இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உலக வாழ்வு அநித்தியம்.

உலகத்திலே மனிதனுடைய வாழ்வெல்லாம் சொத்து, சுகம், பெருமதிப்பு என்கிற இந்த மூன்றிலே அடங்கும். இவையெல்லாம் நிலையில்லாத படியினாலே நிச்சயமாய் அநுபவிக்கப் போகிறது வீண் என்று சொல்லப் படும். சொத்தும், நிலபுலனும் இருக்கிற இருப்பைப் பார். உனக்கு உள்ள நிலம், முன்னே யார் கையிலே இருந்தது? அவனுக்கு எங்கே இருந்து வந்தது? எத்தனை பேர் அதை முன் அனுபவித்தார்கள்? அவர்களை விட்டுப் பிரிந்து இப்போது உன் கையிலே இருக்கின்றது. மறுபடி உன்னை விட்டுப் பிரிந்து, எத்தனை பேர் கைக்குப் போய்ச் சேர இருக்கின்றதோ, அதற்கு நிலை ஏது?

நீ கையாளுகிற பணமோ, கொஞ்ச நேரத்திலே வேறொருவன் கையேறி, தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கிலுள்ள பல்வேறு தேசங்களும், பல துறைமுகங்களும் சுற்றித் திரியும். ஆற்றில் ஓடுகிற தண்ணீர் இப்போது இங்கே இருக்கிறது போல் இருந்து, கண் சிமிட்டி விழிக்கும் முன்னே காணாமல் போகிறது போலே யாம். அப்படிப்பட்ட பொருளின்மேலே ஆசை வைக்கிறவன், அந்த ஆசை என்கிற கொளுவி அவன் ஆத்துமத்திலே சொருகி, தூண்டிலை விழுங்கிய மீன் இரையோடு கரையில் இழுபட்டு, விழுங்கின இரையையும், சீவனையும் இழந்து போகிறது போல், சகலமும் கெட்டுப் போக சேதப்படுவான்.

செல்வந்தன் ஒருவன் நில புலன்களிலும், காசு பணத்திலேயும், ஆள் அடிமையிலேயும் மிகுந்தவனா யிருந்து, ஒரு நாள் தன் ஆத்துமத்தைப் பார்த்து, என் ஆத்துமமே, உனக்கு எவ்வகையிலும் குறைவில்லை, வேண்டிய சுக செல்வ பாக்கியமிருக்கின்றது, நன்றாய் சுகித்து அநுபவித்துக் கொள் என்று சொல்ல, உடனே ஆகாயத்திலே நின்று ஒரு சத்தம் கேட்கப்பட்டது. புத்தி இல்லாதவனே! இந்நேரத்திலேயே உன் ஆத்துமம் பிரிந்து போகும். நீ தேடினதெல்லாம் யாருக்கு? என்று கேட்கப் பட்ட உடனே அவன் மரணம் அடைந்தான். அவன் நினைத்த நினைப்பு வீணாய்ப் போனது.

பின்னும் ஒரு செல்வந்தன் பொருளின் பேரிலே வெகு பற்றுதலாய், மற்றவர்களுக்கு ஒன்றும் கொடாமலிருந்ததும் தவிர தனக்கு வேண்டியதை உண்ணவும், உடுக்கவும் கூட உலோபித்தனமாயிருந்து மிகுந்த செல்வமும், பொருட்களும் சம்பாதித்து வைத்தான். சாகிற வேளையில் அவஸ்தையாய்க் கிடக்கிறபோது கண் திறந்திருக்க, வாய் அடைத்துப் போனது. ஒருவன் வந்து பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு போனான். ஒருவன் வந்து பொன் ஆபரணப் பெட்டியை எடுத்துக் கொண்டு போனான். வேறொருவன் வந்து அவன் உடுப்புப் பெட்டிகளை எடுத்துக் கொண்டு போனான். சில பேர் வந்து அவன் பண்டம், பொருட்களைக் கொண்டு போனார்கள். இதெல்லாம் அவன் பார்த்திருக்கக் கொண்டு போனாலும், வாய் பேசவும், கைகால் அசைக்கவும் மாட்டாத கோபத்தினாலே மிக வெகுண்டு, நாக்கைக் கடித்துக் கொண்டு செத்துப் போனான். இவன் தேடினதெல்லாம் எங்கே நிலைநின்றது? உடமை கூட ஆத்துமமும் சரீரமும் கெட்டுப் போனது.

