இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஒரு நல்ல பாவசங்கீர்த்தனம்

ஒரு நல்ல பாவசங்கீர்த்தனத்திற்கு மூன்று காரியங்கள் அவசியம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அவை: ஆத்தும சோதனை, பாவத்திற்கு மனஸ்தாபம் மற்றும் இனி பாவம் செய்வதில்லை என்ற உறுதியான பிரதிக்கினை.

ஆத்தும சோதனையைப் பொறுத்த வரை, அடிக்கடி தேவத் திரவிய அனுமானங்களைப் பெறுபவர்களுக்கு, அற்பப் பாவங்களின் மிகச் சிறிய சூழ்நிலைகள் அனைத்தையும் கண்டுபிடிக்கும்படி மிகக் கடுமையாக முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அத்தகையவர்கள் தங்கள் பற்றுகள் மற்றும் வெதுவெதுப்பு ஆகியவற்றின் காரணங்களையும், அவற்றின் வேர்களையும் கண்டுபிடிப்பதில் கவனமாக இருப்பதைக் காண்பதையே நான் விரும்புவேன். வேறு சிலர் இருக்கிறார்கள்; இவர்கள் அதே கதையைத் திரும்பவும் சொல்வார்கள், அதே பாவங்களை எந்த மனஸ்தாபமும், மனந்திரும்புவது பற்றிய எந்த எண்ணமும் இன்றி சொல்வார்கள்.

அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்பவர்களும், வேண்டுமென்று செய்யும் அற்பப் பாவங்களுக்கு எதிராகத் தங்களைக் காத்துக் கொள்பவர்களுமான ஞானத் தன்மையுள்ள ஆன்மாக்கள் ஆத்தும சோதனைக்கு நீண்ட நேரம் செலவிட அவசியமில்லை. கனமான பாவங்களைப் பொறுத்த வரை, அவர்கள் தங்கள் மனசாட்சியைக் கசக்கிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் ஏதாவது சாவான பாவம் செய்திருந்தால், ஆத்தும சோதனை இன்றியே அவர்கள அதை அறிந்திருப்பார்கள். அற்பப் பாவங்களைப் பொறுத்த வரை, அவை வேண்டுமென்று செய்யப்பட்டவையாக இருந்தால், அவை விளைவிக்கும் மனவுறுத்தலின் காரணமாக, அவையே தங்களை அந்த ஆத்துமங்களுக்கு வெளிப்படுத்தி விடும். மேலும், நம் அற்ப மீறுதல்கள் அனைத்தையும் பாவசங்கீர்த்தனத்தில் சொல்லும் கடமையும் நமக்கு இல்லை. இதன் விளைவாக, அவற்றைக் கண்டிப்பான முறையில் தேட வேண்டிய கடமை நமக்கில்லை. அவற்றின் எண்ணிக்கையையும், சூழ்நிலையையும், அவை செய்யப்பட்ட விதம், அல்லது அவற்றின் காரணம் ஆகியவற்றையும் சொல்ல வேண்டிய அவசியம் அதை விடக் குறைவு. அதிகக் கனமானவையும், உத்தமதனத்திற்கு மிக எதிரானவையுமான பாவங்களைச் சொல்வதும், மற்றவற்றைப் பொதுவான வார்த்தைகளில் சொல்வதும் போதுமானது. பாவசங்கீர்த்தனம் செய்ய உன்னிடம் எந்தப் பாவமும் இல்லை என்று நீ உணர்ந்தால், கடந்த காலத்தில் நீ செய்தவையும், உனக்கு அதிக மனஸ்தாபத்தை வருவித்தவையுமான பாவங்களைச் சொல். உதாரணமாக: பிறர்சிநேகத்திற்கும், பரிசுத்ததனத்திற்கும், கீழ்ப்படிதலுக்கும் எதிராக கடந்த காலத்தில் நான் செய்த எல்லாப் பாவங்களைப் பற்றியும் விசேஷமான முறையில் என்னை நான் குற்றஞ்சாட்டிக் கொள்கிறேன் என்று சொல். இக்காரியத்தில் அர்ச். பிரான்சிஸ் சலேசியாரின் கோட்பாடு நமக்கு எவ்வளவு ஆறுதல் தருவதாக இருக்கிறது: ""பாவசங்கீர்த்தனத்தில் உன் சிறிய பாவங்கள் அனைத்தையும் உன்னால் நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை என்றால், அதற்காகக் கலக்கமடையாதே. ஏனெனில் நீ அடிக்கடி உன்னையும் அறியாமல் இந்தச் சிறிய பாவங்களில் விழுகிறாய். ஆகவே, அடிக்கடி உன்னையும் அறியாமல் இந்தப் பாவங்களில் இருந்து நீ எழுந்தும் விடுகிறாய்'' என்று அவர் சொல்கிறார். அதாவது, அன்புச் செயல்களாலும், பக்தியுள்ள ஆன்மாக்கள் வழக்கமாகச் செய்கிற மற்ற நற்செயல்களாலும் நீ அந்தப் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுகிறாய். 

