இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரி சேசுவிடம் பிரியாவிடை பெறுதல்

 கல்லறையின் நுழைவாயிலை மூடுவதற்காகக் கல்லை உயர்த்துவதில் இரட்சகரின் பரிசுத்த சீடர்கள் தேவமாதாவை அணுகி அவர்களிடம்: ""ஓ இராக்கினியே, இப்போது நாம் கல்லறையை மூட வேண்டும். எங்களை மன்னியுங்கள். உங்கள் திருமகனே மீண்டும் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். அவருக்குக் கடைசிப் பிரியாவிடை கொடுங்கள்'' என்று சொல்ல வேண்டியுள்ளது. ""அப்படியானால், என் நேச மகனே, உம்மை இனி நான் பார்க்கவே முடியாதா? ஆகவே, உம்மை நான் பார்த்துக் கொண்டிருக்கிற கடைசி சந்தர்ப்பமாகிய இந்நேரத்தில், என் கடைசிப் பிரியாவிடையை, உமது பிரியமுள்ள அன்னையின் பிரியாவிடையை ஏற்றுக்கொள்ளும், உம்மோடு நான் அடக்கம் செய்யும் என் இருதயத்தையும் ஏற்றுக் கொள்ளும்'' என்று வியாகுல மாதா தன் திருமகனிடம் கூறியிருக்க வேண்டும்.

ஒரு தாய் துன்பப்பட்டு இறந்து கொண்டிருக்கிற தன் குழந்தையின் அருகில் இருக்கும்போது, அவள் சந்தேகமின்றி, அவனுடைய எல்லா வேதனைகளையும் உணருகிறாள், அனுபவிக்கிறாள்; ஆனால் அவன் உள்ளபடி இறந்து விட்ட பின், அவனது உடல் கல்லறைக்குச் சுமந்து செல்லப்படும்போது, துயரத்திற்குள்ளான அந்தத் தாய் தன் குழந்தைக்குக் கடைசிப் பிரியாவிடை தர வேண்டும். தான் இனி அவனைக் காணப் போவதில்லை என்ற நினைவு உண்மையில் அந்தத் தாய்க்கு மற்ற எல்லாத் துயரங்களுக்கும் மேலான துயரமாகவே இருக்கிறது. மாமரியின் வியாகுலத்தின் கடைசி வாளைப் பாருங்கள். தன் திருமகன் சிலுவையில் மரணமடைந்ததைக் கண்டு, அவரது உயிரற்ற திருச்சரீரத்தைக் கடைசி முறையாக அரவணைத்த பிறகு, இந்த மகா பரிசுத்த அன்னை, பூமியின் மீது இனி ஒருபோதும் அவரோடு வாழ இயலாதபடி, கல்லறையில் அவரை விட்டுச் செல்ல வேண்டியிருந்தது.

இந்தக் கடைசி வியாகுலத்தை நாம் நன்றாகப் புரிந்து கொள்ளும்படி, கல்வாரிக்கு மீண்டும் திரும்பி வந்து, உயிரற்ற தனது திருமகனின் திருச்சரீரத்தை மடியில் தாங்கியபடி இருக்கிற வியாகுல மாதாவைக் காட்சி தியானத்தில் காண்போமாக. அவர்கள் யோபின் வார்த்தைகளில், ஓ என் மகனே, ""நீர் முன்போலிராமல் என்னிடம் கடுமையுள்ளவரானீர்'' (30:21) என்று சொல்வதாகத் தோன்றுகிறார்கள். ஆம், ஏனெனில் உமது மேன்மையுள்ள குணங்களும், உமது அழகும், வரப்பிரசாதமும், புண்ணியங்களும், உமது வசீகரமான பாவனைகளும், நீர் என் மீது பொழிந்தருளிய விசேஷ அன்பின் எல்லா அடையாளங்களும், நீர் எனக்குத் தந்தருளிய ஒப்பற்ற வரப்பிராத சலுகைகளும்--இவை அனைத்துமே இப்போது துக்கமாக மாறி விட்டன. எண்ணற்ற அம்புகள் என் இருதயத்தைத் துளைத்திருக்கின்றன, எவ்வளவு அதிகமாக உம்மை நேசிக்க அவை என்னைத் தூண்டுகின்றனவோ, அவ்வளவு அதிகக் கொடூரத்தோடு அவை இப்போது உமது இழப்பை எனக்கு உணர்த்தவும் செய்கின்றன. ""ஓ சர்வேசுரனுடைய மெய்யான ஏக பேறானவரே, நீர் எனக்கு ஒரு தந்தையாக, ஒரு மகனாக, ஒரு மணவாளராக இருந்தீர்! நீர் என் ஆத்துமமாகவே இருந்தீர். இப்போதோ, நான் என் தந்தையை இழந்து விட்டேன், என் மணவாளரை இழந்து விதவையாகி விட்டேன், ஆறுதலற்ற, குழந்தையை இழந்த தாயாகி விட்டேன்; என் ஒரே மகனை இழந்ததால், நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன்'' (அர்ச். பெர்னார்ட்). 