பெருமையுள்ள வாழ்வு என்கிறது என்ன? நாலுபேர் நல்லதென்று சொன்னால் வெகுமான மாயிருக்கும். ஆகாதென்றால் அவமானமாம். இப்படிப்பட்ட சங்கை அவனவன் வாயில் பிறக்கிற காற்றேயல்லாமல், நிலைநிற்கிறது அல்ல. நாடகம், வாசகப்பா படிக்கிறவர்கள் ஒருவன் அரசன் என்றும், சிலர் மந்திரிகள் என்றும், சிலர் சேவகர் என்றும் வேஷம் போட்டு, ஆடிப்பாடி அதிகாரம் செலுத்தின பிறகு, அந்தக் கோலம் முடிந்தால், அவர்களுடைய அதிகாரம் யாரிடத்திலாவது செல்லுமோ? அரசர்களுக்குத் தானே வந்த விபரீதத்தைப் பார்.

அந்திரானிக்கஸ் என்கிற அரசன் பூலோகத்திலே அநேக நாடுகளை ஆண்டு வருகையில், எதிரி கையில் அகப்பட்டு, இரண்டு தூணுக்கு நடுவே தலைகீழாய்த் தூக்கப்பட்டான். வித்தெலுயுஸ் என்கிற அரசனைப் பின் கட்டு முறையாய்க் கட்டி மகா அவமானமாக வீதிவீதியாய் இழுத்துக் கொண்டு திரிந்த பின்பு, நிஷ்டூரமாய்க் கொலை செய்தார்கள். சிசிலி என்கிற இராச்சியத்தை ஆண்ட தியோனிசியுஸ் என்ற இராஜா, அந்த இராச்சியத்திலே நின்று தள்ளுண்டு போய், சிறு பிள்ளைகளுக்கு எழுதப் படிப்பித்துக் கொண்டிருந்தான். பொலிசாரியுஸ் என்கிற தளபதி அநேக இராச்சியங்களைப் பிடித்து அடக்கின பின்பு, இரண்டு கண்ணும் இழந்து, பிச்சையெடுத்துக் கொண்டு திரிந்தான். இதுவே நிலையில்லாத வாழ்வினுடைய தன்மை.

செல்வந்தன் என்றும் மேல் சாதி, கீழ் சாதி என்றும் பாராட்டினவர்கள் எல்லோரும், மண்ணின் கீழே மடிந்து மங்குகிறதையும், மண்ணும் எலும்புமாய்க் காலால் மிதிபடுகிறதையும் காண்கிறோம். சரீரத்தினுடைய அழகு செளந்தரியங்களைப் பார். ஒரு குஷ்டரோகம், பெருவியாதி முதலான வியாதிகள் வந்தால் அவலட்சண உருவமாக்கி, அருவருப்பு உண்டாக்கும். சரீரத்தினுடைய துப்புரவைப் பார். (கண்ணால் பீளை, வாயால் கோழை, நாசியால் சளி, காதால் குரும்பி, சரீரத்தால் வேர்வை, மலசலம்) முதலான அசுத்த நாற்றம் அல்லாமல் வேறொன்றும் இல்லை. ஒரு நாளைக்கு அந்தச் சரீரத்தைக் கழுவிக் குளித்து, முழுகாவிட்டால், மனிதர் அதன் கிட்டப் போக விரும்பமாட்டார்கள்.

