8 ஜூன் 1944.
மூன்று ராஜாக்கள் சேசுவைச் சந்தித்ததும் அவர்கள் அவரை ஆராதித்ததுமான, நான் ஏற்கெனவே பார்த்த அந்தப் பெரிய அறையைக் காண்கிறேன். திருக்குடும்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த உபசரணையுள்ள வீட்டில் நான் இருப்பதாகக் கண்டுபிடிக்கிறேன். அங்கே சக்கரியாஸ் வருவதைக் காண்கிறேன். எலிசபெத் அங்கில்லை.
வீட்டெஜமானி முன்கூடத்திற்கு விரைந்து வந்து சக்கரியாசை சந்தித்து ஓர் அறையை அவருக்குக் காட்டுகிறாள். கதவைத் தட்டிவிட்டு அவள் பின்வாங்கிக கொள்கிறாள் விவேகமாக.
சூசையப்பர் கதவைத் திறக்கிறார். சக்கரியாசைக் கண்டதும் ஆச்சரியத்தால் குரல் கொடுக்கிறார். அவரைக் கூட்டிக் கொண்டு ஒரு நடைக்கூட அளவிலான சிறிய அறைக்குச் செல்கிறார்கள்.
“மரியா குழந்தைக்கு அமுதளிக்கிறார்கள். சீக்கிரம் வந்துவிடுவார்கள். உட்காருங்கள். உங்களுக்குக் களைப்பாயிருக்குமே” என்கிறார். தன் கட்டிலில் அவரை அமரச் செய்து தானும் பக்கத்தில் அமர்ந்து கொள்கிறார்.
சின்ன அருளப்பனைப் பற்றி சூசையப்பர் விசாரிக்கிறார். அதற்கு சக்கரியாஸ்: “அவன் ஒரு கோவேறு கழுதைக்குட்டியின் பலத்தோடு வளர்ந்து வருகிறான். இப்போது பல் முளைப்பதால் சற்று சிரமப்படுகிறான். அதனால்தான் அவனை இங்கே கொண்டுவர நாங்கள் விரும்பவில்லை. குளிர் மிகக் கடுமையாயிருப்பதால் எலிசபெத்தும் வரவில்லை. அவனுக்கு அமுதுணவில்லாமல் அவனை அங்கு விட்டு வரமுடியாது. அவளுக்குப் பெருங்குழப்பம். ஆனால் கால நிலை அவ்வளவு கடுமையாயிருக்கிறது.”
“ஆம். கடுமையாகத்தானிருக்கிறது.”
“அவர் பிறக்கும்போது உங்களுக்குத் தங்க வீடு இல்லை என்று நீங்கள் அனுப்பிய ஆள் சொன்னான். ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீர்களே!”
“ஆம். கூடுதல் கஷ்டம்தான். எங்கள் அசெளகரியத்தை விட பிள்ளையின் உடல் பாதிக்கப்படுமோ என்றுதான் கவலைப் பட்டோம். முதல் சில நாள்கள் அங்கேயே நாங்கள் தங்க வேண்டியதாயிற்று. எங்கள் தேவைகளெல்லாம் எங்களுக்குக் கிடைத்தன. ஏனென்றால் இடையர்கள் இந்நல்ல செய்தியை பெத்லகேம் மக்களிடம் சொல்ல, பலர் எங்களுக்குப் பரிசுகளைக் கொண்டு வந்தார்கள். ஆனால் எங்களுக்கு வீடில்லை - ஒரு சுமாரான அறையோ படுக்கையோ இல்லை... சேசு ரொம்ப அழுதார் - விசேஷமாக இராவேளையில். ஏனென்றால் எல்லாப் பக்கமிருந்தும் காற்று வீசிக் கொண்டிருந்தது. நான் ஒரு சிறு நெருப்பு மூட்டுவேன். சிறு நெருப்புதான். காரணம் புகை சேசுவுக்கு