இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்

நாம் இவ்வாழ்வின் துன்பங்களைப் பொறுமையோடு அனுபவிப்போம் என்றால், நாம் பாக்கியவான்கள்! சூழ்நிலைகள் சார்ந்த துன்பம், பயங்கள், உடல் ரீதியான நோய்கள், கலாபனைகள், எல்லா வகையான சிலுவைகள் ஆகிய அனைத்தும் ஒரு நாள் முடிவுக்கு வரும்; நாம் இரட்சிக்கப்படுவோம் என்றால், அவை அனைத்தும் நமக்குப் பரலோகத்தில் சந்தோஷம் மற்றும் மகிமையின் காரணங்களாக ஆகிவிடும்: ""உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்'' என்று சொல்லி, நம் இரட்சகர் நம்மை ஊக்கப்படுத்துகிறார் (அரு.16:20). பரலோக இன்பங்கள் எவ்வளவு மேலானவை என்றால், அழியக்கூடிய மனிதர்களாகிய நம்மால் அவற்றை விளக்கிச் சொல்லவோ, புரிந்து கொள்ளவே இயலாது: "தம்மை நேசிக்கிறவர்களுக்கு சர்வேசுரன் ஆயத்தம் செய்துள்ளவைகளைக் கண் கண்டதுமில்லை, காது கேட்டதுமில்லை, மனித இருதயத்திற்கு அவை எட்டினதுமில்லை'' (1 கொரி.2:9). மோட்ச அழகுகளுக்கு இணையான அழகுகளைக் கண் ஒருபோதும் கண்டதில்லை ; பரலோக இசைகளுக்கு இணையான இனிய இசையைக் காது கேட்டதில்லை; தம்மை நேசிக்கிறவர்களுக்காகக் கடவுள் ஏற்பாடு செய்திருக்கிற பேரின்பங்களை மனித இருதயம் புரிந்து கொண்டதுமில்லை. குன்றுகளாலும், சமவெளிகளாலும், காடுகளாலும், கடலின் காட்சிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிற ஒரு நிலப்பரப்பின் காட்சி அழகியதாக இருக்கிறது. கனிகளும், மலர்களும், ஊற்றுகளும் மிகுந்திருக்கிற ஒரு தோட்டத்தின் காட்சி அழகானது. ஓ, பரலோகம் இன்னும் எவ்வளவோ அதிக அழகுள்ளதாயிருக்கிறது!

பரலோக இன்பங்கள் எவ்வளவு பெரியவை என்பதைப் புரிந்து கொள்வதற்கு, அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நாட்டில் சர்வ வல்லபரான ஒரு கடவுள் தங்கி வசிக்கிறார், தமது நேசத்திற்குரிய ஆத்துமங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவருடைய பொறுப்பு என்பதை மட்டும் நாம் அறிந்திருப்பது போதுமானது. பரலோகம் என்பது, ""நீ விரும்பாத எதுவும் இராததும், நீ விரும்பும் எல்லாமே இருப்பதுமான'' ஓர் இடம் என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார். அங்கே உனக்கு வெறுப்பைத் தரும் எதையும் நீ காண மாட்டாய், நீ ஆசிக்கும் அனைத்தையும் அங்கே நீ காண்பாய்; ""நீ விரும்பாத எதுவும் அங்கே இருக்காது.'' மோட்சத்தில் இரவு என்பதில்லை; குளிர்காலம், கோடை காலம் போன்ற பருவ காலங்கள் இல்லை; அதற்கு மாறாக மாறாத அமைதியுள்ள ஒரே ஒரு நிரந்தரமான பகல் மட்டுமே அங்கு உள்ளது, மாற்றமில்லாத இன்பங்களின் ஒரேயொரு நிரந்தரமான வசந்த காலம் மட்டுமே அங்குள்ளது. அங்கே இனி கலாபனைகளோ, பொறாமைகளோ இல்லை ; ஏனெனில் அங்கே அனைவரும் உண்மையுள்ள மனத்தோடு ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள், ஒவ்வொருவரும் மற்றவரின் நன்மை தன் சொந்த நன்மை என்பது போல மற்றவரின் நன்மையில் அக்களிக்கிறார்கள். உடல் நோய்களோ, வலிகளோ அங்கில்லை. ஏனெனில் உடல் இனி துன்பம் அனுபவிக்கக் கூடியதாக இராது; தரித்திரம் அங்கில்லை, ஏனெனில் ஒவ்வொருவரும் இதற்கு மேல் வேறொன்றும் ஆசிக்காத அளவுக்கு முழு செல்வந்தர்களாக இருப்பார்கள்; அங்கே பயங்கள் இனி இல்லை, ஏனெனில் ஆத்துமம் வரப்பிரசாதத்தில் உறுதிப் படுத்தப்பட்டு, இனி பாவம் செய்ய முடியாததாகவும், தான் சொந்தமாகக் கொண்டிருக்கிற உன்னத நன்மையை இனி இழக்க முடியாததாகவும் இருக்கும்.

"நீ விரும்பும் அனைத்தும் அங்கே இருக்கும்.'' பரலோகத்தில் நீ ஆசைப்படும் அனைத்தையும் சொந்தமாகக் கொண்டிருப்பாய். அங்கே மிக அழகிய அந்த நகரத்தையும், நித்திய இராச்சியத்தின் அரசர்களாக, இராஜ உடைகள் அணிந்திருக்கிற அதன் குடிமக்கள் அனைவரையும் பார்ப்பதில் பார்வைப் புலன் திருப்தியடையும். அங்கே மாமரியின் மாசற்ற அழகை நாம் காண்போம். அனைத்து தேவதூதர்கள் மற்றும் புனிதர்களின் ஒருங்கிணைந்த அழகை விட மாமரியின் தோற்றம் அதிக அழகுள்ளதாக இருக்கும். அங்கே சேசு நாதரின் அழகை நாம் காண்போம். அது மாமரியின் அழகையும் விட அளவற்ற விதமாய் மேம்பட்டதாக இருக்கும். நம் முகரும் புலன் பரலோக நறுமணங்களால் திருப்திப்படுத்தப்படும். செவிப்புலன் பரலோக தெய்வீக இசைகளாலும், மனதைக் கொள்ளை கொள்ளும் இனிமையோடு நித்தியத்திற்கும் தேவ ஸ்துதிகளைப் பாடும் பரலோகவாசிகளின் கீதங்களாலும் திருப்திப்படுத்தப்படும். ஆ, என் தேவனே, மோட்சத்திற்கல்ல, நரகத்திற்கே நான் தகுதியுள்ளவனாக இருக்கிறேன்; என்றாலும் உமது மரணம் மோட்சத்தைப் பெற்றுக் கொள்ளும் நம்பிக்கையை எனக்குத் தருகிறது. பரலோகத்தை அனுபவித்து மகிழ்வதற்கும் அதிகமாக, அங்கே, இனி ஒருபோதும் உம்மை இழப்பது பற்றிய பயம் எனக்கில்லை என்ற பாதுகாப்பு உணர்வோடு, உம்மை என்றென்றும் நேசிக்கும்படி, பரலோகத்தை நான் ஆசித்து, அதை உம்மிடம் கேட்கிறேன். ஓ மரியாயே, என் மாதாவே, சமுத்திரத்தின் நட்சத்திரமே, உங்கள் ஜெபங்களால் என்னை மோட்சத்திற்கு நடத்திச் செல்வது உங்கள் பொறுப்பு.