம். கடவுளின் வல்லமை இவ்வாறு வெளிப்படுத்தப் படுகிறது. இவ்வளவு அதிகமான காரியங்களை சாதிப்பதற்கு அர்ச். பிரான்சிஸ் எங்கிருந்து தம் செல்வங்களையும், தம் வல்லமையையும் பெற்றுக் கொண்டார்? பரவச நிலைக்கு உட்படும் அளவுக்கு தாம் நேசித்தவரிடமிருந்தே பெற்றுக் கொண்டார். சேசுநாதரில் எல்லாவற்றையும் செய்ய அவரால் முடிந்தது. தம்முடைய காலத்தைப் போன்ற ஒரு மிக ஒழுங்கீனமான காலத்தில், ஒரு தன்னந்தனியான தரித்திரனால் என்ன செய்ய முடியும் என்பதை அவர் உலகத்திற்குக் காட்டினார். 

நாம் இவ்வளவு ஏழைகளாயிருப்பதற்கு எளிய காரணம் இதுதான்: கடவுளிடம் நாம் எவ்வளவோ பலவீனமானதும், மந்தமுள்ளதுமாகிய நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவருடைய திராட்சைத் தோட்டத்தின் மிகச் சிறிய பகுதிக்கு உரிய மிகச் சிறிய, அற்பமான காரியங்களை மட்டுமே நாம் அவரிடம் கேட்கிறோம். நாம் இந்த ஒரு ஆளுக்காக, அல்லது அந்த ஆளுக்காக நாம் கேட்கிறோம். ஆனால் நாம் யாருக்காக ஜெபிக்கிறோமோ, அந்த ஆளை விட நம் ஜெபங்கள் அதிகமாகத் தேவைப்படுகிற இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மனித ஆத்துமங்கள் இருக்கிறார்கள். நாம் அவர்களுக்காக ஒரு வருடத்தில் ஒரு அருள்நிறை மந்திரம் கூட ஜெபிப்பதில்லை. நீ அதிகம் கேட்டால் கை நிறைய விலையுயர்ந்த வைரங்களை அள்ளிக் கொடுக்கத் தயாராயிருக்கிற ஒரு தாராளமுள்ள இளவரசனிடம் நீ ஒரு ரூபாய் நாணயம் கேட்பது போல இது இருக்கிறது. கொடுப்பதின் மகிழ்ச்சியை நாம் கடவுளுக்குத் தருவோம். நாம் ஒரு பெரிய கூடையை எடுத்துக் கொண்டு போவோம். அது வெறுமையாயிருக்கும்படி பார்த்துக் கொள்வோம். அதன்பின் வைரங்களால் அதை நிரப்பும்படி நாம் கடவுளிடம் கேட்போம். அந்தக் கூடை உன் இருதயம்தான். அது வெறுமையாயிருக்கிறது என்பதை நிச்சயப்படுத்திக் கொள்! “தம் பாத்திரங்கள் வெறுமையாயிருப்பதைத் தாம் காணுமிடத்தில் அவர் தம் பொக்கிஷங்களைத் தந்தருளுகிறார்” என்கிறார் அர்ச். சின்னப்பர். “பசித்தோரை அவர் நன்மைகளால் நிரப்புகிறார்” என்று பாக்கியவதியான நம் திவ்ய மாதா மாக்னிஃபிக்காத்தில் கூறினார்கள். உலகத்திற்கு வெறுமையாயிருக்கிறவர்களே “பசித்தோராக” இருக்கிறார்கள். கடவுள் தம் கொடைகளை உலகத்தின் குப்பைகளோடு கலக்க மாட்டார். கொடுப்பதன் மகிழ்ச்சியைக் கடவுளுக்குக் கொடுங்கள்! பெரிய காரியங்களைக் கேளுங்கள். அப்போது, “தம்மிடம் கேட்கிற சகலருக்கும் அவர் செல்வமிக்கவராக இருக்கிறார்” என்ற வாக்கியத்தின் உண்மையை நீங்களும் அனுபவிப்பீர்கள்.


உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணம் கொடுக்கும் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!