இவ்வாறு மாமரி, தன் மகனைத் தன் கரங்களில் சுமந்து கொண்டு, துக்கத்தில் கிரகிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பரிதாபத்திற்குரிய மாதா அதிகப்படியான துக்கத்தால் இறந்து விடக்கூடும் என்று அஞ்சும் பரிசுத்த சீடர்கள், அவர்களது மகனின் திருச்சரீரத்தை அவர்களது கரங்களிலிருந்து வாங்கி, அடக்கத்திற்காகச் சுமந்துசெல்லும்படி, அவர்களை நெருங்கி வருகிறார்கள். மென்மையாகவும், மரியாதையோடும் அவர்கள் அவரை மாதாவிடமிருந்து "பிடுங்கி' எடுத்துக்கொள்கிறார்கள். குறிக்கப்பட்ட இடத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்ததும், ஓ தன் திருமகனுக்கு சித்தமானால், அவரோடு தானும் உயிரோடு அந்தக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட தேவ அன்னை எவ்வளவு ஏக்கமாயிருந்தார்கள்! ""என் மகனின் அடக்கத்தில், ஒரு கல்லறை இரண்டு இருதயங்களைக் கொண்டிருந்தது என்று என்னால் உண்மையாகவே கூற முடியும்'' என்று மாமரி அர்ச். பிரிஜித்தம்மாளுக்கு வெளிப்படுத்தினார்கள்.

மிகுந்த கஸ்திக்குள்ளாகிய என் மாதாவே, நீங்கள் மட்டும் தனியாக அழும்படி நான் விட்டுவிட மாட்டேன். இல்லை. என் கண்ணீரையும் உங்கள் கண்ணீரோடு சேர்ப்பேன். இந்த வரப்பிரசாதத்தை இப்போது உங்களிடம் கேட்கிறேன். என் இனிய அன்னையே உங்கள் துயரங்களைப் பற்றியும், என் இரட்சகரின் துயரங்களைப் பற்றியும் என் எஞ்சிய வாழ்நாளில் நான் அழுது கொண்டிருக்கும்படியாக, சேசுநாதருடைய திருப்பாடுகளையும், உங்கள் வியாகுலங்களையும் நான் எப்போதும் மனதில் கொண்டிருந்து, அவற்றின் மீது ஒரு கனிவுள்ள பக்தியை நான் எப்போதும் கொண்டிருக்கும் வரத்தை எனக்குப் பெற்றுத் தாரும். இந்தத் துயரங்கள் என் மரண வேளையில், என் ஆண்டவரை நோகச் செய்த என் பாவங்களின் காட்சியால் நான் அவநம்பிக்கை கொள்ளாதபடி, அச்சமயத்தில் எனக்குத் தேவைப்படும் நம்பிக்கையையும், பலத்தையும் எனக்குத் தரும் என்று நான் நம்புகிறேன். அவை எனக்கு மன்னிப்பையும், நிலைமை வரத்தையும், மோட்சத்தையும் பெற்றுத் தருவனவாக. அங்கே, உங்களோடு அக்களித்துக் கொண்டும், நித்தியத்திற்கும் என் சர்வேசுரனுடைய அளவற்ற இரக்கங்களைப் பாடிக்கொண்டும் இருப்பேன் என்றும் நான் நம்பியிருக்கிறேன். ஆமென்.

