தியானம் நன்றாய்ச் செய்ய ஏதுவான புத்திகள்.

ஞானத்தியான முயற்சிகள் இன்னதென்றும், தியானஞ் செய்பவர்கள் தியான காலத்தில் அநுசரிக்க வேண்டிய ஒழுங்குகள் இவையென்றும், இதில் விவரித்துக் காட்டுவோம். இவைகளைத் தியான நாட்களில் பலமுறை வாசிப்பது வெகு பிரயோசனமாயிருக்கும்.

1. ஞானத்தியான முயற்சிகள் என்றால், ஒவ்வொருவனும் தன் ஞாபக சக்தி, புத்தி, மனசு ஆகிய தத்துவங்களைத் தூண்ட முயலும் படி பிரயோகித்து, தன் ஆத்துமத்தைச் சோதித்தல், யோசனை செய்தல், மனசாலும் வாயாலும் ஜெபித்தல் ஆகிய இவ்விதமான ஞான செயல் களைச் செய்வதாம். இவைகளைச் செய்வதிலிருக்கும் உட்கருத்து ஏதெனில், ஒவ்வொருவனும் தன்னிடத்தில் உள்ள ஒழுங்கற்ற பற்றுதல், உணர்ச்சி, ஆசை இவைகளை எல்லாம் நீக்கி, தன் வாழ்வின் அந்தஸ் தின் மட்டில் சர்வேசுரனுடைய சித்தம் இன்னதென்று அறிந்து அதன் பிரகாரம் நடக்கத் துணியும்படி தீர்மானம் செய்வதாம்.

2. தியான காலத்தில் ஒவ்வொருவனும் தானே தன் சுய புத்தி யையும் மனதையும் தூண்டி முயற்சி செய்ய வேண்டுமென்பதால், தியானப் பிரசங்கம் செய்பவரே எல்லாம் செய்ய, நீயோ யாதோர் முயற்சியுமின்றி முழு மந்தமாயிருந்தால், தியானம் உனக்குப் பயனுள் வதாயிராது. நீ பசியாயிருக்கும்போது உன் பசி தீர நீ சாப்பிட்டால், உன் களைப்பு தீர்ந்து பலம் உனக்கு வருமேயன்றி, இன்னொருவன் பசியோடு சாப்பிட்டால் அதனால் உனக்குப் பலன் வருமோ? வியாதியாயிருக்கிறவன், மருந்து கசப்பாயிருந்தாலும், தானே அதை சாப்பிட வேண்டுமே அன்றி, அவனுக்காக வைத்தியன் அதைச் சாப்பிட்டால் வியாதியஸ்தனுக்கு செளக்கியம் வராது.

மேலும் நீ கேட்ட சத்தியத்தின் பேரில், தனியே இருக்கும் நேரத்தில் யோசித்து அதிலுள்ள உண்மையை நன்கு கண்டுபிடித்து, உன் மனதில் நன்கு உணரும்படி நீ ஜாக்கிரதையாய்க் கடுமையாய் முயல வேண்டும்.

பசுமாடு இரை தின்ற பின் ஓரிடத்தில் அமர்ந்து படுத்திருந்து, தின்ற இரையைத் திரும்பவும் மென்று அசை போட்டு அது ஜீரணமாகச் செய்யும். அப்படியே நீயும், தியானம் கேட்டபின், கேட்டதை உன் நினைவில் வரச் செய்து அதன் பேரில் பொறுமை யாய் யோசித்தால் அதன் பலனை அடைவாய்.

