இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கன்னியாஸ்திரீகளுக்குள்ளே உத்தம அர்ச். கன்னிகையே!

“கன்னியருக்குள்ளே உத்தம அர்ச். கன்னிகையே!” ஆ! எவ்வளவு பொருத்தமான பெயர்! பெண் குலத்திலுதித்தவர்களில் முதன் முதல் தன் கன்னிமையை முற்றும் கடவுளுக்கே அர்ப்பணம் செய்தவர் நம் ஆண்டவரின் மாதாவே! தேவமாதாவுக்கு முன் வாழ்ந்த யூதப் பெண்களில் ஒருவரேனும் இவ்விதக் காணிக்கையைக் கனவிலும் கருதவில்லை. இளமை முதல் கட்டுப்பாடு என்னும் காவலின் கீழ் தன் கற்பைக் கண்ணும் கருத்துமாய்க் காத்து வந்தவர்கள் கன்னிமரியாயே; எனவே அவர்களைக் “கற்பின் அரசி” யென அழைப்பது சாலவும் பொருந்தும்.

கன்னிமாமரி தன் கற்பைச் சகலத்திலும் மேலாக மதித்தார்கள். கபிரியேல் தூதன் உலக இரட்சகர் அவர்களிடத்தில் பிறப்பார் என்ற சுப செய்தியை அவர்களிடம் அறிவித்தவுடன் கன்னிமாமரி தனது கற்பின் நித்திய காணிக்கையையே நினைத்துக் கலங்கினார்கள்; ஆனால் தன் கன்னிமைக்கு அற்பப் பழுதும் ஏற்படாது என்று அறிந்தவுடன், “இதோ நான் ஆண்டவருடைய அடிமை; உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது” (லூக். 1:38) என்று கூறித் தனது முழு சம்மதத்தைத் தெரிவிக்கிறார்கள்.

அக்கணமே இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையால், அற்புதமாக, ஆண்டவர் அவர்களது உதரத்தில் மனுவுருவெடுத்தார்; கன்னிமாமரி கர்த்தரைக் கர்ப்பந்தரித்தார்கள். இவ்விதம் அன்னை மாமரி திவ்விய சேசுவைக் கருத்தரிக்குமுன்னும், பெத்லகேம் குகையில் பெற்றெடுத்த பொழுதும், பெற்றெடுத்த பின்னும், தன் கன்னிமையைக் களங்கமின்றிக் காப்பாற்றி, நித்திய கன்னித் தாயாக விளங்குகின்றார்கள். விண்ணுலகின் விசேஷ வரத்தால், மண்ணுலகில் முப்பொழுதும் கற்பின் லீலி மலராய்த் திகழ்ந்த தேவதாயை “கன்னியருக்குள் உத்தம அர்ச். கன்னிகையே” என்று திருச்சபை புகழ்கின்றது; வாயார வாழ்த்துகின்றது.

அவர்கள் ஓர் தூய லீலி மலர். காட்டு லீலி மலரை விடச் சுகந்த வாசனையும், தூய வெண்மையுமுள்ள ஓர் மலர் உண்டென்றால் அது மாசற்ற கன்னிமாமரியே. புண்ணியங்களுக்குள் சுகந்த பரிமளம் வீசும் புண்ணியம் கற்பு. தேவதாயோ மோட்ச பரிமளம் வீசும் இக்கற்பையே ஆடையாக அணிந்திருப்பதால், படைக்கப்பட்டவைகளில் தனக்கு நிகரானது எதுவுமின்றி, தனிச் சோபையுடன் விளங்குகிறார்கள்.

“இஸ்பிரீத்துசாந்துவானவர் உமது மேல் எழுந்தருளி வருவார்; உன்னதருடைய வல்லபமானது உமக்கு நிழலிடும்” என்று தேவதூதன் கன்னியர்க்கரசியான கன்னி மாமரியிடம் அறிவித்த பொழுதும் அவர்களிடம் அணை யாச் சுடர்விட்டு எரிந்தது கற்பென்னும் தீபமே. இதனாலன்றோ பரிசுத்த வேதாகமம் அவர்களிடம் தூய தீபமெனத் துலங்கும் பரிசுத்த கற்பை ஒரு லீலி மலர்க் கொத்துக்கு ஒப்பிட்டுக் கூறுகிறது. “கற்பின் கூடமே,” “பரிசுத்தத்தின் லீலியே,” “லீலி மலர்களின் நடுவே விளங்குபவளே...” இது போன்று இன்னும் எத்தனை உவமைகள்!