கல்லறையை விட்டுப் புறப்படுமுன், அர்ச். பொனவெந்தூர் கூறுகிறபடி, மாமரி அதை மூடியிருந்த கல்லை நோக்கி: ""ஓ, ஒன்பது மாதங்களாக என் உதரத்தில் அடங்கியிருந்த புனித சரீரத்தை இப்போது சூழ்ந்திருக்கிற பாக்கியம் பெற்ற கல்லே, நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன், உன்னைக் கண்டு பொறாமை கொள்கிறேன்; என் மகனின் காலவனாக, என் முழுப் பொக்கிஷமும், என் முழு சிநேகமுமான என் திருமகனின் காவலனாக, உன்னை நான் விட்டுச் செல்கிறேன்'' என்று சொல்லி, அதை ஆசீர்வதித்தார்கள். அதன்பின் தன் இருதயத்தில் நித்திய பிதாவை நோக்கி எழும்பி, அவர்கள் அவரிடம்: ""ஓ பிதாவே, உம்முடைய திருச்சுதனும், அதே சமயம் என் திருமகனுமாகிய அவரை உம்மிடம் ஒப்படைக்கிறேன்'' என்று சொல்கிறார்கள். இவ்வாறு, தனது நேச சேசுவுக்குத் தன் இறுதிப் பிரியாவிடை தந்த பிறகு, மாமரி அங்கிருந்து புறப்பட்டுத் தன் சொந்த வீட்டுக்குத் திரும்பி வருகிறார்கள். இந்தத் தாய் எவ்வளவு வேதனையும், துயரமும் உள்ளவர்களாகத் திருக்கல்லறையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள் என்றால், அவர்களைக் கண்ட பலர் தங்களையும் மீறித் துயரத்தால் கண்ணீர் சிந்தினார்கள்; மாமரி கடந்து சென்ற பாதையெல்லாம், அவர்களைக் கண்ட அனைவருமே அழுதார்கள், அவர்களைக் கண்டவர்களால் தங்கள் கண்ணீரை அடக்க முடியவில்லை என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார். அவரே மேலும் தொடர்ந்து, மாதாவுடன் சென்ற பரிசுத்த சீடர்களும் பெண்களும், ""தங்கள் ஆண்டவருக்காகத் துக்கப்படுவதை விட அதிகமாக மாமரிக்காகத் துக்கம் கொண்டாடினார்கள்'' என்று சொல்கிறார்!

திரும்பிச் செல்லும் வழியில், தன் சேசுவின் திரு இரத்தத்தால் இன்னும் ஈரமாயிருந்த திருச்சிலுவைக்கு முன்பாகக் கடந்து செல்கையில், மாமரியே அதை முதலாவதாக ஆராதிப்பவர்களாக இருந்தார்கள். அச்சமயத்தில் மாமரி, ""ஓ பரிசுத்த சிலுவையே, நான் உன்னை முத்தமிடுகிறேன், உன்னை ஆராதிக்கிறேன்; ஏனெனில் நீ இனியும் அவமானம் தரும் கழுமரமாக இல்லாமல், உலக இரட்சணியத்துக்காக உன் மீது பலியாக்கப்பட்ட தேவ செம்மறிப் புருவையானவரின் திரு இரத்தத்தால் அர்ச்சிக்கப்பட்டு, இப்போது நீ அன்பின் சிங்காசனமாகவும், இரக்கத்தின் பலிபீடமாகவும் ஆகியிருக்கிறாய்'' என்று கூறினார்கள் என்று அர்ச். பொனவெந்தூர் கூறுகிறார்.

அதன்பின் அவர்கள் சிலுவையை விட்டுப் பிரிந்து வீடு திரும்பினார்கள். அங்கே வந்ததும், வியாகுல அன்னை சுற்றிலும் பார்க்கிறார்கள், இப்போது தன் சேசுவை அங்கு அவர்களால் பார்க்க முடியவில்லை; ஆனால், தனது பிரிய திருமகனின் இனிய பிரசன்னத்திற்குப் பதிலாக, அவரது அழகிய வாழ்வு மற்றும் கொடிய மரணத்தின் நினைவுகள் அவர்களுடைய கண்களுக்கு முன்பாகத் தோன்றின. பெத்லகேம் தொழுவத்தில் தன் பச்சிளங்குழந்தையைத் தான் எப்படி தன் மார்போடு அணைத்துக் கொண்டார்கள் என்பதை அவர்கள் நினைவுகூர்ந்தார்கள்; நாசரேத் வீட்டில் தாஙக்ள் ஒன்றாக வாழ்ந்த பல ஆண்டுகளில் அவரோடு தான் நடத்திய உரையாடல்களை நினைவுகூர்ந்தார்கள்; தங்களுடைய பரஸ்பர பாசத்தையும், நேசப் பார்வைகளையும், அந்தத் தெய்வீக உதடுகளிலிருந்து வெளிப்பட்ட நித்திய வாழ்வுக்குரிய வார்த்தைகளையும் அவர்கள் நினைவுகூர்ந்தார்கள். அதன்பின் அந்நாளில் அவர்கள் கண்டிருந்த அந்தத் துயரமான காட்சி அவர்களுக்கு முன்பாக வந்தது. ஆணிகளும், முட்களும், கிழித்துப் புண்ணாக்கப்பட்ட அவர்களது திருமகனின் திருச்சரீரமும், அந்த ஆழமான காயங்களும், வெளியே தெரிந்த அவருடைய எலும்புகளும், திறந்திருந்த அந்த வாயும், மங்கியிருந்த அந்தக் கண்களும் அவர்களுடைய மனக்கண்களுக்கு முன்பாக வந்தன. ஆ! அந்த இரவு எத்தகைய பயங்கரமுள்ள வியாகுல இரவாக மாமரிக்கு இருந்தது! துயரம் தாளாத அந்தத் தாய், அர்ச். அருளப்பரிடம் திரும்பி, துக்கத்தோடு: ""ஆ, அருள், உன் குரு இப்போது எங்கே இருக்கிறார் என்று எனக்குச் சொல்'' என்கிறார்கள். அதன்பின் அவர்கள் மதலேனிடம்: ""மகளே, உன் நேசர் எங்கே இருக்கிறார் என்று எனக்குச் சொல். ஓ சர்வேசுரா, அவரை எங்களிடமிருந்து யார் எடுத்துக் கொண்டார்கள்?'' என்று கேட்கிறார்கள். மாமரி துக்கம் தாளாமல் கண்ணீர் சிந்த, கூடியிருந்த அனைவரும் அவர்களோடு சேர்ந்து அழுகிறார்கள்.