இருமலைக் கொண்டுவந்தது... எப்படியும் குளிராகவே இருந்தது. எல்லாத் திசையிலிருந்தும் குளிர்காற்று வீசும்போது இரண்டு மிருகங்கள் தரும் உஷ்ணம் அதிகமாயிருக்க முடியாது. அவரைக் குளிப்பாட்ட சூடான நீர் கிடைக்கவில்லை. மாற்றுவதற்கு உலர்ந்த ஆடைகளும் இல்லாதிருந்தோம். ஆம். அவர் அதிகமாகக் கஷ்டப்பட்டார். அவருடைய கஷ்டத்தைப் பார்த்து மரியா அதிக வேதனை யடைந்தார்கள். நானும் வேதனையடைந்தேன்... அவருடைய தாயின் மனவேதனையை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். பாலோடு கண்ணீரையும் சேர்த்து அவருக்குப் பருகக் கொடுத் தார்கள் - அமுதும் அன்பும்... இப்போது இங்கே எல்லாம் ரொம்பத் தாவிளை. நான் ஒரு நல்ல செளகரியமான தொட்டில் செய்திருந்தேன். மரியா அதிலே ஒரு சின்ன மெல்லிய மெத்தை செய்து பொருத்தியிருந்தார்கள். ஆனால் அது நாசரேத்தில் இருக்கிறது. அவர் அங்கே பிறந்திருந்தால் எல்லாமே வித்தியாசமாயிருந்திருக்கும்!”
அதற்கு சக்கரியாஸ்: “ஆனால் கிறீஸ்துநாதர் பெத்லகேமில் பிறக்க வேண்டியிருந்ததே! தீர்க்கதரிசனம் இருக்கிறதே!” என்கிறார்.
அப்போது மாதா வருகிறார்கள். இவர்களின் பேச்சுக் குரல் அவர்களுக்குக் கேட்டிருந்தது. முழுவதும் வெண் கம்பளி ஆடை அணிந்திருக்கிறார்கள். பயணத்திலும் மாட்டுத் தொழுவத்திலும் அணிந்திருந்த இருண்ட நிற ஆடையை மாற்றியிருக்கிறார்கள். அவர்களை நான் முன்பு கண்டுள்ளபடி முற்றும் வெண்ணுடை தரித்திருக்கிறார்கள். அவர்கள் தலையில் துகில் எதுவுமில்லை. சேசுவைக் கரங்களில் ஏந்தியிருக்கிறார்கள். அவர் அமுதால் நிறைவடைந்து தம் மிக வெண்மையான கட்டுத் துகிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்.
சக்கரியாஸ் மரியாதையுடன் எழுந்து வணக்கத்தோடு தலை பணிகிறார். பின் பக்கத்தில் போய் மகா சங்கையுடன் சேசுவை உற்றுப் பார்க்கிறார். பாலனைப் பார்ப்பதை விட அவருக்கு வணக்கம் செலுத்துவதற்காக, மிகவும் தாழப் பணிந்து குனிகிறார். மரியா பாலனை அவரிடம் கொடுக்கிறார்கள். அவர் எவ்வளவு ஆராதனையுடன் அவரைப் பெற்றுக்கொள்கிறாரென்றால், ஒரு கதிர்ப் பாத்திரத்தை ஏந்துபவர் போல் காணப்படுகிறார். உண்மையாகவே அவர் திவ்விய அப்பத்தையே தன் கரங்களில் ஏந்தியிருக்கிறார். ஏற்கெனவே ஒப்புக்கொடுக்கப்பட்ட அப்பம். அது சிநேகத்தினுடையவும், இரட்சணியத்தினுடையவும் போஜனமாக மனிதர்களுக்கு வழங்கப்பட்டபின் பலியாக்கப்படும். சக்கரியாஸ் சேசுபாலனை மாதாவிடம் திருப்பிக் கொடுக்கிறார்.
