மறுப்பவர்களின் நன்றியற்றதனம்!

72. நித்திய ஞானமானவரின் ஏக்கமுள்ள ஆசையாலும், நம்மைத் தேடிக் கண்டடையும் ஆவலாலும், அவர் நமக்குத் தரும் நட்பின் சாட்சியங்களாலும் நாம் நெகிழ்ச்சியடையவில்லை என்றால், நாம் எவ்வளவு நன்றியற்றவர்களாகவும், உணர்வற்றவர்களாகவும் இருப்போம்!

அவர் சொல்வதைக் கேட்காமல் அவரை அசட்டை செய்கிறோம் என்றால், அவரை நேசிப்பதற்குப் பதிலாக, அவரை நிந்தித்து, நோகச் செய்வோம் என்றால் நாம் எவ்வளவு கொடிய வர்களாக இருப்போம், உலகிலும் கூட எந்தத் தண்டனைக்குத் தான் நாம் தகுதியற்றவர்களாக இருப்போம்! ''ஞானத்தை அடையத் தேடாதவர்கள் நன்மைகளைப் பற்றிய அறியாமையில் விழுந்தது மாத்திரமல்ல, மாறாக, இன்னமும் தாங்கள் கட்டிக் கொண்ட பாவங்களை மறைக்கக் கூடாத விதமாய்த் தங்கள் புத்தியீனத்தின் அடையாளங்களை மனிதர்களுக்குத் தந்திருக் கிறார்கள்" என்று பரிசுத்த ஆவியானவர் கூறுகிறார் (ஞான. 10: 8).

தங்கள் வாழ்நாளில் ஞானத்தை அடையத் தேடாதவர்கள் ஒரு மும்மடங்கு துர்ப்பாக்கியத்தை அனுபவிக்கிறார்கள். அவர்கள் (அ) அறியாமையிலும், குருட்டுத்தனத்திலும், (ஆ) மூடத்தனத்திலும், (இ) பாவத்திலும், துர்மாதிரிகையிலும் விழுகிறார்கள்.

ஆனால் மரண வாசலில் இவர்கள் இருக்கும் போது, தாங்கள் விரும்பாவிட்டாலும், ஞானமானவர், "நான் கூப்பிட்டேன். நீங்கள் கேட்க மாட்டோமென மறுத்தீர்கள்" (பழ. 1:24) என்று தங்களைக் கடிந்து கொள்வதை அவர்கள் கேட்பார்கள். நாள் முழுவதும் உன்னை நோக்கி என் கரங்களை நீட்டினேன். நீயோ என்னை அலட்சியம் செய்தாய். உன் வாசலில் அமர்ந்து, நான் உனக்காகக் காத்திருந்தேன், ஆனால் நீயோ என்னிடம் வரவில்லை. இப்போது உன்னை ஏளனம் செய்வது என் முறை (பழ 1:26). இப்போது நீ அழுவதைக் காண எனக்குக் காதுகள் இல்லை, உன் கண்ணீரைக் காண எனக்குக் கண்கள் இல்லை, உன் கேவுதல்களால் நெகிழ்த்தப்பட ஓர் இருதயமோ, அல்லது உனக்கு உதவகரங்களோ என்னிடம் இல்லை.''

நரகத்தில் அவர்களது நிர்ப்பாக்கியம் எவ்வளவு பெரிதாக இருக்கும்! நரகத்திலுள்ள மூடர்களின் நிர்ப்பாக்கியங்களையும், அழுகைப் புலம்பல்களையும், வருத்தங்களையும், அவநம்பிக்கை யையும் பற்றி பரிசுத்த ஆவியானவர்தாமே என்ன சொல்கிறார் என்று வாசியுங்கள். "நம் கெட்ட தன்மையினாலேயே நாம் நிர்மூலமானோம் என்று பாவிகள் நரகத்திலே சொல்லிக் கொள்வார்கள்" (ஞான . 5:14). அவர்கள் இப்போது புத்தியோடு பேசுகிறார்கள். ஆனால் இப்போது தாமதமாகி விட்டது. அவர்கள் ஏற்கனவே நரகத்தில் இருக்கிறார்கள். மிகத் தாமதமாக தங்கள் மூடத்தனத்தையும், சர்வேசுரனுடைய நித்திய ஞானமான வரைப் புறக்கணித்ததில் தாங்களே வருவித்துக் கொண்ட நிர்ப்பாக்கியத்தையும் அவர்கள் உணர்கிறார்கள்.


முடிவு 

73. எல்லாவற்றிற்கும் மேலாக, தேவ ஞானமானவரை நாம் தேடு வோம், அவருக்காக ஏங்குவோம். " ஞானம் ஆஸ்திகள் அனைத் திலும் அதிக விலையுள்ளது; ஆசிக்கத் தக்கவை எல்லாம் அதற்கு இணையிடக் கூடியவையல்ல" (பழ. 3:15). மீண்டும், "ஆசிக்கத் தக்கது எதுவும் ஞானத்திற்கு இணையாகக் கூடியதல்ல" (பழ. 8: 11). நீ கடவுளின் கொடைகளை ஆசிக்கலாம், பரலோகத் திரவியங்களையும் ஆசிக்கலாம், ஆனால், ஞானமானவரை நீ ஆசிக்கவில்லை என்றால், மிகவும் குறைந்த மதிப்புள்ள ஒன்றைத்தான் நீ எப்போதும் ஆசைப்படுகிறாய்.

ஞானம் என்பது உண்மையில் என்னவாக இருக்கிறது என்பதை மட்டும் நாம் உணர்ந்து கொள்வோம் என்றால், அதாவது. அது மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் அளவற்ற பொக்கிஷமாக இருக்கிறது என்பதை நாம் உணர்வோம் என்றால், -- அவரைப் பற்றி நான் இது வரை சொன்னதெல்லாம் ஒன்றுமே யில்லை என்று நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் -- இரவும், பகலும் நாம் அவருக்காக ஏங்கிக் கொண்டே இருப்போம். பூமியின் எல்லைகளுக்கு நம்மால் முடிந்த வரை வேகமாகப் பறந்து கொண்டிருப்போம், தேவைப்பட்டால், இந்த அளவற்ற திரவியத்தை நம் சொந்தமாக்கிக் கொள்ளும்படி நெருப்பையும், வாளையும் சந்தோஷ உற்சாகத்தோடு நாம் தாங்கிக் கொள்வோம்.

ஆனாலும், ஒரு தவறான ஞானத்தைத் தேர்ந்து கொள்ளாத படி, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஞானங்கள் உள்ளன.