நீயோ, என் ஆத்துமமே, நீ அழுவதேயில்லை! ஆ, மாமரியை நோக்கித் திரும்பி, அர்ச். பொனவெந்தூரோடு சேர்ந்து அவர்களை நோக்கி:""ஓ, என் இனிய இராக்கினியே, நான் அழச் செய்யுங்கள்; நீங்கள் மாசற்றவர்கள், நானோ குற்றமுள்ளவன்'' என்று சொல். குறைந்தபட்சம் அவர்களோடு சேர்ந்து அழவாவது உன்னை அனுமதிக்கும்படி வேண்டிக்கொள். அவர்கள் அன்பிற்காக அழுகிறார்கள். நீ உன் பாவங்களுக்காகத் துக்கப்பட்டு அழுவாயாக.

ஏற்கெனவே இறந்து, உமது திருமடியில் வளர்த்தப்பட்டிருந்த உங்கள் திருச்சுதனைக் கண்டதால் உங்கள் இருதயத்தை ஊடுருவிய கசப்பான வாளுக்காக, என் வியாகுல மாதாவே, உங்கள்மீது நான் பரிதாபம் கொள்கிறேன். உமது கரங்களிலுள்ள உமது திருமகன் முன்பு பெத்லகேம் தொழுவத்தில் நீங்கள் அவரைப் பெற்றுக் கொண்ட போது இருந்தது போல, இப்போது அழகோ, வசீகரமோ இல்லாதிருக்கிறார், அதற்கு மாறாக, அவர் இரத்தத்தால் மூடப்பட்டவராகவும், நீலம் பூத்தவராகவும், எலும்புகள் தெரியும் அளவுக்குக் காயங்களால் சிதைக்கப்பட்டவராகவும் இருக்கிறார். அப்போது நீங்கள் அவரிடம்: ""என் மகனே, என் மகனே, நேசம் எந்த அளவுக்கு உம்மைத் தாழ்த்தி விட்டது!'' என்றீர்கள். அவர் கல்லறைக்குச் சுமந்து செல்லப்பட்டபோது, நீங்களும் அவருடன் சென்று, உங்கள் சொந்தக் கரங்களால் அவரைக் கல்லறையில் வைத்தீர்கள். அவருக்கு இறுதிப் பிரியாவிடை தந்தபின், உங்கள் நேச இருதயத்தை அவரோடு அடக்கம் செய்து விட்டுத் திரும்பிச் சென்றீர்கள். உங்களது அழகிய ஆத்துமத்தின் இந்த வேத சாட்சியத்தைக் கொண்டு, ஓ அழகிய நேசத்தின் மாதாவே, என் நேச சர்வேசுரனுக்கு எதிராக நான் கட்டிக்கொண்டவையும், இப்போது என் முழு இருதயத்தோடும் நான் மனஸ்தாபப்படுபவையுமான என் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தாருங்கள். சோதனைகளில் என்னைக் காத்துக்கொள்ளுங்கள்; சேசுவுடையவும், உங்களுடையவும் பேறுபலன்களின் வழியாக என் ஆத்துமத்தை இரட்சித்துக் கொண்டு, ஒரு நாள், இந்தப் பரிதாபத்திற்குரிய அந்நிய தேச வாழ்வுக்குப் பிறகு, நித்தியத்திற்கும் சேசுவினுடையவும், உங்களுடையவும் ஸ்துதிகளை நான் பாடிக் கொண்டிருக்கும் படியாக, நான் மோட்சம் செல்லும்படியாக, என் மரண வேளையில் எனக்கு உதவி செய்யுங்கள். ஆமென்.