எல்லாரும் அமருகிறார்கள். எலிசபெத் ஏன் வரவில்லை யென்றும், அதனால் அவள் எவ்வளவு கவலைப்படுகிறாளென்றும் மறுபடியும் சக்கரியாஸ் கூறுகிறார். “கடந்த மாதங்களில் உம் பிள்ளைக்கு அவள் சில உடுப்புகள் தயார் செய்திருக்கிறாள். அவற்றை நான் கொண்டு வந்திருக்கிறேன். அவை கீழ்மாடியில் வண்டியில் இருக்கின்றன” என்கிறார்.
பின் எழுந்து கீழே இறங்கிச் சென்று ஒரு பெரிய மூட்டை ஒரு சிறிய முடிச்சுடன் வருகிறார். சூசையப்பர் பெரிய மூட்டையை அவரிடமிருந்து வாங்கி வைக்க, சக்கரியாஸ் இரண்டிலிருந்தும் தாம் கொண்டு வந்த பரிசுகளை எடுத்து வைக்கிறார். ஒரு மெல்லிய, கையால் பின்னிய கம்பளிப் போர்வை, சில லினன் துணிகள், சில சிறு உடுப்புகள், மேலும் கொஞ்சம் தேன், மிக வெண்மையான மாவு, வெண்ணெய், மாதாவுக்கு ஆப்பிள்களும், எலிசபெத் செய்து அனுப்பிய இனிப்புகளும். இன்னும், நன்றியுள்ள எலிசபெத்தினுடைய தாயன்பின் அடையாளமான பல சிறு பொருள்கள், இளம் தாய்க்கு.
“எலிசபெத்திற்கு நான் மிகவும் நன்றியோடிருப்பதாக தயவு செய்து சொல்லுங்கள். உங்களுக்கும் நன்றி கூறுகிறேன். அவர்களைக் காண்பது எனக்கு மிக மகிழ்ச்சியாயிருந்திருக்கும். ஆனால் நான் சந்தர்ப்பத்தைக் கண்டுபிடிக்கிறேன். சின்ன அருளப்பனைப் பார்க்க வேண்டுமென்றும் மிக ஆவலாயிருக்கிறேன்...” என்கிறார்கள் மாதா.
“இளந்தளிர் காலத்தில் அவனைப் பார்க்கலாம். நாங்கள் உங்களைப் பார்க்க வருவோம்.”
“நாசரேத் அதிக தூரமாயிற்றே!” என்கிறார் சூசையப்பர்.
“நாசரேத்? ஏன்? நீங்கள் இங்கேதான் தங்க வேண்டும். மெசையா பெத்லகேமில்தான் வளர வேண்டும். இதுதான் தாவீதின் நகரம். மிக உந்நதர் செசாரின் விருப்பத்தின் மூலம் அவரைத் தாவீதின் நகரத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். இதுவே யூதேயாவின் புனித பூமி. எதற்காக அவரை நாசரேத்திற்குக் கொண்டு போக வேண்டும்? யூதர்கள் நசரேயர்களைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். இக்குழந்தை, வரும் ஆண்டுகளில் தன் மக்களின் இரட்சகராயிருக்க வேண்டியுள்ளது. தன் அரசர் ஒரு ஒதுக்கப்பட்ட ஊரிலிருந்து வருகிறார் என்று தலைநகரம் அவரை நிந்திக்கக் கூடாது. எனக்கும் உங்களுக்கும் தெரிந்திருப்பதுபோல், யூத ஆலோசனைச் சங்கம் எவ்வளவு குற்றங் கண்டுபிடிப்பதாயும், அதன் முக்கிய மூன்று பிரிவுகள் எத்தகைய ஏளன இகழ்ச்சி செய்வதாயும் உள்ளன...! இங்கே எனக்குப் பக்கத்தில் இருந்தால் எப்படியாவது நான் உங்களுக்கு உதவ முடியும். என்னிட மிருக்கிற எல்லாவற்றையும், அதாவது பொருள்கள், ஜாமான்கள் என்றல்ல, என் மற்ற தகுதிகளைப் புதிதாய்ப் பிறந்துள்ள இத்திருப் பாலனின் ஊழியத்தில் வைப்பேன். அவர் கற்றுக் கொள்ளும் வயது வரும்போது அவருடைய ஆசிரியராக நான் மகிழ்ச்சியுடன் இருப்பேன் - என் சொந்த மகனுக்கு இருப்பதைப் போல. அதனால் அவர் பெரியவராகும்போது என்னை ஆசீர்வதிப்பார். அவர் பெரிய காரியங்களுக்காக நியமிக்கப்பட்டவர் என நாம் கருத வேண்டும். அதனால் அவர் தன்னுடைய அலுவலில் வெற்றி பெறும்படியாக அதற்குரிய எல்லா உபகரணங்களுடனும் உலகத்திற்குத் தன்னை ஆஜர்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும். நிச்சயமாக அவரிடம் ஞானம் இருக்கும். ஆயினும் அவர் ஒரு குருவிடம் பயிற்சி பெற்றார் என்கிற ஒரு விஷயமே அவரை கடின வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் அதிக ஏற்புடையவராக்கி அவருடைய அலுவலை எளிதாக்கும்.”
