இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நம் நற்கிரியைகளைச் சுத்தப்படுத்தி அதிக பலனுறச் செய்கிறது இப்பக்தி முயற்சி

37 (3) நட்சத்திரங்கள் கடவுளுடைய சமூகத்தில் சுத்தமாக இல்லை! அப்படிப்பட்ட தேவனின் பார்வைக்கும், ஏற்றுக் கொள்ளுதலுக்கும் நம் நற்செயல்கள்--அவை நம் பார்வையில் நல்லவையாகத் தோன்றினாலும் -- தகுதியாயில்லை. அவை அதிக குறைபாடுள்ளவையாக இருக்கின்றன. 

ஆகவே நாம் நம் அன்புள்ள தாயிடம் மன்றாடுவோம். நம் எளிய காணிக்கையை அவர்கள் ஏற்று அதைச் சுத்தப்படுத்தி, அர்ச்சித்து, அதிகப் பலனுறச் செய்து கடவுளுக்குத் தகுந்ததாக்கும்படி கேட்போம். 

ஓர் ஏழை விவசாயி தன் நில வரியாக அரசனுக்குத் தன் கையில் எடுத்து வந்து செலுத்தும் புழு விழுந்த பழங்கள் என்ன தகுதி பெற்றிருக்குமோ, அதைவிடக் குறைந்த தகுதியுடையதாயிருக்கின்றன. 

பரலோக வீட்டின் அரசருடைய நட்பையும் சலுகையையும் பெறுவதற்கு நம்முடைய ஆத்துமத்தின் எல்லாச் செல்வங்களும்! ஆனால் அந்த விவசாயி அறிவுடையவனாகவும் அரசியால் விரும்பப்படுகிறவனாகவும் இருந்தால் என்ன செய்வான்? 

அவன் தன் பழங்களை அவ்வரசியிடம் கொண்டுவர மாட்டானா? அவளும் அந்த ஏழை மனிதன் மீதுள்ள கருணையாலும் அரசன் மேலுள்ள மரியாதையாலும், புழு விழுந்ததும், கெட்டுப் போனதுமான பழங்களை அகற்றி விட்டு கனிகளை ஒரு தங்கத் தட்டில் வைத்து அப்பழங்களைச் சுற்றிலும் மலர்களை வைக்க மாட்டாளா?

அப்படியானால் அரசர் அவற்றை ஏற்க மறுப்பாரா? அம்மனிதனுக்கு உபகாரியாயிருக்கிற அரசியின் கைகளிலிருந்து மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ள மாட்டாரா? 

"ஏதாவதொன்றை காணிக்கை செய்ய நீ விரும்புகிறாயா? அது மறுக்கப்படட்டும் என்று விரும்பினால் தவிர அதை மரியாயின் கரங்களின் வழியாகக் கொடு” என்று உரைக்கிறார் அர்ச். பெர்னார்ட்.

38. மாபெரும் சர்வேசுரா! நாங்கள் செய்யும் அனைத்தும் எவ்வளவு சிறியது!-- ஆனால், நாம் செய்கிற எல்லாவற்றையும் இப்பக்தி முயற்சியினால் மரியாயின் கரங்களில் வைப்போம். நம் சக்தியெல்லாம் கூட்டி இயன்ற வரையிலும் நம்மை அவர்களின் மகிமைக்கெனச் செலவிட்டு அவர்களிடம் நம்மைக் கொடுக்கும்போது, இவ்வன்னை தாராள குணத்தில் நம்மை அதிகம் மிஞ்சி, வெகு சொற்பத்திற்கு வெகு அதிகமாகச் செய்வார்கள். 

தன் பேறுபலன்களுடனும் புண்ணியங்களுடனும் தன்னையே நமக்குக் கொடுப்பார்கள். தன்னுடைய தேவசிநேகம் என்னும் தங்கத் தட்டில் நம் காணிக்கைகளை வைப்பார்கள். ரபேக்காள் யாக்கோபை உடுத்தியது போல் தன் மூத்த ஒரே மகன் சேசு கிறீஸ்துவின் அழகிய உடைகளால் நம்மை உடுத்துவிப்பார்கள் -- அதாவது தன்னிடம் கொடுக்கப்பட்டுள்ள அவருடைய பேறுபலன்களால். 

இவ்வாறு நாம் அவர்களின் மகிமைக்கென நம்மை வெறுமையாக்கியபின் நாம் இரட்டை ஆடைகளால் உடுத்தப்படுவோம். "அவளுடைய ஊழியர்கள் இரட்டை ஆடைகளால் உடுத்தப்பட்டிருக்கிறார்கள்: '' அதாவது சேசு மரியாயின் ஆடைகளும், நறுமணங்களும் பேறுபலன்களும், புண்ணியங்களும் தன்னையே வெறுமையாக்கிக் கொண்டு அந்த வெறுமை நிலையில் நீடித்திருக்கிற அவர்களுடைய அடிமையின் ஆன்மாவிற்குத் தரப்படும்.

மரியாயின் வழியாகச் செய்வது நம் அயலானுக்கு மிக உயர்ந்த அளவில் சிநேகம் காட்டுவதாகும். 

39. (4) மேலும் இவ்வாறு மாதாவுக்கு நம்மைக் கொடுப்பதானது நம் அயலார் மீது நம்மால் முடிந்த முழு அளவில் சிநேகம் கொள்வதாகும். ஏனென்றால் நமக்கு அருமையாக உள்ள அனைத்தையும் மாதாவிடம் கொடுத்து விட்டு அவைகளை மாதாவே தன் விருப்பப்படி ஜீவியருக்காகவும், மரித்தோருக்காகவும் விநியோகித்துக் கொள்ள விட்டு விடுகிறோம்.