இரண்டாவதாக, மனஸ்தாபம் அவசியம்; இதுவே பாவ மன்னிப்புப் பெறுவதற்கு அவசியமான முதன்மையான நிபந்தனையாக இருக்கிறது. மிக நீண்ட பாவசங்கீர்த்தனங்கள் அல்ல, மாறாக, மிக அதிக துக்கத்தோடு செய்யப்படும் பாவசங்கீர்த்தனங்களே மிகச் சிறந்தவையாக இருக்கின்றன. நல்ல பாவசங்கீர்த்தனத்திற்கான நிரூபணம், அதைச் செய்பவன் பயன்படுத்தும் ஏராளமான வார்த்தைகளில் அல்ல, மாறாக, உண்மையான மனஸ்தாபத்தில்தான் இருக்கிறது என்று அர்ச். கிரகோரியார் சொல்கிறார். ஆனாலும், அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்வோரும், அற்பப் பாவங்களைக் கூட வெறுப்பவர்களுமான விசுவாசிகள் தங்கள் மனஸ்தாபத்தின் உண்மைத்தன்மை பற்றிய எல்லா சந்தேகங்களையும் அகற்றி விடுவார்களாக. சிலர் தாங்கள் எந்த துக்கத்தையும் உணராததால், கலக்கமடைகிறார்கள். அவர்கள் பாவசங்கீர்த்தனம் செய்யும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தவும், ஆழ்ந்த மனத் துக்கத்தை உணரம் விரும்புகிறார்கள். எவ்வளவு முயற்சி செய்தும் இந்த ஆழ்ந்த துக்கத்தைத் தங்கள் மனங்களில் எழுப்ப அவர்களால் இயலாததால், தங்கள் பாவசங்கீர்த்தனத்தைப் பற்றி அவர்கள் எப்போதும் அமைதியின்மையை உணர்கிறார்கள். ஆனால் உண்மையான மனஸ்தாபம் அதை உணர்வதில் அல்ல, மாறாக அதை விரும்புவதில் இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். புண்ணியத்தின் பலன் முழுவதும் சித்தத்தில் இருக்கிறது; இதனாலேயே, விசுவாசமாகிய புண்ணியத்தைப் பற்றிப் பேசும்போது, சில சமயங்களில் விசுவசிக்க விரும்பும் ஒருவன் விசுவசிக்கும் மற்றொருவனை விட அதிகப் பேறுபலன் உள்ளவனாக இருக்கிறான் என்று ஜெர்சன் சொல்கிறார். அர்ச். தாமஸ் அக்குயினாஸ் மனஸ்தாபத்தைப் பற்றிப் பேசும்போது, பாவசங்கீர்த்தனத்திற்கு அவசியமான அடிப்படை மனஸ்தாபம் பாவம் செய்தது பற்றிய அதிருப்தியிலும், வெறுப்பிலும் உள்ளது, இந்த மனஸ்தாபம் ஆத்துமத்தின் உணரக்கூடிய பாகத்தில் இல்லை, மாறாக அது சித்தத்தில் உள்ளது; ஏனெனில் உணரக்கூடிய துக்கம், பாவத்தின் மீதான சித்தத்தின் வெறுப்பின் ஒரு விளைவாக இருக்கிறது என்கிறார். இந்த விளைவை நாம் எப்போதும் நம்மில் உருவாக்க இயலாது. ஏனெனில் ஆத்துமத்தின் கீழான பாகம் எப்போதும் ஆத்துமத்தின் மேலான பாகத்திற்குக் கீழ்ப்படிவதில்லை. சித்தம் பாவம் செய்தது பற்றி மற்ற எல்லாவற்றிற்கும் மேலான வெறுப்புக் கொள்ளும்போது, அந்தப் பாவசங்கீர்த்தனம் நல்ல பாவ சங்கீர்த்தனமாக இருக்கிறது. உணரக்கூடிய மனஸ்தாபத்தை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொள்ளும் முயற்சிகளைத் தவிர்ப்பதில் கவனமாயிரு. உள்ளரங்கச் செயல்களில் மிகக் குறைந்த வலுவந்தத்தோடும், மிகப் பெரிய இனிமையோடும் நாம் செய்யும் செயல்களே மிகச் சிறந்தவை என்பதை நினைவில் கொண்டிரு. ஏனெனில், பரிசுத்த ஆவியானவர் ""சகலத்தையும் இனிதாய் ஒழுங்குபடுத்துகிறார்'' (ஞான.8:1). இதனாலேயே புனிதத் தவசியான எசேக்கியாஸ் தம் பாவங்களைப் பற்றித் தாம் உணர்ந்த துக்கத்தைப் பற்றிச் சொல்லும்போது, ""இதோ சமாதானத்தின் நடுவே மகா கசப்பான என் கஸ்தி உள்ளது'' என்றார் (இசை.38:17). அவர் மிகுந்த துக்கத்தை உணர்ந்தார் என்றாலும் அதனோடு சமாதானமும் சேர்ந்திருந்தது.