இப்படிப்பட்ட சரீரத்தை அலங்கரிக்கவும், சுகந்தம் வீசவும் செய்கிற வகையைப் பார். பொன், வெள்ளி, மின்னலுள்ள மண், மாணிக்கம் என்பது மின்னலுள்ள கல், முத்து என்பது சிப்பிக் கடலின் அசுத்தம், பட்டு, பூச்சி புழுக்களுடைய நுரை. இப்படியே அம்பர், கஸ்தூரி, புனுகு, சவ்வாது முதலான பொருட்கள் எல்லாம், அசுத்தமான பொருட்களோழிய மற்றபடியல்ல. ஞானக் கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறவன் இது ஒரு வாழ்வு என்று காண்கிறான். ஆனால் ஞானக் கண் திறந்திருக் கிறவனுக்கு இது ஒன்றும் இல்லாமையாயிருக்கும். புத்தியில்லாத மனுஷர் நிலையில்லாத வாழ்வைப் பெரிய காரியம் என்று நினைத்து, சாவு, நோவு, துன்பம், இக்கட்டு என்று பாராமல், வெகு பிரயாசைப்பட்டுத் தண்டிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட மனுஷருடைய புத்தியீனத்தைக் காண்பிக்கிறதற்கு ஒரு புத்திமான் சொன்ன உவமையைக் கேள்.

ஒரு மனுஷன் காட்டு வழியாய் வருகிறபோது, தன்னை ஒரு யானை துரத்தி வருகிறதைக் கண்டு ஒரு மரத்தின் மேல் ஏறினான். தன் கால் வைத்திருக்கிற கிளையைப் புழுக்கள் அரிக்கிறதைக் கண்டு மறுகிளையில் ஏறினான். அங்கே ஒரு பாம்பு படம் எடுத்து ஆடுகிறதைக் கண்டு மற்றுமொரு கிளையிலே ஏறினான். அங்கே தேன்கூடு கட்டியிருக்கின்றது. ஈக்கள் வந்து அவனைக் கடிக்கத் தலைப்பட்டன. கீழே இறங்கி ஓடலாமென்று பார்த்தால், தன்னைத் துரத்தி வந்த யானை அந்த மரத்தை அசைத்து அசைத்துக் கீழே விழத்தாட்டப் பார்க்கிறதைக் கண்டான். இப்படியிருக்கிற நேரத்திலே தேன்கூட்டில் இருந்து ஒரு துளித் தேன் வாய்க்கு நேராய் வந்து விழுந்தது இனிப்பா யிருக்கிறதைக் கண்டு, தன் உயிருக்கு வந்த விக்கினங்களையும், ஆபத்துக்களையும் பாராமல், அந்தத் தேன் சிந்தி விழுகிறதின் மேலே கவனமாயிருந்து உயிர் சேதப்பட்டுப் போனான்.

அந்தப் பைத்தியக்காரனை விட நீ கடை கெட்ட பைத்தியமான காரியத்தைச் செய்து கொள்ளுகிறாய். அந்த உவமை உன்பேரிலேதானே இருக்கின்றது. யானையாவது உன்னைத் தொடர்ந்து வருகிற சாவு , நீ ஏறின் மரம் உன்னுடைய ஆயுசு. மூன்று கிளையாவது வாதம், பித்தம், உஷ்ணம். மரத்தை யானை அசைத்துக் கீழே விழத்தாட்டுகிறதாவது மரணம் அடுத்து வருவது. இந்த ஆபத்துக்கள் ஒன்றையும் நினையாமலும், பாவச் சாவு, நரகச் சாவு என்கிற கொடூரங்களை முதலாய்ப் பாராமலும், ஒரு துளித் தேன் போல் இருக்கிற உலக சிற்றின்ப சுகத்தை அனுபவிக்கிறதிலே அக்கறையாய் இருக்கிறாய். ஐயையோ பாவீ, இப்படிப்பட்ட புத்தியீனம் உண்டோ?

சர்வேசுரன் கொடுத்த ஞானமும், புத்தியும் பாவப் புகையால் மறைந்து, இரண்டு கண்ணும் கெட்டவனாய் நரகக் குழியில் விழப் போகிறாய். கண்ணைத் திறந்து பார்த்து, பாவ மயக்கத்தை விட்டு, இன்று வரைக்கும் செய்த பாவங்களுக்காக துயரப்பட்டுப் பிரார்த்தித்துக் கொள்ளுவாயாக.