இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பாம்பும், பரிசுத்த ஜெபமாலையும்! - தொடர்ச்சி...

சகோதரர் ஃப்ரான்சிஸ் ப்ரோவேராவின் காலக் கிரமப் பதிவேட்டில் நாம் இப்படி வாசிக்கிறோம்:

1862 ஆகஸ்ட் 21 அன்று, இரவு ஜெபங்களுக்குப் பிறகு, டொன் போஸ்கோவால் விசித்திரமானது, விறுவிறுப்பானது என்று வர்ணிக்கப்பட்ட கனவின் இரண்டாம் பாகத்தைக் கேட்க நாங்கள் எல்லோரும் ஆவலாயிருந்தோம். ஆனால் நாங்கள் ஏமாற்றமடைந் தோம். “நேற்றிரவு, கனவின் இரண்டாம் பாகத்தைச் சொல்வதாக நான் சொன்னேன். ஆனால் என் வாக்குறுதியை நிறைவேற்ற இது சரியான நேரமென்று நான் நினைக்கவில்லை. அதற்காக வருந்து கிறேன். ..” என்று அவர் சொல்லி விட்டார்.

மறு நாள், ஆகஸ்ட் 22 அன்று நாங்கள் அவர் இன்னும் வெளிப்படுத்தியிராத அந்தக் கனவின் இரண்டாம் பாகத்தைத் தனிப் பட்ட விதத்திலாவது சொல்லும்படி நாங்கள் அவரைத் தொந்தரவு செய்தோம். அவரோ தம் மனதை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. ஆனாலும் நாங்கள் நிறைய வற்புறுத்திய பிறகு, அவர் மனமிளகி, அன்றிரவு எங்களுக்கு அதில் இன்னும் சிறிது சொல்வதாக வாக்களித்தார். “நல்லிரவு” வாழ்த்துரையில் அவர் பின்வருமாறு பேசினார்:

நீங்கள் திரும்பத் திரும்பச் செய்த வேண்டுகோளுக்கு இரங்கி, நான் அந்தக் கனவின் இரண்டாம் பாகத்தை, அல்லது குறைந்த பட்சம் என்னால் எவ்வளவு குறைவாகச் சொல்ல முடியுமோ அதை நான் உங்களுக்குச் சொல்வேன். இதை யாரும் எழுதவோ, அல்லது அதைப் பற்றி இந்த இல்லத்திற்கு வெளியே பேசவோ கூடாது என்பதை நான் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். உங்களுக்குள் அதைப் பற்றி விவாதியுங்கள், அதைப் பற்றிப் பேசி சிரித்துக் கொள்ளுங்கள், நீங்கள் விரும்புகிறபடி செய்யுங்கள், ஆனால் உங்களுக்கிடையே மட்டும்தான்.

இனி, அந்தக் கயிற்றையும், பாம்பையும் பற்றியும், அவை எவற்றைக் குறிக்கின்றன என்பது பற்றியும் நான் அந்த அந்நியரிடம் பேசிக் கொண்டிருந்த போது, நான் திரும்பிப் பார்த்தேன். அப்போது சிறுவர்கள் சிதறிக் கிடந்த அந்தப் பாம்பின் மாமிசத் துண்டுகளை எடுத்து அவற்றை உண்பதைப் பார்த்தேன். “என்ன செய்து கொண் டிருக்கிறீர்கள்? உங்களுக்கென்ன பைத்தியமா? அந்த மாமிசம் விஷமுள்ளது” என்று நான் கத்தினேன்.

“இது சுவையாயிருக்கிறது'' என்ற அவர்கள் பதில் கூறினார்கள்.

ஆயினும் அதை அவர்கள் விழுங்கியதுதான் தாமதம், உடனே தரையில் மயங்கி விழுந்தார்கள், அவர்களுடைய உடல்கள் வீங்கி, பாறை போல் ஆகிவிட்டது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை . ஏனெனில் இதையும் மீறி இன்னும் அதிகமதிகம் சிறுவர்கள் தொடர்ந்து அந்த மாமிசத்தை எடுத்துத் தின்று கொண் டிருந்தனர். நான் கத்தினேன், அவர்களைப் பார்த்துக் கூச்சலிட் டேன், ஆனால் எல்லாமே வீணாயிற்று. ஏனெனில் தரையில் விழுந்த ஒவ்வொருவனுடைய இடத்தையும் வேறு ஒருவன் எடுத்துக் கொண் டான். அதன்பின் நான் துறவிகளை அழைத்து, சிறுவர்கள் நடுவில் போய், அவர்கள் அந்த மாமிசத்தைத் தின்னாமல் தடுக்க தங்களால் முடிந்ததைச் செய்யும்படி அவர்களிடம் சென்னேன். என் உத்தரவு எந்தப் பயனையும் விளைவிக்கவில்லை. ஆனால் இன்னும் மோச மான விதத்தில் சில துறவிகளே கூட அதை எடுத்து உண்ணத் தொடங்கி, அவர்களும் தரையில் விழுந்தார்கள்.