மாதா சூசையப்பரைப் பார்க்கிறார்கள். சூசையப்பரும் மாதாவைப் பார்க்கிறார். இதையெல்லாம் தெரியா நிலையில் தூங்கும் பாலகனின் மாசற்ற ரோஜா சிரசின் மேலாக அவர்கள் இருவருக்கும் மவுன கேள்விப் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. அந்தக் கேள்விகளில் துயரம் நிரம்பியுள்ளது. மரியா தன் சிறிய இல்லத்தை நினைக்கிறார்கள். சூசையப்பர் தன் வேலையை எண்ணிக் கவலைப்படுகிறார். சில தினங்களுக்கு முன்பு வரையிலும் தாங்கள் முற்றிலும் அறியப்படாத அந்த இடத்தில், அவர்கள் அடியிலிருந்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கும். அவர்கள் வீட்டில் விட்டுவந்த விருப்பப் பொருள்கள் எதுவும் இங்கே இல்லை. அதையெல்லாம் இக்குழந்தைக்கென அவர்கள் எவ்வளவு அன்புடன் தயாரித்தார்கள்!
மரியா அதைச் சொல்கிறார்கள்: “இதை நாங்கள் எப்படிச் செய்யக் கூடும்? எல்லாவற்றையும் அங்கல்லவா விட்டு வந்திருக்கிறோம்! என் சேசுவுக்காக சூசை உழைப்பையோ பணத்தையோ பாராமல் எப்படி கஷ்டப்பட்டு வேலை செய்தார்! மிக நல்ல மரமும் மிக மெல்லிய கம்பளியும் சிறந்த சணலும் வாங்கி சேசுவுக்கு அனைத்தும் செய்வதற்குப் போதுமான பொருள் சம்பாதிக்க, அவர் பகலில் மற்றவர்களுக்கு வேலை செய்தபின் இரவிலும் உழைத்தாரே! தேன்கூடுகளை உண்டாக் கினார். தொட்டிலை சேசு வளரும் வரை என் அறையில் வைத்திருப்பதற்கும், அதற்குப்பின் அந்த இடத்திலே கட்டிப் போட்டுக் கொள்வதற்கும் ஏதுவாக வீட்டில் சில மாற்றங்களைச் செய்வதற்கு கொத்தனாகவும் வேலை செய்தாரே! சேசு இளைஞனாகுமட்டும் என்னுடன் தங்குவார் என்பதற்காக. ”
“நீங்கள் அங்கே விட்டுவந்ததையெல்லாம் சூசை போய்க் கொண்டு வரலாமே!”