3. ஞானத் தியான முயற்சியானது முக்கியமாய் அவனவன் புத்தியையும் மனசையும் சார்ந்தது. புத்தியானது, தியானப் பொருளை நன்றாயும் திருத்தமாயும் தெளிவாயும் கண்டுபிடிக்கத் தேடும். மனசானது, இவ்விதம் புத்தியினால் தேடி அறிந்த அறிவுக்கு ஏற்றதும் இசைந்ததுமான பற்றுதல், உணர்ச்சிகளாகிற பயம், துக்கம், சிநேகம், நன்றியறிதல், நம்பிக்கை, விசுவாசம் முதலியவைகளைப் பிறப்பிக்கும். இவ்வித உணர்ச்சிகள் உன் மனசில் பிறந்து, சர்வேசுரனோடு நீ ஜெபத்தால் பேசி பிரார்த்திக்கும் போது, தேவ மகத்துவ சந்நிதிக்குக் காட்ட வேண்டிய உள் வணக்கமும் வெளி வணக்கமும் குறைவின்றி காட்டுவது உன் கடமை. ஆதலால் நீ தியானத்தில் ஜெபம் செய்து சர்வேசுரனோடு பேசும்போது முழங்காலிலிருந்து ஜெபிப்பது நல்லது.

4. அர்ச். இஞ்ஞாசியார் தமது தியான முயற்சிகளை நான்கு வாரங்களாக வகுத்து, ஒவ்வொரு வாரத்துக்கும் ஒரு விசேஷ கருத்தை அதின் முக்கிய பிரயோசனமாக குறித்திருக்கிறார். முதல் வாரத்தின் தியான முயற்சிகளால், ஒவ்வொருவனும் தன் ஆத்துமத்தைப் பாவங்களிலிருந்து நல்ல பாவசங்கீர்த்தனத்தால் சுத்தம் செய்வதும், இரண்டாம் வாரத் தியான முயற்சிகளால், சேசுநாதருடைய வாழ்வின் தர்ம ஒழுக்கத்தை ஓர் மேல் வரிச் சட்டம் போல் தன் கண்முன் வைத்து, தான் எந்த அந்தஸ்தில், எவ்விதம் , சேசுநாதரைப் போல் வாழ்ந்து நடப்பது தேவ சித்தம் என்று அறியத் தேடுவதும், மூன்றாம் வாரத் தியான முயற்சிகளால், சேசுநாதருடைய பாடுகளை யோசித்து தான் செய்த நல்ல தீர்மானங்களில் தன்னை திடப்படுத்துவதும், நான்காம் வாரத்தில், உயிர்த்த சேசுநாதர் சுவாமியின் ஆனந்த சந்தோஷத்தை யோசித்து, அவரை அதிகம் அதிகமாய் சிநேகித்து, அவர் காட்டின பாதையில் பிரமாணிக்கமாய்க் கடைசிவரை நடக்க தீர்மானம் செய்வதும் ஆகிய இவைகளே ஞான தியான முயற்சி களின் நான்கு வாரங்களுக்குமுள்ள உன்னத கருத்து. இவை மனிதருடைய இரட்சணியத்துக்கும், உத்தம ஞான ஒழுக்கத்துக்கும் மிக உதவியானவையென்று சொல்லவும் வேண்டுமோ?

5. தியானம் செய்கிறவன், துவக்கத்திலேயே சர்வேசுரனிடம் வெகு தாராளமான மனதோடு வந்து, தன் மன சுதந்திரம், ஆசை, விருப்பம் எல்லாவற்றையும் தன் ஆண்டவர் வசம் ஒப்புவித்து அவர் தமது அளவற்ற ஞான சித்தப்படி தன்னையும் தன்னைச் சேர்ந்த யாவற்றையும் நடத்தும்படி சம்மதிப்பானாகில், அவனுக்கு ஞானத் தியான முயற்சிகள் யாவும் எளிதாகவும், மனசுக்கு இசைந்ததாகவும் தோன்றும். சர்வேசுரனும் தாராளமாய் தமது உதவியைக் கொடுப் பார். தேவ உதவி பூரணமாய் உண்டாகும்.