நீ பாவ மன்னிப்புப் பெற விரும்பும்போது, பாவசங்கீர்த்தனத் திற்கான உன் ஆயத்தத்தில் கவனமாயிரு. முதலில் சேசுநாதரிடமும், வியாகுல மாதாவிடமும் உன் பாவங்களுக்கு மெய்யான மனஸ்தாபத்தைக் கேள். அதன்பின், ஏற்கெனவே சொல்லப் பட்டுள்ளது போல, ஒரு சுருக்கமாக ஆத்தும சோதனை செய். அதன்பின் உன் துக்கத்தை வெளிப்படுத்துமாறு, நேர்மையுள்ள மனதோடு பின்வரும் ஜெபத்தைச் சொல்வது போதுமானது:

"என் தேவனே, எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் நேசிக்கிறேன். சேசுகிறீஸ்துநாதரின் திரு இரத்தத்தின் வழியாக, என் எல்லாப் பாவங்களுக்கும் நான் மன்னிப்புப் பெறுவேன் என்று நம்புகிறேன். என் பாவங்களைக் கொண்டு அளவற்ற நன்மைத் தனமாகிய உம்மை மனநோகச் செய்து வேதனைப்படுத்தினேன் என்பதால், என் முழு இருதயத்தோடு அவற்றிற்காக மனஸ்தாபப் படுகிறேன். எல்லாத் தீமைகளுக்கும் மேலாக அவற்றை அருவருக்கிறேன். பாவங்களின் மீதான என் அருவருப்பை, ஜெத்சமெனித் தோட்டத்தில் பாவங்களைப் பற்றி சேசுநாதர் கொண்டிருந்த அருவருப்போடு ஒன்றுசேர்க்கிறேன். உமது வரப்பிரசாதத்தைக் கொண்டு, இனி ஒருபோதும் உம்மை நோகச் செய்வதில்லை என்று பிரதிக்கினை செய்கிறேன்.''

உண்மையுள்ள மனதோடு இந்தச் செயல்களைச் செய்ய நீ விரும்பும்போதெல்லாம், சமாதானத்தோடு, எந்த பயமோ, மனவுறுத்தலோ இன்றி, பாவ மன்னிப்பைப் பெறச் செல். பாவங்களின் மீதான துக்கத்தைப் பற்றிய கவலையை அகற்றுவதற்கு அர்ச். தெரேசம்மாள் மற்றொரு அற்புதமான வழியைக் காட்டுகிறாள்: ""நீ பாவசங்கீர்த்தனத்தில் சொல்லும் பாவங்களை இனி ஒருபோதும் செய்வதில்லை என்ற உறுதியான பிரதிக்கினை உன்னிடம் உள்ளதா என்று பார். அது உன்னிடம் இருந்தால், மெய்யான மனஸ்தாபமும் உன்னிடம் உள்ளது என்பதில் சந்தேகம் கொள்ளாதே.''