இவ்வளவு அதிகமான சிறுவர்கள் இவ்வளவு பரிதாபமான நிலையில் விழுந்து கிடப்பதைக் கண்டு, பித்துப் பிடித்தவனைப் போல, நான் அந்த அந்நியரிடம் திரும்பி, “இதற்கு என்ன அர்த்தம்? இந்த மாமிசம் தங்களைக் கொன்று விடும் என்று தெரிந்தும், அவர்கள் அதை உண்கிறார்களே. ஏன்?” என்று கேட்டேன்.

“ஏனெனில், 'புலன் சார்ந்த மனிதன் கடவுளுக்குரிய காரியங்களைப் பகுத்துணர்வதில்லை!' அதனால்தான்!” என்று அவர் பதிலளித்தார்.

“ஆனால் இந்தச் சிறுவர்களைக் காப்பாற்ற வழியே இல்லையா?”

“ஆம். இருக்கிறது.”

“என்ன அது?"

“பட்டறைக் கல்லும், சுத்தியலும்.”

“பட்டறைக் கல்லும் சுத்தியலுமா? அவை எதற்காக?”

“சிறுவர்களை மீண்டும் அவர்களுடைய பழைய நிலைக்குக் கொண்டு வர."

“நான் அவர்களைப் பட்டறைக் கல்லில் வைத்து, சுத்தியலால் அடிக்க வேண்டும் என்று சொல்கிறீரா?!”

“பாரும்” என்றார் அந்த அந்நியர்,

“இந்தக் காரியம் முழுவதும் ஓர் அடையாளம்தான். சுத்தியல் பாவசங்கீர்த்தனத்தைக் குறிக்கிறது. பட்டறைக்கல் திவ்விய நன்மையைக் குறிக்கிறது. இவைதான் நீர் பயன்படுத்த வேண்டிய தீர்வுகள்.”

நான் உடனே செயல்படத் தொடங்கினேன். இந்த வைத்தியம் நல்ல பலனைத் தந்ததை நான் கண்டேன். ஆனால் எல்லோருக்கும் அது பலன் தரவில்லை. பெரும்பாலான சிறுவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, உடல் நலம் பெற்ற அதே வேளையில், ஒரு சிலர் குணம் பெறவில்லை , ஏனெனில் அவர்களுடைய பாவ சங்கீர்த்தனங்கள் கெட்டவையாயிருந்தன.

வரலாற்று ஆசிரியரின் குறிப்புகளுக்கிடையில் (பக்.147-148) நாம் இப்படி வாசிக்கிறோம்: “அந்த அரக்கப் பாம்பின் விஷமுள்ள மாமிசம் ஒருவனுடைய விசுவாசத்தை அழித்து விடும் இடறலையோ, அல்லது ஒழுக்கங்கெட்ட, வேதத்திற்கு எதிரான வாசிப்புகளையோ குறிக்கலாம். அதே போல, கீழ்ப்படியாமையும், மயங்கி விழுதலும், வீங்குதலும், இறுகிப் போதலும் ஆங்காரத்தையும், பாவத்தில் பிடிவாதமாக நிலைத்திருப்பதையும், அதை நேசிப்பதையும் தவிர வேறு எதைக் குறிக்க முடியும்?” பாவசங்கீர்த்தனமும், திவ்விய நன்மையும் தங்கள் தெய்வீக நன்மைத்தனத்தை அந்த இறுகிப் போன இருதயங்களில் செயல்படுத்தும்படியாக, தேவ அருள் முதலில் அந்த இருதயங்களை உஷ்ணப்படுத்தி, அவற்றை இளகச் செய்ய வேண்டும் என்பதையே நீதிமான்கள் தங்கள் ஜெபங் களிலும் பரித்தியாகங்களிலும் கேட்க வேண்டும். . . இவ்வாறு அந்தச் சுத்தியல் அடிகளும், பட்டறைக்கல்லின் தாங்குதலும் சேர்ந்து புண்ணாகிப் போன, ஆனால் இப்போது கீழ்ப்படிதல் உள்ளதாகியிருக்கிற இருதயத்தைக் குணமாக்கும். தீப்பொறிகள் பறக்க, அந்த இருதயம் மீண்டும் பரிசுத்ததனத்தில் நிலையாக்கப்படுகிறது.