இவ்விதம் நம் ஆண்டவளிடம் விளங்கிய களங்கமற்ற கற்பெனும் புண்ணியத்தை திருச்சபை நமக்கு எடுத்துக் காட்டுவதின் நோக்கமென்ன? நம் தாய் நமக்கு படிப்பிக்கும் பாடம் என்ன? அன்பே வடிவாய், அன்னை மாமரியிடம் அவதரித்த சேசுநாதர் பாவ மாசற்ற தூய இருதயங்களிலே தங்கியிருக்க விரும்புகின்றார். பாவக் கறையற்ற பரிசுத்த இருதயமுள்ளவர் தூய கருத்தோடு நினைக்கும் ஒவ்வொரு நினைவிலும், சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும், செய்யும் ஒவ்வொரு செய்கையிலும் தானும் ஒன்றித்திருக்க ஆசிக்கின்றார். மேலும் தம்மைப் பெற்றவர்கள் ஓர் கன்னித் தாய், கற்பின் அணிகலம், வெண்மையான லீலி என்றும் நமக்குப் படிப்பிக்கின்றார். 

ஆனால் நாமோ கண்ணிருந்தும் குருடரைப் போலும், காதிருந்தும் செவிடரைப் போலும், எல்லாம் அறிந்திருந்தும் ஒன்றும் அறியாதவர்களைப் போல் இருக்கிறோம். அணையா விளக்குகளைக் கையிலேந்திய ஆயிரக்கணக்கான கன்னியர் பின்தொடர்ந்து வர, என்றும் எவ்விடமும் ஆசையுடன் நம்மைத் தேடிவரும் அன்பர் சேசுவின் முன்னிலையில் பரிசுத்தராய் நடக்கின்றோமா? சோதனைகளைத் தாமதமின்றி அகற்றவும், பாவப் படு குழியில் விழாதிருக்கவும் என்ன முயற்சி செய்கிறோம்? 

ஞானஸ்நானத்தால் ஜென்மப் பாவக்கறை போக்கப்பட்ட நமது ஆத்துமத்தை எவ்விதம் காப்பாற்றி வந்திருக் கிறோம்? கடவுளின் வீடான நமது ஆத்துமத்தின் சோபை யைக் கெடுத்த பாவச் சோதனைகள், பாவ நாட்டங்கள், கெட்ட ஆசைகள், கூடாத நேசப் பற்றுதல்கள் எத்தனை யெத்தனை? ஆண்டவரை அவருடைய வீட்டிலிருந்து எத்தனை விசை விரட்டி ஓட்டியிருக்கின்றோம். நரகக் கூளிக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் நமது இருதயத்தில் இடமுண்டு. பாவத்திலிருந்து நம்மை இரட்சித்து, பரம திவ்விய நற்கருணையில் இராப்பகலாய் நமக்காய்க் காத்திருக்கும் நண்பர் சேசுவுக்கு, கன்னியர்க்கரசி கன்னிமா மரியாயின் திருமகனுக்கு இடமில்லை!

மனமே! கடந்த காலத்தை நினைத்து கலங்க வேண்டாம்! சுயபலத்தை நம்பினதால் மோசம் போனாய்! “தோல்வியே வெற்றிக்கு அறிகுறி” என்பதை மறவாதே. நமது ஆண்டவரின் உதவியால் பலவீனமுள்ள மாமிச இச்சைகளின் மேல் வெற்றி கொள்வோம். மாமரிக்கும், அவர்களுடைய திருக்குமாரனுக்கும் விருப்பமில்லாத எதையும் இனிச் செய்ய மாட்டோம் என்று உறுதி கொள்ளுவோம். நமது ஆத்துமத்திலுள்ள பாவக்கறையைப் போக்கி, பசாசை அகற்றி, அதை என்றென்றும் இஸ்பிரீத்து சாந்துவின் இன்பமான ஆலயமாகக் காப்பாற்றுவோம்.

“ஓ! கன்னியருக்குள்ளே உத்தம அர்ச். கன்னிகையே! கற்பின் அணிகலமே! உமது உத்தம மாதிரிகையைப் பின்பற்றி, நிலையற்ற இவ்வுலகத்தையும், நீர்க்குமிழி போல் மறையும் அதன் இன்ப சுகங்களையும் துறந்து கடவுள் திருப்பணிக்கே தங்களை முற்றும் கையளித்துள்ள கன்னியர் எத்தனை பேர்! அவர்கள் எல்லோரையும் உமது கண்ணின் கருமணியெனக் காத்தருளும்.

ஓ மரியாயே! எங்கள் மாதாவே! உமது உதவியால் உம்மைப் பின்பற்றி, சம்மனசுக்களைப் போல் பரிசுத்தராய் ஜீவிக்கக் கற்பென்னும் புண்ணியத்தின்மேல் எங்களுக்கு அணையாத ஆசையைத் தந்தருளும்! அழி யாத ஆர்வத்தை மூட்டியருளும்! அதன் வழியாய் உம்முடைய நேசக் குமாரனும் எங்கள் ஆண்டவருமான சேசுவோடு நாங்கள் உமது பிரிய பிள்ளைகளாய் என்றும் வாழக் கிருபை செய்தருளும்.” 

கன்னியர்களுக்குள்ளே உத்தம அர்ச். கன்னிகையே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!