6. தியான நாட்களில் சில சமயம் ஆறுதலின்றி சலிப்பும் மனச்சோர்வும் வருத்தமும் உண்டாகி, இருதயம் யாதோர் உணர்ச்சி யின்றி வறண்ட பூமிபோல் தோன்றுமானால், நீ மனதில் கலங்க வேண்டாம். அந்த சமயத்தில் நீ தியானத்தின் பல முயற்சிகளை எப்படி செய்து வருகிறாயென்று கவனமாய்ச் சோதித்துப் பார். குறித்த நேரத்தில் அந்தந்த ஞானச் செயல்களை, குறித்த விதத்தில், பிரமாணிக்கத்தோடு செய்கிறாயோ அல்லவோ என்று ஆராய்ந்து பார். ஏதேனும் அசமந்தமும் குறையும் இருப்பதாக நீ கண்டால், அதற்காக மனதில் துக்கப்பட்டு, அதைத் திருத்தி உன் நம்பிக்கை யாவும் சர்வேசுரன் மேல் வைத்து, சந்தோஷமாய்த் தொடர்ந்து நன்றாய்ச் செய். தைரியமிழந்து மனம் கலங்காதே.

7. தியானஞ் செய்கிறவன் அந்தந்த நாளிலே தனக்கு விவரிக்கப்படும் பொருளைப் பற்றி கவனிக்க வேண்டுமேயன்றி, இனி வரப்போகிற தியானத்தின் பொருள் ஏதென்ற்றிய கவலைப்படா திருப்பது நலம். அன்றியும், அந்தந்த தியான முயற்சிக்குக் குறித்த நேரம் முழுவதையும் குறைக்காமல் அதிலே செலவழிக்க வேண்டும். குறித்த நேரத்தைக் குறைக்கும்படி பசாசின் சோதனை உனக்கு வரும்போது, சோதனையை ஜெயிப்பதற்காக, நேரத்தைக் குறைப்பதற்குப் பதில் கொஞ்சம் நீட்டி கூட்டினால் பசாசு தோல்வியடைந்து வெட்கி ஓடும்.

8. தியானம் செய்கிறவன் தன் ஆத்தும் குருவிடம் தன் ஆத்துமத்தின் நிலையையும், தான் தியான முயற்சிகளைச் செய்யும் வகையையும், தனக்குண்டாகும் மன ஆறுதல் அல்லது மன வறட்சி, சிலிப்பு முதலிய கூறுபாடுகளையும் திறந்து காட்டி, அவருடைய ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்ல புத்தி.

9. தியான முயற்சிகளின் பலனைப் பூரணமாய் அடையும்படி ஆசையாயிருக்கிறவர்கள் தியான காலத்தில் தங்கள் வீடு, ஜனம், வேலை, அலுவல் முதலிய உலக சம்பந்தமான சகல கவலையையும் நீக்கி வைத்து, தனிவாசமாய் ஏகாந்தத்திலிருந்து, என் ஆத்துமமும் சர்வேசுரனும்தான் என்று சொல்லும்படியாய் இருப்பது மகா அவசியம். மனதில் உலக சம்பந்தமான கவலையும் விசாரமும் இல்லாவிட்டால், தன்னையும் சர்வேசுரனையும் பற்றி யோசிக்க புத்தியும் மனசும் தாராளமாய் தடையின்றிச் செல்லும்.

10. தியானப் பிரசங்கம் செய்பவர்க்கும் அதைக் கேட்பவர்களுக்கும் சமாதான ஒற்றுமை உண்டாகி எல்லாம் சீராயும் ஒருமனமாயும் நடக்கும்படியாய், தியானம் கொடுப்பவர் கிறிஸ்தவர் களின் ஆத்தும இரட்சணியத்தையே எண்ணிப் பிரசங்கம் செய் வதால், அவர் சொல்லிலும் வசன நடையிலும் குறையிருந்தாலும் அல்லது ஞாபகக் குறைவாய்ப் பேசினாலும், எவனும் அதில் குற்றம் பிடிக்காமலும் அல்லது அவர் தன்னைச் சுட்டிப் பேசுகிறாரென்று விபரீதமாய் எண்ணாமலும், கபடற்ற மனசோடு கேட்பது தியானம் செய்கிறவர்களுக்கு அழகு.