“அவைகளை எங்கே வைப்பது? நாங்கள் ஏழைகள் என்பது உங்களுக்குத் தெரியுமே. எங்கள் உழைப்பும் வீடும்தான் எங்களிடம் உள்ளன. அதனால் பட்டினி இல்லாமல் வாழ அவை உதவுகின்றன. இங்கே... எங்களுக்கு வேலை கிடைக்கக் கூடும். ஆனால் வீட்டுப் பிரச்னை எப்போதும் இருக்குமே. இந்த நல்ல ஸ்திரீ எங்களை எப்போதும் இங்கே வைத்துக் கொள்ள முடியாது. எனக்காக சூசை தியாகம் செய்திருப்பதற்குக் கூடுதலாக அவரைத் தியாகம் செய்ய வைக்க என்னால் கூடாது.”
“ஓ! நானா? என்னைப் பற்றி ஒன்றுமில்லை. மரியா துயரப்படுவதைப் பற்றித்தான் நான் கவலைப்படுகிறேன். தன்னுடைய வீட்டில் இருக்க முடியாமைப் பற்றி அவர்கள் படும் துயரத்தைப் பற்றியே நான் கவலைப்படுகிறேன்” என்கிறார் சூசையப்பர்.
இரண்டு பெரிய நீர்த்துளிகள் மாதாவின் கண்களில் பொங்கி நிற்கின்றன.
சூசையப்பர் மேலும் தொடர்ந்து: “அந்த வீடு அதில் நிறைவேற்றப்பட்ட திருநிகழ்ச்சியின் காரணமாக அவர்களுக்கு மோட்சம் போல் அவ்வளவு அருமையாயிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் அதிகம் பேசுவதில்லை. ஆனால் நான் நிறையக் கண்டுபிடிக்கிறேன். அந்தக் காரணத்திற்காக அல்லாதிருந்தால் நான் இவ்வளவு கவலைப்பட மாட்டேன். நான் இரட்டிப்பாக உழைப்பேன். அவ்வளவே. முன்பு செய்ததைவிட இரண்டு மடங்கு உழைத்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள இளமையும் வலிமையும் கொண்டிருக்கிறேன். மரியா கூடுதல் வேதனைப்படாமலும்... நாங்கள் இப்படித்தான் செய்ய வேண்டுமென்று நீங்கள் சொல்வதாயுமிருந்தால்... இதோ நீங்கள் அதிகம் நல்லதெனக் கருதுவதை நான் செய்வேன் - ஆனால் அது சேசுவுக்கு உதவுவதாயிருக்க வேண்டும்” என்று சொல்கிறார்.
“நிச்சயமாக அது உதவும். சிந்தித்துப் பாருங்கள். காரணங்கள் புலப்படும்.”
அப்போது மாதா: “மெசையா நசரேயன் என்றும் அழைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளதே!” என்கிறார்கள்.
“உண்மைதான். ஆனால், அவர் வளரும் வரைக்குமாவது யூதேயாவில் அவர் வளரட்டுமே. “நீயோ எப்பிராத்தா பெத்லகேமே! நீயே பெரியவனாயிருப்பாய். ஏனெனில் இரட்சகர் உன்னிலிருந்து வெளிப்படுவார்” என்று தீர்க்கதரிசி சொல்கிறார். அவர் நாசரேத்தைப் பற்றிப் பேசவில்லை. ஒருவேளை அந்தப் பெயர் நாம் அறியாத வேறு காரணத்திற்காக அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கக் கூடும். ஆனால் இது அவருடைய பூமி.”
“குருவாகிய நீர் இதைச் சொல்கிறீர்... நாங்கள் துயர உள்ளங்களோடு அதைக் கேட்கிறோம். உம்மை நம்புகிறோம். ஓ! எவ்வளவு வேதனையாக இருக்கிறது!... நான் தாய்மை பெற்ற அந்த இல்லத்தை எப்போது காண்பேன்?” என்று கூறி மாதா மவுனமாக அழுகிறார்கள். நான் அவர்களின் துயரத்தைக் கண்டுபிடிக்கிறேன். ஆம், நான் அதைக் கண்டுணருகிறேன்.
மாதா அழுதபடியே காட்சி மறைகிறது.